ஜூலை 16ல் இந்தியாவில் வெளியாகிறது புதிய 'ஹெக்டர் ஹாக்' ஹைபிரிட் எஸ்யூவி
வரும் ஜூலை 16ம் தேதியன்று இந்தியாவில் புதிய எஸ்யூவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது JSW எம்ஜி மோட்டார் நிறுவனம். தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாப் 3 இடங்களில் இருந்து வரும் எம்ஜி மோட்டார், அடுத்த வாரம் புதிய பிளக்-இன் ஹைபிரிட் காரை வெளியிடவிருக்கிறது. வெளிநாடுகளில் ஸ்டார்லைட் 560 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்தக் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் கடந்த பல மாதங்களாகவே வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இந்தப் புதிய பிளக்-இன் ஹைபிரிட் காரை என்ன பெயரில் எம்ஜி மோட்டார் வெளியிடலாம் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி இந்தப் புதிய ஹைபிரிட் எஸ்யூவியை ஹெக்டர் ஹாக் (Hector Hawk) என்ற பெயரில் அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஸ்டார்லைட் 560 (ஹெக்டர் ஹாக்) எஸ்யூவியானது ஹைபிரிட் வடிவில் மட்டும் எலெக்ட்ரிக் வடிவிலும் இந்தியாவில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த எலெக்ட்ரிக் காருக்கும் ஹெக்டர் ஹாக் EV என்ற பெயரையே எம்ஜி மோட்டார் நிறுவனம் பயன்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் கார் திட்டம் இருக்கிறது என்றாலும், அடுத்த வாரம் ஹைபிரிட் எஸ்யூவி மட்டுமே இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
மாஸ் மார்க்கெட் பிரிவில் இதுவரை எந்த நிறுவனமும் பிளக்-இன் ஹைபிரிட் காரை வெளியிடவில்லை. வால்வோ, மெர்சிடீரஸ் உள்ளிட்ட சில சொகுசு நிறுவனங்கள் மட்டுமே பிளக்-இன் ஹைபிரிட் வகை கார்களை இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கின்றன. மாஸ் மார்க்கெட் பிரிவில் முதல் முறையாக அந்த வகையான காரை வெளியிடவிருக்கிறது எம்ஜி மோட்டார்.

எம்ஜி மோட்டாரின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. காரணம், இந்தியாவில் மற்ற எந்த நிறுவனங்களும் வெளியிடத் துணியாத காமெட் EV, விண்ட்ஸர் EV என வினோதமான கார்களையே இந்தியாவில் எம்ஜி மோட்டார் வெளியிட்டு வெற்றி கண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக விண்ட்ஸர் EV-யே தற்போது இருந்து வருகிறது.
அதனை வைத்துப் பார்க்கும் போது புதிய பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவியை இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் எம்ஜி மோட்டார் வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விலை சற்று அதிகமாக இருக்கும் என்றாலும், வாடிக்கையாளர்கள் முழுவதுமாக ஒதுக்கும் அளவிற்கு அதிக விலையைக் கொண்டிருக்காது என்றே எதிர்பார்கப்படுகிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனரை விட 50 மிமீ குறைவாக 4,745 மிமீ நீளம் மற்றும் அதற்கு இணையாக 1,850 மிமீ அகலத்தைக் கொண்ட பெரிய எஸ்யூவியாகவே புதிய ஹெக்டர் ஹாக் ஹைபிரிட் இருக்கும். உயரம் மட்டுமே ஃபார்ச்சூனரை விட சற்று குறைவாக இருக்கும். அனைத்து விதமான ப்ரீமியமான அம்சங்களையும் கொண்டு, 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு வடிவிலும் இந்த எஸ்யூவியை எம்ஜி மோட்டார் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய எஸ்யூவி, பிளக்-இன் ஹைபிரிட் வகை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும் போது 30 லட்சம் ரூபாய் அல்லது அதனை ஒட்டிய விலையில் இந்தப் புதிய ஹெக்டர் ஹாக் ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் எம்ஜி மோட்டார் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் ஜூலை 16ம் தேதியன்று இந்தப் புதிய எஸ்யூவியின் அறிமுகம் மட்டுமே இருக்கும், வெளியீடு அடுத்த சில வாரங்களுக்குப் பிறகே இருக்கும் எனத் தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியாவின் புதிதாக வெளியிடும் சொரென்டோ ஹைபிரிட் எஸ்யூவிக்குப் போட்டியாக இந்த எம்ஜி ஹெக்டர் ஹாக்கை நாம் கூறலாம். எனினும் பிளக்-இன் ஹைபிரிட் கார் என்பதால் நேரடிப் போட்டியாக வைக்க முடியாது. சர்வதேச அளவில் வெற்றி பெற்றிருக்கும் இந்த எஸ்யூவி இந்தியாவில் சோபிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications