ஹூண்டாய் கிரெட்டா தான் மொத டார்க்கெட்! ஃபர்ஸ்ட்-டைம் கார் வாங்குபவர்கள் வாங்க போகும் 2 எலெக்ட்ரிக் கார்கள்!
ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் (JSW Motors) நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. எம்ஜி மோட்டார் (MG Motor) உடன் ஏற்கனவே இணைந்து செயல்பட்டாலும், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனியாகவும் ஆட்டோமொபைல் துறையில் செயல்பட திட்டமிட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸில் இருந்து முதலாவதாக அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
துவக்கத்தில், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் சீன எலெக்ட்ரிக் கார்களை தனது பிராண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பதும் அவ்வாறான சீன எலெக்ட்ரிக் கார்களே ஆகும். இதற்காக, சீனாவை சேர்ந்த செரி (Chery) நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்டபிள்யூ குழுமம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலமாக, செரி பிராண்டில் இருந்து சீனாவில் விற்பனை செய்யப்படும் 'ஐகார் வி23' (iCar V23) என்கிற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஜேஎஸ்டபிள்யூ பிராண்டின் வாயிலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செரி எலெக்ட்ரிக் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது வெளியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தில், ஜேகூ ஜே5 (Jaecoo J5) என்கிற எலெக்ட்ரிக் மிட்-சைஸ் எஸ்யூவி காரும் உட்படுத்தப்பட்டுள்ளது. ஜேகூ ஆனது செரி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சீனாவில் வடிவமைக்கப்படும் கார்களை ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்காக ஜேகூ பிராண்டை செரி நிறுவனம் பயன்படுத்துகிறது. இவற்றுடன், மொத்தம் மூன்று எலெக்ட்ரிக் கார்களுடன் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் கால்பதிக்க ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் தலா இரு செரி ஐகார் வி23 மற்றும் ஜேகூ ஜே5 எலெக்ட்ரிக் கார்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 4 எலெக்ட்ரிக் கார்களும் நீண்ட நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் தொடர் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட உள்ளன. இந்த சோதனை ஓட்டத்தில் காரை இயக்க போகும் அதிகாரிகள் தங்களது உடைமைகளை எடுப்பதற்காக தங்களது வீடுகளின் முன் நிறுத்திய போது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்பை படங்களில் ரேஞ்ச் ரோவர் வேலர் (Range Rover Velar) கார் போன்று இருப்பது ஜேகூ ஜே5 எலெக்ட்ரிக் கார் ஆகும். இது ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) மற்றும் (Mahindra BE 6) எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும். படங்களில் ஜேகூ ஜே5 கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது என்றாலும், காரின் முகப்பு பகுதி மிகவும் எளிமையானதாக இருப்பதை மறைப்புகளை தாண்டி பார்க்க முடிகிறது.
மெல்லிய வடிவிலான எல்இடி ஹெட்லைட்களுக்கு மேலேயும், கீழேயும் எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரிக் கார் என்பதால் க்ரில் மூடப்பட்டுள்ளது. செரி ஐகார் வி23 பற்றி சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பதற்கு இது மஹிந்திரா தாரை போன்று உள்ளது. ஆனால், இது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். முரட்டுத்தனமான தோற்றத்தில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக ஐகார் வி23 திகழ்கிறது.
பார்ப்பதற்கு கொஞ்சம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) போலவும் இந்த செரி எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் எல்இடி ஹெட்லைட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாகனத்தின் பக்கவாட்டில், ஜன்னல்கள் நன்கு மேற்கூரை வரை வழங்கப்படுகிறது. பின்பக்கத்தில், பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல சதுர வடிவில் பெட்டி ஒன்று பின்பக்க கதவில் இடம்பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் உடனான கூட்டணி ஒருபுறம் இருக்க, மறுப்பக்கம் தனக்கென ஒரு இடத்தை இந்திய ஆட்டோமொபைல் துறையில் உருவாக்க ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தயாராகி வருகிறது. இந்தியாவின் மிக பெரும் குழுமங்களுள் ஒன்றாக இருப்பதால் இதன் வருகை எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதன் மூலமாக தன்னை ஒரு எலெக்ட்ரிக் வாகன நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் அறிமுகம் செய்துக்கொள்ள விரும்புகிறது.


Click it and Unblock the Notifications