டாடா, மஹிந்திராவிற்கு தலைவலியாக மாறிய சிமெண்ட் நிறுவனம்! இப்படி ஒரு காரை இந்தியா இதுவரைக்கும் பாத்தது இல்ல!
இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் கூடிய விரைவில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) ஆகும். எம்ஜி மெஜஸ்டர் கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம், எம்ஜி மெஜஸ்டர் கார், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எம்ஜி மெஜஸ்டர் காரின் வருகை, இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக மற்றொரு கார் ஒன்றையும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி (Plug-in Hybrid SUV) ரகத்தை சேர்ந்த காராக இருக்கும் என கூறப்படுகிறது.
அனேகமாக வரும் அக்டோபர் மாதமே, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்த பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், இந்தியாவில் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வரவுள்ள முதல் மாஸ் மார்க்கெட் எஸ்யூவி ரக கார் இதுவாகதான் இருக்கும்.

இந்திய சந்தையில் மாஸ் மார்க்கெட் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் எதுவும், தற்போது வரை பிளக்-இன் ஹைப்ரிட் செக்மெண்ட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. எனவே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முடிவு, மிகவும் துணிச்சலான ஒன்றாக கருதப்படுகிறது.
சரி, அது என்ன பிளக்-இன் ஹைப்ரிட்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்தியாவில் ஏராளமான ஹைப்ரிட் எஸ்யூவி ரக கார்கள் விற்பனையில் உள்ளன. எனவே ஹைப்ரிட் தொழில்நுட்பம் எப்படி இயங்கும்? என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பிளக்-இன் ஹைப்ரிட் என்பது நம்மில் பலரும் கேள்விப்படாத ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
வழக்கமான ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆகிய 2 கார்களிலும் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள்தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களில் கூடுதலாக அளவில் மிகவும் பெரிய பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேவைப்பட்டால் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களை பேட்டரி மூலமாக மட்டும் இயக்கி கொள்ளவும் முடியும்.
அதுவும் பெரிய பேட்டரி என்பதால், மிக நீண்ட தூரத்திற்கு கூட, மின்சார ஆற்றல் மூலமாக மட்டும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களை இயக்கலாம். சரி, விஷயத்திற்கு வருவோம். ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ரக கார், 7 சீட்டர் ரகத்தை சேர்ந்ததாக இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) போன்ற கார்கள் உடன் இது போட்டியிடும். சர்வதேச சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள வுல்லிங் ஸ்டார்லைட் 560 (Wuling Starlight 560) காரின் அடிப்படையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ரக கார் உருவாக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது பெரிய எஸ்யூவி ரக காராக இருக்கும். அனேகமாக இதன் நீளம் 4.7 மீட்டருக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 20.5 kWh பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான எலெக்ட்ரிக் மோட் மூலமாக மட்டும் இந்த கார் 100 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்யும் என கூறப்படுகிறது.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த காரின் முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஒருவேளை முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதில் 56.7 kWh பேட்டரி வழங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் வெர்ஷன், இந்திய சந்தையில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும். இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் (India's First Internet Car) என்ற பெருமை எம்ஜி ஹெக்டர் (MG Hector) காருக்கு உண்டு. இதை இங்கே ஏன் கூறுகிறோம் என்றால், இது போல் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த பெருமை எம்ஜி மோட்டார் நிறுவனத்தைதான் சேரும்.
இந்த வரிசையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் மாஸ் மார்க்கெட் எஸ்யூவி செக்மெண்ட்டிற்கு கொண்டு வரவுள்ள பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்த பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மட்டுமல்லாது, டாடா சஃபாரி (Tata Safari) போன்ற கார்களுக்கும் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் தற்போது கூட்டணியில் இருந்து வரும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம், சிமெண்ட் மற்றும் பெயிண்ட் போன்ற பல்வேறு தொழில்களிலும் முன்னணியில் இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது மட்டுமல்லாது, ஸ்டீல், ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற தொழில்களிலும் இந்தியாவை சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








