550 கிமீ ரேஞ்ச்.. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவி எஸ்யூவி... சீனாவின் செர்ரி களமிறக்குகிறது!
சீனாவை சேர்ந்த செர்ரி பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்களை இந்தியாவில் புதிய பிராண்டில் விற்பனை செய்ய ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, செர்ரி பிராண்டில் விற்பனையில் உள்ள ஐகார் வி23 என்ற எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இதுதான் இந்தியாவின் முதல் ஆஃப்ரோடு மின்சார எஸ்யூவி மாடலாக இருக்கும்.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவி ஏற்கனவே இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்திய சாலைநிலைகளில் இந்த கார் எப்படி செயல்படுகிறது என்பதை சோதனை செய்து ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு இந்த புதிய எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த மாடலானது புதிய பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
புதிய ஐகார் வி23 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் டிசைன் பார்த்தவுடனே கம்பீரமான தோற்றத்துடன் கவர்கிறது. பாக்ஸி எனப்படும் செவ்வக வடிவமமைப்பில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டுகள், உயரமான பானட், அகலமான வீல் ஆர்ச்சுகள், தடிமனான கிளாடிங் சட்டங்களுடன் மிரட்டலாக இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவியானது மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா போன்ற ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், இந்த எஸ்யூவி முழுக்க முழுக்க மின்சார கார்களுக்கான பிரத்யேக கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலானது வெளிநாடுகளில் 4,220மிமீ நீளமும், 2,730மிமீ வீல்பேஸும் கொண்டது. வெளிப்புறத்தில் அடக்கமாக தெரிந்தாலும் உட்புறத்தில் போதுமான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம்.

இந்த புதிய எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவியில் இடம்பெற்றுள்ள பேட்டரி, மின் மோட்டார் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த கார் சோதனை நிலை அறிக்கைகளின்படி ஒருமுறை சார்ஜ் செய்தால் 550கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என செர்ரி தெரிவிக்கிறது. ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்த புதிய மாடலை தனது சொந்த பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கலாம். மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா மாடல்களுக்கு போட்டியாக இருந்தாலும் இது மின்சார எஸ்யூவி மாடலாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
