வேற லெவலுக்கு மாறும் அனந்த்பூர்... ஆந்திர கார் ஆலையில் ரூ.13,000 கோடி முதலீட்டை கொட்டப்போகும் கியா!
தென்னிந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் ஆந்திரப் பிரதேசம் முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது. குறிப்பாக, அனந்தபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கியா (Kia) கார் தயாரிப்பு ஆலை, அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்கெனவே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், கியா நிறுவனத்தின் மிகப்பெரிய புதிய முதலீட்டுத் திட்டம் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது கார் ஆலை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ரூ.13,000 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாபெரும் முதலீட்டுத் திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்பதுடன் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள் வருகையும் அதிகரிக்கும். இதனால் அனந்தபூர் நகரமும் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தின் எர்ரமாஞ்சி பகுதியில் சுமார் 536 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கார் தொழிற்சாலையை கியா அமைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதுடன், 2019 ஆகஸ்ட் மாதம் முதல் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டது. இதற்காக ஆரம்பத்தில் சுமார் ரூ.7,000 கோடி முதலீடு செய்யப்பட்டது.
இந்த ஆலையின் வருடாந்திர உற்பத்தித் திறன் தற்போது 3 லட்சம் கார்களாக உள்ளது. புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 2 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக ஆலையில் புதிய உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்படும். இதன் மூலம் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களாக அதிகரிக்கும்.
இந்த முதலீடு வெறும் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல், கியாவின் எதிர்கால வாகனத் திட்டங்களுக்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக, புதிய ரக கார்கள், ஹைப்ரிட் தொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை உருவாக்க இந்த விரிவாக்கத் திட்டம் உதவும்.
இந்தத் தொழிற்சாலை விரிவாக்கம் வேலைவாய்ப்புகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், உற்பத்திப் பிரிவு பணியாளர்கள், தரப்பரிசோதனை ஊழியர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், சரக்கு போக்குவரத்து, பராமரிப்பு, கிடங்கு நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய தொழில்களிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அனந்தபூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. தென்கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின், சியோயான் மற்றும் இவாமெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் மொத்தம் 1,418 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனந்தபூரின் வளர்ச்சிக்கு அதன் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளும் முக்கியமான பலமாக இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களை எளிதாகச் சென்றடைய முடிகிறது. பெங்களூரு விமான நிலையமும் சுமார் 185 முதல் 190 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதால் சரக்குப் போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் உதவியாக இருக்கிறது.
ரூ.13,000 கோடி முதலீடு அனந்தபூரின் தொழில் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். வேலைவாய்ப்புகள், உதிரிபாக நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை எனப் பல்வேறு பிரிவுகள் இதன் மூலம் பயன்பெற வாய்ப்புள்ளது. ஆனால், முதலீடு மற்றும் விரிவாக்க அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் வரை எதிர்பார்ப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிலம் வாங்குவது சரியான முடிவாக இருக்காது.
Source: Economic Times


Click it and Unblock the Notifications


