போட்டியாளர்களை 'குஜிலி மஸ்து' செய்ய வரும் மிரட்டலான புதிய எஸ்யூவி... அறிமுகப்படுத்தும் பணிகள் விறுவிறு!
இந்த ஆண்டு இந்திய கார் சந்தையில் தடம் பதிக்கத் தயாராக உள்ள JSW Motors நிறுவனம், தனது புதிய பிராண்டு கார்களுக்காக நான்கு புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களைத் திறக்க உள்ளது. இந்த பிராண்ட் ஹைப்ரிட் ஆற்றல் கொண்ட புதிய SUV ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இவை பெரும்பாலும் Jetour பிராண்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்திய கார் சந்தையானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் அதிகளவில் பசுமை இயக்கத்தை நோக்கி மாறி வருகின்றனர். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, பல புதிய நிறுவனங்கள் மின்மயமாக்கப்பட்ட தயாரிப்புகளுடன் இந்திய சந்தையில் நுழைகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

JSW Motors புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான JSW Group, இப்போது Jetour SUV கார்களை மறுபெயரிட்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் இந்திய பயணிகள் வாகனப் பிரிவில் ஒரு புதிய அத்யாயத்தை எழுத உள்ளது. இந்த குழுமம் ஏற்கனவே SAIC Motor நிறுவனத்திற்குச் சொந்தமான MG Motor India உடனான கூட்டணி மூலம் இந்திய கார் சந்தையில் வலுவான இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் JSW நிறுவனம் இந்த அறிமுகத்திற்காகத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. தனது இந்திய நுழைவு உத்தியின் ஒரு பகுதியாக, மும்பை, புது தில்லி மற்றும் அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் அறிமுகத்திற்கு முன்னதாகவே எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மையங்கள் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பையும், திட்டமிடலையும் அனுமதிப்பதோடு, நிறுவனத்திற்கு நேரடி கருத்துக்களைச் சேகரிக்கவும் உதவும். இந்த மாடல்களில் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இந்திய வாடிக்கையாளர்களுக்குப் புதியதாக இருப்பதால், வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்றடைவதில் இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Jetour என்பது Chery Holding Group நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சீன வாகன பிராண்ட் ஆகும். JSW நிறுவனம் சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் அவற்றை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்க உதவும்.

இந்த உத்தியானது நிறுவனம் தனது தயாரிப்புகளை அதிகப் போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்ய உதவுவதுடன், எதிர்கால உள்ளூர்மயமாக்கலுக்கான அடித்தளத்தையும் அமைக்கும். Jetour T2 இந்தியாவில் வரும் முதல் தயாரிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சுங்கச் சவால்கள் காரணமாக இதன் அறிமுகம் சற்று தாமதமாகியுள்ளது.
Jetour T2 சிறப்பம்சங்கள்
முதலாவதாக எதிர்பார்க்கப்படும் Jetour T2 காரின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு பண்டிகைக் காலத்திற்குள் வரக்கூடும் என்று JSW தெரிவித்துள்ளது. இந்த பிளக்-இன் ஹைப்ரிட் SUV கார் 1.5L டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 26.7 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது 154 hp மற்றும் 220 Nm டார்க்கை வழங்குகிறது. இது 1,000 கிமீ வரை செல்வதற்கான வரம்பையும் வழங்குகிறது.
இந்த SUV கார் AWD (ஆல்-வீல் டிரைவ்) மற்றும் FWD (பிரண்ட்-வீல் டிரைவ்) ஆகிய இரண்டு கட்டமைப்புகளிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோனோகோக் சேஸிஸில் கட்டமைக்கப்பட்ட இது, முரட்டுத்தனமான வடிவமைப்பையும் ஐந்து இருக்கை அமைப்பையும் கொண்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் மதிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இது பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications
