7இல் இருந்து 8 பேர் வரையில் போனாலும் கொஞ்சமும் சிரமம் இருக்காது! சாலையில் மிதக்கும் மினி கப்பல்!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் விலையுயர்ந்த சொகுசு காரான எம்9 (M9)-இன் விலையை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்டாக அதிகரித்துள்ளது. அதுவும் 1 லட்சம், 2 லட்சம் கிடையாது... சுமார் ரூ.5 லட்சம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரிட்டிஷ் கார் நிறுவனமாக தோன்றி, பின்னர் சீனாவின் SAIC-இன் கட்டுப்பாட்டிற்குள் கீழ் வந்து, தற்சமயம் இந்தியாவில் ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் (JSW Group) உடன் இணைந்து செயல்படும் எம்ஜி மோட்டார் இந்தியாவில் இரு விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்கிறது. அவற்றுள் ஒன்றான சைபர்ஸ்டர் (Cyberster) எம்ஜியின் ஸ்போர்ட்ஸ் காராக விளங்குகிறது.

மற்றொரு காரான எம்ஜி எம்9, அளவில் பிரம்மாண்டமாக, அதிக பயணிகள் உடன் சொகுசாக பயணிக்கக் கூடியதாக உள்ளது. அதற்கு இணையாக, எம்9 காரின் விலையும் அதிகமாகும். ரூ.69.90 லட்சத்தில் கடந்த 2025 ஜூலை மாதத்தில் எம்9 அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு துவக்கத்தில் எம்9 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.70.90 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் எம்9 காரின் விலையை ரூ.5 லட்சம் எம்ஜி மோட்டார் அதிகரித்துள்ளது. இதனால், இந்த பிரம்மாண்டமான எம்ஜி சொகுசு காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.75.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, விலையில் இந்தியாவின் விலையுயர்ந்த எம்ஜி காராகவும், இந்தியாவின் முதல் அதிவேகமான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராகவும் விளங்கும் சைபர்ஸ்டரை எம்9 நெருங்கியுள்ளது.

எம்ஜி சைபர்ஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.77.49 லட்சமாக உள்ளது. இந்தியாவில் எம்ஜி எம்9 கார் 'பிரெசிடென்ஷியல் லிமோ' (Presidential Limo) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த காருக்கு விற்பனையில் கியாவின் கார்னிவல் (Carnival) போட்டியாக உள்ளது. ரூ.5 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளதால், எம்9 காருக்கும், கியா கார்னிவலுக்கும் இடையேயான விலை வேறுபாடு ஆனது ரூ.16 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆனால், எம்ஜி எம்9 ஆனது ஓர் எலெக்ட்ரிக் கார் மற்றும் கியா கார்னிவல் ஆனது டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் சொகுசு கார் ஆகும். எம்9 காரில் 90kWh திறன் கொண்ட நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் (NMC) பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. எம்9 காரில் இந்த பேட்டரி பேக் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 241.65 பிஎச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
இந்த சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 548கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். இந்த காரின் பேட்டரியை 30% முதல் 80% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆகும். இந்த காரினுள் டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இதனுடன், பனோராமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சப்-வூஃபர் & ஆம்ப்ளிஃபையர் உடன் 13-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 64 வண்ணங்களில் கேபின் விளக்குகள், 16 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய பிரெசிடென்ஷியல் இருக்கைகள், ஹீட்டிங் & வெண்டிலேஷன் வசதிகள் உடன் 8 மசாஜ் செட்டிங்ஸ் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடத்திற்கு உள்ளாகவே இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்றாலும், எம்ஜி எம்9 காரை வாங்கும் செல்வந்தர்களுக்கு இந்த விலை அதிகரிப்புகள் எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. இருப்பினும், அறிமுகம் செய்யப்பட்ட 9 மாதங்களில் காரின் விலை சுமார் ரூ.6 லட்சம் அதிகரிக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை தருகிறது.


Click it and Unblock the Notifications








