எம்ஜி எலெக்ட்ரிக் கார்களின் விலை குறையுமா? PLI திட்டத்தில் புதிய வாய்ப்பு
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் (PLI) அந்நிறுவனத்தின் நிலுவையில் உள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் MG EV கார்களின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் சீனாவைச் சேர்ந்த செயிக் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் என்ற பெயரில் கூட்டணி நிறுவனத்தை அமைத்து இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, செயிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இங்கிலாந்து பிராண்டான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், சீன முதலீடு தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, அந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கு சலுகை பெறுவதற்கான PLI விண்ணப்பம் இதுவரை முழுமையாக பரிசீலிக்கப்படாமல் இருந்தது. தற்போது தேவையான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) அனுமதிகள் கிடைத்தால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசு பரிசீலிக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசின் PLI திட்டம் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் இதில் பயன் பெறுகின்றன. ரூ.25,938 கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படும் இத்திட்டத்தில் நிறுவனங்கள் குறிப்பிட்ட முதலீடு, கூடுதல் விற்பனை மற்றும் உள்நாட்டு மதிப்பு கூட்டல் இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின் முக்கியத்துவம் எம்ஜி மோட்டார்ஸுக்கு மிகவும் அதிகமா உள்ளது. PLI திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை கிடைத்தால், இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கும், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெறுவதற்கும் நிறுவனத்துக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கலாம். இதன் மூலம் இறக்குமதி சார்ந்த செலவுகளை கட்டுப்படுத்தி, உற்பத்தி செலவைக் குறைக்கும் வாய்ப்பு உருவாகும். இருப்பினும், இதன் முழு பலன் நேரடியாக வாடிக்கையாளருக்கு சென்றுவிடும் என்று கூற முடியாது.
இதில் எம்ஜி மோட்டார் மேற்கொண்டு வரும் உள்நாட்டு உற்பத்தி திட்டங்களும் முக்கியமானது. குறிப்பாக விண்ட்ஸர் உள்ளிட்ட மின்சார வாகனங்களில் உள்ளூர் உதிரிபாகங்களின் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விண்ட்ஸர் மற்றும் ஹெக்டர் தோமஹாக் மாடல்களில் வரும் 2027ம் ஆண்டுக்குள் இறுதிக்குள் 70 சதவீத உள்நாட்டு பாகங்கள் பயன்பாட்டை இலக்காகக் கொண்டுள்ளதாக நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர்மயமாக்கல் அதிகரிப்பதால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர வேண்டிய உதிரிபாகங்களின் எண்ணிக்கையும் அதற்கான செலவும் குறையக்கூடும். குறிப்பாக பேட்டரி தொடர்பான முக்கிய பாகங்கள், மின்னணு உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றில் இந்தியாவில் தயாரிப்பு அதிகரித்தால், நீண்ட கால அடிப்படையில் வாகனத்தின் மொத்த உற்பத்திச் செலவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவே எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விலை குறைவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் PLI நன்மை கிடைத்த உடனேயே எம்ஜி கார்கள் விலை குறையும் என்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஊக்கத்தொகையின் ஒரு பகுதி உற்பத்தி விரிவாக்கம், புதிய தொழில்நுட்பம், உள்ளூர்மயமாக்கல் மற்றும் நிறுவனத்தின் முதலீட்டு செலவுகளுக்கும் பயன்படுத்தப்படலாம். எனவே எதிர்காலத்தில் விலை குறையவும் அல்லது கூடுதல் வசதிகள் வழங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும்.
எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மிகச் சிறப்பான வளர்ச்சியில் உள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் அந்நிறுவனம் 62,591 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய 2024-25 நிதி ஆண்டில் 37,730 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், 66 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தது. குறிப்பாக விண்ட்ஸர் எலெக்ட்ரிக் கார் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டும் விண்ட்ஸர் காருக்கான வரவேற்பு தொடர்ந்து வலுவாக உள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டு காலகட்டத்தில் மட்டும் 19,000க்கும் மேற்பட்ட விண்ட்ஸர் கார்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ட்ஸர் மின்சார கார் 75,000 யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை கடந்துள்ளதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், சமீபத்திய மாத விற்பனையில் சிறிய ஏற்ற இறக்கமும் காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 4,602 யூனிட்டுகளாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 5,619 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விற்பனை 18 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும், எம்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன வரிசையை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில் ஹெக்டர் தோமஹாக் எலெக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விண்ட்ஸர் மற்றும் ஹெக்டர் டோமஹாக் ஆகிய மாடல்களில் உள்நாட்டு உதிரிபாக பயன்பாட்டை 70 சதவீதம் வரை அதிகரிக்க எம்ஜி நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. 2027 இறுதிக்குள் இந்த இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரி செல்கள் உள்ளிட்ட சில முக்கிய பாகங்களைத் தவிர பெரும்பாலான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெறுவதற்கு முயற்சிகளை எடுத்து வருகிறது.
எனவே, PLI திட்டத்தில் எம்ஜி நிறுவனத்தின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பலன்கள் கிடைக்கும் பட்சத்தில் உற்பத்தி மற்றும் உள்ளூர்மயமாக்கல் செலவுகளில் சாதகமான மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்மூலமாக, உற்பத்தி செலவுகளில் கட்டுப்பட்டால், எதிர்காலத்தில் எம்ஜி மின்சார கார்களின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications


