6000 பேருக்கு வேலை கொடுத்து வாழ்வளிக்கும் சாமி சார் இந்த கார் கம்பெனி! அவங்களோட மன நிம்மதி தான் இதுக்கு காரணம்
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், கார்கள் விற்பனையில் மெல்ல மெல்ல சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கும், சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே எப்போது கூட்டணி ஏற்பட்டதோ அப்போதில் இருந்தே புதிய அத்தியாயம் துவங்கியதுபோல், வாடிக்கையாளர்களை அதிக எண்ணிக்கையில் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த விற்பனையில் 24% என்கிற சிறப்பான ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 4,957 கார்களை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் என இரு பிரிவுகளிலும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு தேவை சீரான நிலையில் இருப்பது இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். விற்பனையில் மட்டுமின்றி, கடந்த பிப்ரவரி மாதம் எம்ஜிக்கு முக்கியமான மாதம் ஆகும்.
கடந்த மாதத்தில், இந்த நிறுவனம் தனது புதிய D+ எஸ்யூவி (SUV) ரக கார் மாடலான எம்ஜி மெஜஸ்டரை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவிலேயே முதல் D+ எஸ்யூவி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மெஜஸ்டர், தனது பிரிவில் மிக நீளமான, அகலமான மற்றும் உயரமான எஸ்யூவி கார் ஆகத் திகழ்கிறது.

குறிப்பிடத்தக்க அம்சங்களாக, மெஜஸ்டர் எஸ்யூவி காரில் பிரிவிலேயே முதல்முறையாக முன், பின் மற்றும் நடுப்பகுதிகளில் டிரிபிள் டிஃபரன்ஷியல் லாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 10 ஆஃப்-ரோட் மோடுகளுடன் கூடிய மேம்பட்ட 4-வீல்-டிரைவ் (4WD) சிஸ்டம் மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளைச் சமாளிக்க 'க்ரால் கண்ட்ரோல் மோட்' (Crawl Control Mode) ஆகிய வசதிகளும் இதில் அடங்கும்.
எம்ஜியின் 'முற்றிலும் மன நிம்மதி' (Complete Peace Of Mind) திட்டத்தின் ஒரு பகுதியாக, மெஜஸ்டர் காருக்கு 5 வருட வரம்பற்ற கிமீ உத்தரவாதம், 5 வருடங்களுக்கு பயணத்தின்போது தேவைப்படும் சாலையோர உதவி மற்றும் 5 இலவச சேவை வசதிகள் அளிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் ரூ.41,000 முன்பணம் செலுத்தி, இந்த சக்திவாய்ந்த மற்றும் பிரீமியம் எஸ்யூவி காரை முன்பதிவு செய்யலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் SAIC மோட்டார் இணைந்து 2023ஆம் ஆண்டில் இந்த கூட்டு நிறுவனத்தை உருவாக்கின. குஜராத்தின் ஹலோல் பகுதியில் அமைந்துள்ள இந்த கூட்டணி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களாகும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 6,000 வேலை வாய்ப்புகளை இதன் மூலமாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் ஏற்படுத்தி வழங்கியுள்ளது.
இதனை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவும் இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, வரும் ஆண்டுகளில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளதால் அதற்கேற்ப கார்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2019ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ உடனான கூட்டணிக்கு பிறகு ஒரு நிலையான இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு சரியான சாட்சியே கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை ஆகும். 24% என்பது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு பிப்ரவரியை விட இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை 4இல் 1 பங்கு கூடுதலாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








