கார் ஷோரூம்ல வேலை செய்யறவங்களுக்கே பிளக்-இன் ஹைப்ரிட்னா என்னனு தெரியாது! புது விஷயத்தை அறிமுகம் செய்யும் எம்ஜி
இந்திய சந்தையில் நடப்பு 2026-27ம் நிதியாண்டு முடிவடைவதற்குள் 2 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மற்றும் 1 பிளக்-இன் ஹைப்ரிட் காரை (Plug-in Hybrid Car) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதாவது இந்த 3 புதிய கார்களும் வரும் 2027ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.
இந்திய சந்தையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் காரை கூட அந்நிறுவனம் விற்பனை செய்யவில்லை. எனவே இந்திய சந்தையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது.

அனேகமாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் வுல்லிங் ஸ்டார்லைட் 560 (Wuling Starlight 560) ஏராளமான அம்சங்களை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான முதல் பிளக்-இன் ஹைப்ரிட் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம். வழக்கமான ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை போல் அல்லாமல், இந்த பிளக்-இன் ஹைப்ரிட் கார் பெட்ரோல் இன்ஜின் மற்றும் பெரிய பேட்டரியை கொண்டிருக்கும்.
ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களிலும் ஐசி இன்ஜின் உடன் பேட்டரியும் இருக்கும்தான். ஆனால் அந்த பேட்டரி சிறியதாக இருக்கும். அந்த பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய முடியாது. ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற அம்சங்கள் மூலம் அது சுயமாகவே சார்ஜ் ஆகி கொள்ளும்.

ஆனால் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களில் ஐசி இன்ஜின் உடன் பெரிய பேட்டரி இருக்கும். ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை போல் இந்த பேட்டரி சுயமாக சார்ஜ் ஆகி கொள்ளாது. அவற்றை எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை போல் தனியாக சார்ஜ் செய்ய வேண்டும். ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களுக்கு இடையேயான வித்தியாசம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 20.5 kWh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரிய பேட்டரி என்பதால், இதன் மூலமாக மட்டும், 100 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய முடியும்.
அதாவது 'எலெக்ட்ரிக் மோட்' மூலமாக மட்டும் 100 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே பெட்ரோல் இன்ஜின் மூலமாகவும் பயணம் செய்ய முடியும். எனவே தொலை தூர பயணங்களின்போது சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றிய கவலை இல்லாமல் பயணம் செய்யலாம். ப்யூர் எலெக்ட்ரிக் கார்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றிய பிரச்சனை இன்றளவும் ஒரு குறையாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஒரு சமயத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தயங்கின. ஆனால் இங்கு முறையான ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் ஒரு சில நிறுவனங்களில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஒன்றாகும். பெரிதாக எலெக்ட்ரிக் கார்கள் எதுவும் இல்லாத சமயத்தில், எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் களமிறக்கியது.
அதேபோல் இந்தியாவில் தற்போது பிளக்-இன் ஹைப்ரிட் கார்கள் பெரிதாக விற்பனைக்கு கிடைப்பதில்லை. தற்போதுதான் அந்த ரக கார்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. எனவே பிளக்-இன் ஹைப்ரிட் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் விஷயத்திலும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் முன்னோடியாக திகழ போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications