மாசம் மாசம் விற்பனை அதிகமாகிட்டே வருது.. இந்தியன் கம்பெனி கூட கூட்டு சேர்ந்த அப்புறம் MG-இன் ரேஞ்சே மாறிடுச்சு
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் கடந்த 2026 ஜனவரியில் 4,843 கார்களை விற்று, 2025ஆம் ஆண்டின் ஜனவரியை காட்டிலும் 9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொகுசு கார்கள் விற்பனை பிரிவான எம்ஜி செலக்ட் (MG SELECT) மற்றும் அதன் முக்கிய கார் மாடல்களான எம்ஜி ஹெக்டர் (Hector), வின்ட்சர் இவி (Windsor EV) ஆகியவை இந்த வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளன.
இந்தியாவின் பிரபலமான ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஆதரவுடைய எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு 2026ஆம் ஆண்டின் தொடக்கம் சாதகமாக அமைந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டிலேயே இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிட்ட எம்ஜி மோட்டார், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் டாப்-3 இவி பிராண்டுகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி வின்ட்சர் இவி தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இது மலிவு விலையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், சிறந்த மதிப்பையும் வழங்குகிறது. அதேநேரம், ஹெக்டர், அஸ்டர் (Astor) கார்கள் மூலமாக பாரம்பரிய பெட்ரோல்/ டீசல் கார்கள் பிரிவிலும் எம்ஜி தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், புதிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எம்ஜி நிறுவனத்தின் பிரீமியம் பிரிவான எம்ஜி செலக்ட், சைபர்ஸ்டர் மற்றும் எம்9 (M9) போன்ற மாடல்கள் மூலம் ஒட்டுமொத்த விற்பனைக்கு ஆதரவு அளித்துள்ளது. சைபர்ஸ்டர் மாடல், புதிய 'ஐரிஸ் சியான்' (Iris Cyan) கலர் ஆப்ஷன் உடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதுடன், எம்ஜி நிறுவனத்தின் மிக வேகமான காராகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் எம்ஜி மோட்டார் தனது சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, D+ செக்மென்ட்டில் புதிய மற்றும் பெரிய பெட்ரோல்/ டீசல் எஸ்யூவியான எம்ஜி மெஜஸ்டர் (Majestor) காரை அறிமுகப்படுத்தத் தயாராகிறது. இந்த கார் பிப்ரவரி 12 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி க்ளோஸ்டர் காரை விடவும் அதிக விலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைரான் போன்ற கார் மாடல்களுக்கு மெஜஸ்டர் போட்டியாக இருக்கும். எம்ஜி மேக்ஸஸ் டி90 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் மெஜெஸ்டர் ஆனது 2,950 மிமீ வீல்பேஸ் மற்றும் 5,046 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும்.

2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் உடன் இந்த காரின் ஒற்றை-டர்போ என்ஜின் சிஸ்டம் அதிகப்பட்சமாக 158.7 பிஎச்பி ஆற்றலையும், 373.5 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக இருக்கும். அதே சமயம் இரட்டை-டர்போ யூனிட் ஆனது அதிகப்பட்சமாக 212.5 பிஎச்பி ஆற்றலையும், 478.5 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இவற்றுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது பின்-சக்கர-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி அஸ்டர் எஸ்யூவி, இசட்.எஸ் இவி (ZS EV) மற்றும் கோமெட் இவி (Comet EV) உள்ளிட்ட பிற எம்ஜி கார் மாடல்களும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனைக்கு தொடர்ந்து பங்களிக்கின்றன. இதற்கிடையில், ஜேஎஸ்டபிள்யூ குழு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதுடன், இந்த 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது சொந்த பிராண்ட் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









