ஒரே வருடத்தில் எல்லாரும் தேடும் கார் கம்பெனியாக மாறிய எம்ஜி! 10 லட்ச ரூபாய் எலெக்ட்ரிக் கார் தான் காரணம்!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் விற்பனையில் 19% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது, கடந்த 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 19% கூடுதல் எண்ணிக்கைகளில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் (Hector) கார் மூலமாக தனது செயல்பாடுகளை துவங்கியது. அதன்பின் பல்வேறு கார் மாடல்கள் எம்ஜி பிராண்டில் இருந்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும் எதுவும் பெரியதாக சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், முதல் எம்ஜி காராக அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் கூட ஒரு கட்டத்திற்கு மேல் விற்பனை சரிவை சந்திக்க ஆரம்பித்தது.

அந்த நேரத்தில்தான், இந்தியாவின் பிரபலமான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் கூட்டணி சேர்ந்தது எம்ஜி மோட்டார் நிறுவனம். ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி இடையேயான இந்த கூட்டணி எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இல் கவனம் செலுத்த ஆரம்பித்தது. அது, பலனும் அளிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, BaaS திட்டத்துடன் விண்ட்சர் இவி அறிமுகம் செய்யப்பட்டது எம்ஜி நிறுவனத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டுக்கே திருப்புமுனையாக அமைந்தது.
எம்ஜி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் விண்ட்சர் இவி (Windsor EV) தான் தற்போதைக்கு இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளின் எதிரொலியாகவே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனையில் 19% என்கிற அபரிதமான வளர்ச்சியை எம்ஜி பதிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 6 ஆயிரத்து 528 கார்களை இந்திய சந்தையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில், எம்ஜியின் பெட்ரோல், டீசல் கார்களுடன் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. விற்பனையில் இவ்வாறு தொடர்ந்து முன்னேற்றத்தை கண்டுவருவதற்கு மத்தியில், வேறு வழியில்லாமல் தனது கார்களின் விலைகளையும் எம்ஜி அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த விலை அதிகரிப்பின்படி எம்ஜி கார்களின் விலைகள் 2% அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிகரித்துவரும் கார் உற்பத்தி பாகங்களை உருவாக்குவதற்கான செலவுகளினாலும், போக்குவரத்து செலவுகளினாலும் இந்த விலை உயர்வை கொண்டுவருவதாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு குறித்த தகவலை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். இருப்பினும், எம்ஜி செலெக்ட் (MG SELECT) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த எம்ஜி கார்களான சைபர்ஸ்டர் (Cyberster) மற்றும் எம்9 (M9) உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்த்தப்படாது என கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களின் விலைகளும் 7% வரையில் அதிகரிக்கப்பட உள்ளதாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில வருடங்களில் கார்கள் விற்பனையில் எம்ஜி மோட்டார் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதற்கு கடந்த 2026 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை தான் சாட்சியாகும். ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்ததே எம்ஜியின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றால் அது மிகையில்லை. வரும் மாதங்களிலும் எம்ஜியின் இந்த வளர்ச்சி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








