JSW காம்பேட் எஸ்யூவியின் முதல் இந்திய தரிசனம்: டிச.4ல் அறிமுகமாகிறது
சிமென்ட், ஸ்டீல் உற்பத்தித் துறையில் ஜாம்பவான் நிறுவனமாக உள்ள JSW குழுமம் விரைவில் கார் உற்பத்தித் துறையிலும் இறங்க உள்ளது. ஏற்கனவே எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தற்போது சொந்த பிராண்டில் கார்களை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், சீனாவை சேர்ந்த செரி குழுமத்துடன் கூட்டணி அமைத்து அந்த நிறுவனத்தின் கார்களை தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்ய உள்ளது.
இதன் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள பிரீமியம் எஸ்யூவி தற்போது விளம்பரப் படப்பிடிப்பின்போது கேமராவில் சிக்கியுள்ளது. இதுவரை மறைக்கப்பட்ட நிலையில் சாலைப் பரிசோதனைகளில் தென்பட்ட இந்த புதிய எஸ்யூவியின் தோற்றம் தற்போது முழுமையாக வெளியாகியுள்ளது. டாமன் பகுதியில் நடைபெற்ற விளம்பரப் படப்பிடிப்பின்போது எந்தவித மறைப்பும் இல்லாமல் இந்த கார் கேமராவில் சிக்கி இருக்கிறது.

JSW மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த முதல் காருக்கு காம்பேட் (Combat) என்று பெயரிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையாகும் செரி ஜெட்டூர் டி2 (Jetour T2) எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள இந்த வாகனத்தை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களுடன் நிறுவனம் கொண்டுவருகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் படங்களைப் பார்க்கும்போது, ஜேடூர் டி2 காரின் அடிப்படை வடிவமைப்பை காம்பேட் பெரும்பாலும் அப்படியே பெற்றுள்ளது. குறிப்பாக, சதுரமான தோற்றம், உயரமான முன்பகுதி, நேராக அமைந்துள்ள பின்புற வடிவம் ஆகியவை இந்த காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. வழக்கமான நகர்ப்புற எஸ்யூவிகளைவிட வித்தியாசமான வடிவமைப்பு இதில் இடம்பெற்றுள்ளது.
முன்பக்கத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ரேடியேட்டர் கிரில்லில் ஜெட்டூர் என்ற பெயருக்குப் பதிலாக காம்பாட் என்ற பெயர் பெரிய எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய மாடலுக்கான தனி அடையாளத்தை JSW கொடுக்க உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் வலிமையான தோற்றமுடைய பம்பர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
முன்பக்க பம்பரில் சிறிய அளவிலான வடிவமைப்பு மாற்றங்களையும் பார்க்க முடிகிறது. இதில் பனி விளக்குகள் மற்றும் கூடுதல் விளக்குகள் இடம்பெறுவதற்கான அமைப்புகள் உள்ளன. மேலும், பெரிய அளவிலான 20 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பெரிய சைஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் படங்கள் மூலமாக தெரிய வருகிறது.
பக்கவாட்டுப் பகுதியில் தட்டையான மேற்கூரை அமைப்பு, நேரான பின்புற அமைப்பு மற்றும் வலிமையான தோற்றமுடைய சக்கர வளைவுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்புறக் கதவில் கூடுதல் டயர் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள படங்களில் அந்த அமைப்பை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த காரின் உட்புறப் புகைப்படங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஜேடூர் டி2 காரில் உள்ள வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய மாடலிலும் பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெரிய தொடுதிரை மற்றும் டிஜிட்டல் கருவிப் பலகை ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
எதிர்பார்க்கப்படும் வசதிகளில் 15.6 இன்ச் தொடுதிரை, 10.25 இன்ச் டிஜிட்டல் கருவிப் பலகை, சுற்றுப்புற விளக்குகள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி ஆகியவை அடங்கும். மேலும், முன்பக்க இருக்கைகளுக்கு குளிரூட்டும் வசதி, தானியங்கி குளிர்சாதன அமைப்பு மற்றும் காற்று சுத்திகரிப்பான் ஆகியவையும் இடம்பெறலாம்.
ஓட்டுனருக்கு மின்சார முறையில் ஆறு நிலைகளில் இருக்கையை மாற்றும் வசதியும், முன்பக்க பயணிக்கு நான்கு நிலைகளில் மாற்றும் வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவக வசதி, பெரிய கண்ணாடி மேற்கூரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்ற அம்சங்களும் இடம்பெறலாம். இவை அனைத்தும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சம் அதன் பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பமாக குறிப்பிடலாம். இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 18.4 kWh பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார்கள் இணைக்கப்பட உள்ளன. இவற்றின் ஒருங்கிணைந்த திறன் 360 எச்பி மற்றும் 610 என்எம் டார்க் ஆகும்.
இந்த பவர்டிரெயின் 3 ஸ்பீடு டெடிகேட்டட் ஹைபிரிட் டிரான்ஸ்மிஷனுடன் (DHT) இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரங்களுக்கு மட்டும் சக்தியை வழங்கும் முன்சக்கர இயக்க அமைப்பு இதில் இடம்பெறுகிறது. பெட்ரோல் மற்றும் மின்சார சக்தியை ஒருங்கிணைத்து செயல்படும் இந்த தொழில்நுட்பம், செயல்திறனுக்கும் நீண்ட தூரப் பயணத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சார்ஜ் செய்த நிலையில் பேட்டரி மூலம் மட்டும் 90 கி.மீ பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் மின்சார சக்தியைப் பயன்படுத்தும்போது ஒட்டுமொத்தமாக 1,100 கி.மீ வரையிலான பயண தூரம் கிடைக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏசி மற்றும் டிசி சார்ஜிங் வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட உள்ளன.
JSW மோட்டார்ஸ் தனது முதல் தயாரிப்பான காம்பேட் எஸ்யூவியை வரும் டிசம்பர் 4ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் விலை, வேரியண்ட்டுகள், முழுமையான வசதிகள் மற்றும் விற்பனை தொடர்பான விவரங்கள் அறிமுக நிகழ்ச்சியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே பல பிரபல நிறுவனங்கள் ஹைபிரிட் எஸ்யூவி பிரிவில் போட்டியிட்டு வரும் நிலையில், JSW தனது முதல் காரிலேயே பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான வடிவமைப்பு, அதிக செயல்திறன் மற்றும் நீண்ட பயண தூரம் ஆகியவற்றுடன் களமிறங்கும் காம்பேட், இந்திய வாடிக்கையாளர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications


