டாடா நெக்ஸானுக்கு போட்டியா விற்கப்பட்டாலும் எல்லாரும் வாங்கும் எலக்ட்ரிக் கார்! உச்சப்பட்ச வளர்ச்சியில் எம்ஜி!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 66% அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கும் எம்ஜி பிராண்டின் வளர்ச்சிக்கு தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் நாடு முழுவதும் விரிவடையாத போதிலும் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு எம்ஜி பிராண்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் எம்ஜி விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்கு பிறகு நிறைய பேர் எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

BaaS என்கிற பேட்டரியை வாடகைக்கு பெறும் வசதியுடன் விண்ட்சர் இவி அறிமுகம் செய்யப்பட்டதால், பலரை இந்த எம்ஜி எலெக்ட்ரிக் கார் குறைவான விலையில் ஈர்த்துள்ளது. இதன் மூலமாக கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 66% என்கிற இமாலய வளர்ச்சியை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து நடந்து முடிந்த 2026 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் சுமார் 62 ஆயிரத்து 591 எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி விற்பனை செய்துள்ளது. அதுவே, 2024-25இல் இதே ஒரு வருட காலத்தில் 37 ஆயிரத்து 730 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போதே, எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் எம்ஜி பிராண்ட் 66% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறுகிறோம். கடந்த 2026 மார்ச் என்கிற ஒரு மாதத்தில் மட்டும் 6 ஆயிரத்து 528 கார்கள் எம்ஜி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் 19% அதிகமாகும்.
இந்த 6,528 கார்களில் எம்ஜியின் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி பெட்ரோல்/டீசல் என்ஜின் கார்கள் என அனைத்தும் அடங்குகின்றன. இருப்பினும், எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பே அதிகமாகும். எந்த அளவிற்கு என்றால், இந்த 6,528 கார்களில் 5 ஆயிரத்து 141 எம்ஜி எலெக்ட்ரிக் கார்கள் அடங்குகின்றன. அதாவது, பெட்ரோல்/டீசல் கார்களை காட்டிலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களே எம்ஜி பிராண்டில் இருந்து தற்சமயம் அதிகம் விற்பனையாகுகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல், எம்ஜி எலெக்ட்ரிக் கார்களின் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு முக்கியமானதாக விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 4 ஆயிரத்து 530 விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் 20% அதிகமாகும். இதன் மூலமாக, தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி விளங்குகிறது. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், விண்ட்சர் இவி-க்கு 70% கஸ்டமர்கள் மெட்ரோ-அல்லாத நகரங்களில் இருந்து கிடைக்கிறார்களாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல்/டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் விற்பனை செய்வதில் இருந்து இந்திய சந்தையில் தனக்கான பாதையை எம்ஜி அடையாளம் கண்டுவிட்டதாகவே கருதுகிறோம். இதற்கு சான்றாகவே கடந்த ஒரு வருடத்தில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 66% என்கிற இமாலய மைல்கல்லை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications








