ஆந்திராவில் ரூ.17,000 கோடியில் 2வது கார் தொழிற்சாலையை அமைக்கும் கியா: 12,000 பேருக்கு வேலை!

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் மிக வேகமாக வர்த்தக வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதன்படி, ஆந்திராவில் தனது இரண்டாவது புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யப்போவதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.17,000 கோடி முதலீட்டு மதிப்பில் இந்த புதிய கார் ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு 6.3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை அந்நிறுவனம் எட்டவுள்ளது.

KIA Plant

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 31வது CII Partnership Summit நிகழ்ச்சியில் கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான குவாங் கு லீ (Gwanggu Lee) இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து இந்த புதிய தொழிற்சாலை திட்டத்தைச் செயல்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் பகுதியில் கியா நிறுவனத்திற்கு ஏற்கனவே கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு சுமார் 4.3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், புதிய தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும்போது கூடுதலாக 2 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கிடைக்கும்.

Also Read

இதன் மூலம் கியா இந்தியா நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறன் தற்போதைய 4.3 லட்சத்திலிருந்து 6.3 லட்சமாக அதிகரிக்கவுள்ளது. அதாவது, நிறுவனத்தின் உற்பத்தித் திறன் சுமார் 46 சதவீதம் அதிகரிக்கும். இந்திய சந்தையின் தேவையை மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியையும் அதிகரிக்க இந்த விரிவாக்க திட்டம் உதவும்.

இந்த புதிய தொழிற்சாலை திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தொழிற்சாலைக்குத் தேவையான உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.

Also Read

புதிய ஆலையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் கார்களுடன் மின்சார கார்களையும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய மாடல்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்திய வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கும் ஏற்ப நிறுவனம் செயல்பட முடியும்.

கடந்த 2017ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் புதிய கார் தொழிற்சாலை அமைத்து கியா நிறுவனம் தனது பயணத்தை இந்தியாவில் தொடங்கியது. அப்போது அமைக்கப்பட்ட முதல் தொழிற்சாலை வெறும் 14 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது இந்த ஆலை நிறுவனத்தின் முக்கியமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக வளர்ந்துள்ளது. இதுவரை 4.1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கியா நிறுவனம் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க உற்பத்தி சாதனைகளையும் படைத்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் கார்களையும், ஏழு ஆண்டுகளில் 20 லட்சம் கார்களையும் உற்பத்தி செய்துள்ளது. இதுதவிர கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களிலும் நிறுவனம் தொடர்ந்து பங்களித்து வருகிறது.

இந்தியாவில் தனது எதிர்கால வளர்ச்சிக்கு ஆந்திரப் பிரதேசம் முக்கியமான மாநிலமாக இருக்கும் என்று கியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தொழிற்சாலை மூலம் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி, மின்சார வாகன உற்பத்தி எனப் பல துறைகளில் வளர்ச்சியை எட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

Article Published On: Friday, November 13, 2026, 10:21 [IST]
English summary
Kia andhra pradesh second car plant 2 billion investment 12000 jobs
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out