சத்தமில்லாமல் மிகப்பெரிய வாகன சாம்ராஜ்யத்தை அமைக்கும் ஜேஎஸ்டபிள்யூ
டாடா, மஹிந்திரா உள்ளிட்ட உள்நாட்டு கார் நிறுவனங்களை தொடர்ந்து மிகப்பெரிய வர்த்தக திட்டங்களுடன் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சத்தமில்லாமல் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இரும்பு, எரிசக்தி, கட்டுமானத் துறையில் புகழ்பெற்ற ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனது முழுமையான கவனத்தை தற்போது ஆட்டோமொபைல் துறை மீது செலுத்தி வருகிறது.
ஒரேயொரு கார் பிராண்டுடன் கூட்டணி அமைத்து கார்களை விற்பனை செய்வது என்ற வழக்கமான பாணியை விட்டுவிட்டு முழுவதுமாக ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வர்த்தக வலை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்காக 2 முதல் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் (முன்னர் அவுரங்காபாத்) மாவட்டத்தில் பிட்கின் பகுதியில் 630 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான ஆட்டோமொபைல் மேம்பாட்டு மற்றும் உற்பத்தி வளாகத்தையும் அமைத்து வருகிறது. இங்கு வாகன உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சப்ளையர்களுடன் கூடிய பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த மையமாக உருவாக்கப்படுகிறது.
பிற நிறுவனங்களை போல ஒரு நிறுவனத்துடன் கூட்டணி வைத்து செயல்படுவது போன்று அல்லாமல் புதிய வர்த்தக பாணியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பல நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதுடன் தனது சொந்த பிராண்டிலும் புதிய கார் மாடல்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

செயிக் - எம்ஜி மோட்டாருடன் கூட்டணி
சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் நிறுவனத்துடன் ஏற்கனவே கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது ஜேஎஸ்டபிள்யூ. செயிக் குழுமத்தின் கீழ் உள்ள இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இந்தியாவில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கூட்டணியின் கீழ் மின்சார கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டு வருகிறது.
செர்ரி கூட்டணி
சீனாவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான செர்ரி ஆட்டோமொபைலுடனும் ஜேஎஸ்டபிள்யூ தொழில்நுட்ப பகிர்மானத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, செர்ரி நிறுவனத்தின் மின்சார கார்கள் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது சொந்த பிராண்டில் கார்களை அறிமுகம் செய்ய ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. அதாவது, ராயல்டி அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

செர்ரி நிறுவனத்தின் ஜேடூர்-டி2 போன்ற மாடல்களின் அடிப்படையில் தனது சொந்த பிராண்டில் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. வரும் தீபாவளி பண்டிகையின்போது முதல் மாடலை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்துடன் பேச்சுவார்த்தை
ஜெர்மனியை சேரந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்துடன் நிறுவனத்துடனும் ஜேஎஸ்டபிள்யூ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி, இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன்- ஸ்கோடா கார் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்து வர்த்தகத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை மூலமாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.

சொந்த தொழில்நுட்பங்கள்
கார்களுக்கு தேவையான முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை இந்தியாவில் KPIT டெக்னாலஜீஸ் மற்றும் LTIMindtree ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி வருகிறது. மேலும், இன்ஃபோடெயின்மென்ட் திரைகள் போன்றவற்றை முப்பரிமாண காட்சியாக வழங்குவதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஜேஎஸ்டபிள்யூக்கு சாதகமான விஷயங்கள்
இக்குழுமம் ஏற்கனவே இரும்பு, எரிசக்தி, போக்குவரத்து, லித்தியம், அலுமினிய உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது. இதனால், கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை எளிதாக பெறும் வாய்ப்பை வைத்துள்ளது. மேலும், அவுரங்காபாத் அருகில் உள்ள பிட்கனில் சப்ளையர்களுக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், ஏற்கனவே 10 முக்கியமான சப்ளையர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 முதல் 30 சப்ளையர்களை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சாம்ராஜ்யத்தை கட்டமைக்குமா?
டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா வாகன நிறுவனங்களை தொடர்ந்து ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் பண்டிகை காலத்திலேயே தனது புதிய வாகன பிராண்டை ஜேஎஸ்டபிள்யூ அறிமுகம் செய்யும் என்றும் தெரிகிறது. தனது ஆட்டோமொபைல் வர்த்தக விரிவாக்கத் திட்டங்களுக்காக ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ரூ.8,000 கோடியை எஸ்பிஐ வங்கியிலிருந்து 10 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் கடன் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
