வெறும் 5 ரூபாய் செலவில் 60 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்... நம்பர் பிளேட் இல்லாமயே ஓட்டலாம்...
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாற தொடங்கியுள்ளனர். பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தி கொண்டிருந்தவர்கள், டாடா (Tata), எம்ஜி (MG), டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj), ஏத்தர் (Ather) மற்றும் ஓலா (Ola) போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் தனக்கென சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் காரை உருவாக்கி பயன்படுத்தி வருபவரை பார்த்துள்ளீர்களா? இந்த கேள்விக்கு நிச்சயம் அனைவரின் பதிலும் 'இல்லை' என்பதாகதான் இருக்கும். ஆனால் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கென சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் காரையே உருவாக்கியுள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி ஜான். 67 வயதாகும் இவர், தொழில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம், வீட்டில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அலுவலகத்திற்கு சென்று வர முதலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றைதான் ஆண்டனி ஜான் பயன்படுத்தி வந்தார்.
ஆனால் மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, எலெக்ட்ரிக் காருக்கு மாற அவர் முடிவு செய்தார். ஆனால் எந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரையும் வாங்காமல், தனக்கென சுயமாக ஒரு எலெக்ட்ரிக் காரை தயாரித்து கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். அதன் விளைவாக ஒரு புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

காரின் பாடியை (Body) உருவாக்குவதற்காக, கராஜ் ஒன்றை அவர் அணுகினார். அது பஸ் பாடிக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கராஜ் ஆகும். எனவே ஆண்டனி ஜான் கொடுத்த காரின் டிசைனை அவர்கள் உருவாக்கி கொடுத்து விட்டனர். ஆனால் எலெக்ட்ரிக்கல் வேலைகளை எல்லாம் ஆண்டனி ஜான் சுயமாகவே செய்தார்.
டெல்லியில் உள்ள ஒரு வியாபாரியிடம் பேட்டரிகள், மோட்டார் மற்றும் வயர்களை போன்றவற்றை அவர் வாங்கினார். ஆனால் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் நிறைய தவறுகளை ஆண்டனி ஜான் செய்தார். ஆனால் அதற்காக மனம் தளர்ந்து தனது முயற்சியை அவர் கை விட்டு விடவில்லை. தொடர்ந்து போராடினார்.
போதாக்குறைக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அமலுக்கு கொண்டு வரப்பட்டதும் (இது சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஆகும். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் சூழலில், சுவாரஸ்யமான நிகழ்வு என்பதால், நமது வாசகர்களுக்காக செய்தியாக வழங்கியுள்ளோம்), பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தி, எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளை தாமதப்படுத்தியது.
ஒரு வழியாக பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தனது எலெக்ட்ரிக் காரை ஆண்டனி ஜான் உருவாக்கி முடித்து விட்டார். இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக சுமார் 4.50 லட்ச ரூபாயை ஆண்டனி ஜான் செலவிட்டுள்ளார். ஆனால் வெறும் 5 ரூபாய் செலவு செய்தால், இந்த எலெக்ட்ரிக் காரில் 60 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
வில்லேஜ் வர்தா என்ற யூடியூப் சேனலில் ஆண்டனி ஜான் மற்றும் அவரது எலெக்ட்ரிக் கார் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சரி, இந்த எலெக்ட்ரிக் காரை சாலையில் இயக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். கார்டாக் தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், இந்த எலெக்ட்ரிக் காரை சாலையில் இயக்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே இருக்கிறது. எனவே இதற்கு நம்பர் பிளேட் தேவையில்லை. ஆனால் இதை இயக்குபவர்கள் முறைப்படி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருப்பதன் மூலம் கேரள மாநிலத்தில் பலரின் கவனத்தையும் ஆண்டனி ஜான் தன்வசம் திருப்பியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆண்டனி ஜானின் முயற்சி பாராட்டுக்குரியது. பல்வேறு சவால்களை கடந்து சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருப்பது உண்மையிலேயே சாதனை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதுவும் 60 கிலோ மீட்டர் இயக்க வெறும் 5 ரூபாய் மட்டுமே செலவு என்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். இது போன்ற எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தற்போதைய தேவையாக உள்ளன.


Click it and Unblock the Notifications