ரூ.80 லட்சத்தில் மின்சார பஸ், டிரக்குகளை அறிமுகப்படுத்தியது ஜேஎஸ்டபிள்யூ!
டாடா, மஹிந்திரா போல இந்தியாவின் மிகப்பெரிய வாகன குழுமமாக மாற வேண்டும் என்ற நோக்கில் வாகனத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளை செய்து வருகிறது ஜேஎஸ்டபிள்யூ. கார் மார்க்கெட்டில் தீவிரம் காட்டி வரும் அந்நிறுவனம் AMPSTAR என்ற பிராண்டில் மின்சார பஸ், டிரக்குகளையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரூ.80 லட்சம் விலையில் இந்த புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
AMPSTAR பிராண்டின் கீழ் நகர்ப்புற பயன்பாடு, நீண்ட தூரப் பயணம், பள்ளி மற்றும் நிறுவன ஊழியர்களுக்கான போக்குவரத்து என பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற வகையில் விதவிதமான மின்சார பேருந்துகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த பேருந்து வரிசையில் 7 மீட்டர் முதல் 18 மீட்டர் வரையிலான மாடல்கள் இடம்பெறும். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 150 கிலோவாட் முதல் 500 கிலோவாட் வரையிலான பேட்டரிகளும் இடம்பெற உள்ளன.

டிரக் பிரிவில் முதற்கட்டமாக 55 டன் எடையை கையாளக்கூடிய மின்சார டிராக்டர்-டிரெய்லர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின்சார டிப்பர் லாரிகள், நிலையான சரக்கு அமைப்பைக் கொண்ட டிரக்குகள் மற்றும் டம்பர்கள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்த ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எஃகு, சிமெண்ட், சுரங்கம் மற்றும் துறைமுகம் போன்ற தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஏற்ர மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஆரிக் பகுதியில் அமைக்கப்படும் புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த ஆலையில் ஆண்டுக்கு 15,000 மின்சார பேருந்துகள் மற்றும் டிரக்குகளை தயாரிக்கும் திறன் இருக்கும். தேவையைப் பொறுத்து எதிர்காலத்தில் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்கவும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்த மின்சார கனரக வாகனங்கள் தயாரிப்புக்காக ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ரூ.2,500 கோடியை முதலீடு செய்துள்ளது. ஆலையில் பேருந்துகளுக்கான உடல்கூடு தயாரிப்பு, தானியங்கி முறையில் டிரக் கேபின் தயாரிப்பு மற்றும் பேட்டரி தொடர்பான ஒருங்கிணைந்த வசதிகள் இடம்பெறும். மின்சார வாகனங்களுக்கான மென்பொருள், கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மின்சார இயக்கத் தொழில்நுட்பத்தின் முக்கிய பகுதிகளை இந்த நிறுவனமே சொந்தமாக உருவாக்கியுள்ளது.
வெறும் வாகனங்களை மட்டும் விற்பனை செய்வது என்ற அணுகுமுறையை AMPSTAR பின்பற்றவில்லை. சார்ஜிங் கட்டமைப்பு, ஃபைனான்ஸ் வசதி, இயக்குதல் தொடர்பான தீர்வுகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் ஒரே தொகுப்பாக வழங்க ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக வாகனத்தை வாங்குவதுடன், குத்தகை மற்றும் பேட்டரி சேவை அடிப்படையிலான பயன்பாட்டு திட்டங்களையும் பெற முடியும்.
மின்சார வர்த்தக வாகனங்களின் ஆரம்ப விலை அதிகமாக இருப்பது பல நிறுவனங்களுக்கு முக்கிய சவாலாக உள்ளது. இதை சமாளிக்க, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனது சொந்த குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் தேவையையும் ஆரம்ப சந்தையாக பயன்படுத்த உள்ளது. JSW ஸ்டீல், JSW சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனப் பயன்பாட்டில் மின்சார டிரக்குகள் மற்றும் பேருந்துகளை இயக்கி, நடைமுறை அனுபவத்தைப் பெறவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆம்ஸ்டார் பேருந்துகளில் பேட்டரிக்கான இரட்டை குளிரூட்டும் அமைப்பும், வலுவான ஒருங்கிணைந்த உடல்கூடு அமைப்பும் இடம்பெறும் என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெப்பநிலை, சாலை நிலை மற்றும் வணிகப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. பேருந்துகளில் உள்நாட்டு பாகங்களின் அளவு ஏற்கனவே கணிசமாக இருப்பதாகவும், டிரக்குகளிலும் அதை படிப்படியாக அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்டார் கனரக மின்சார வாகனங்களின் சராசரி விலை ரூ.80 லட்சம் இருக்கும் என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 15,000 வாகனங்கள் தயாரிக்கும் திறனை முழுமையாக எட்டினால், ரூ.12,000 கோடி வரையிலான வருவாய் வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
இந்தியாவில் கனரக வர்த்தக வாகனங்களின் மின்சார வாகன பயன்பாடு இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஆனால் அதிக எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு மற்றும் நிறுவனங்களின் கார்பன் குறைப்பு இலக்குகள் காரணமாக மின்சார டிரக்குகளுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், மின்சார வாகன விற்பனை மட்டுமின்றி சார்ஜிங், நிதி மற்றும் இயக்குதல் ஆகியவற்றையும் இணைத்து ஜேஎஸ்டபிள்யூ ஆம்ப்ஸ்டார் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


