கியா கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ் கார்களில் சிஎன்ஜி மாடல்கள் அறிமுகம்.. விலை மற்றும் முழு விபரம்!
இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கியா நிறுவனம் தனது 7 சீட்டர் கார்களான கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் மாடல்களில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் அமைப்பு பொருத்தப்பட்டு வரும் இந்த புதிய மாடல்கள், குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு கூடுதல் தேர்வாக அமைந்துள்ளன.
கேரன்ஸ் சிஎன்ஜி மாடலானது பிரீமியம் ஆப்ஷன் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு ரூ.12.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கேரன்ஸ் கிளாவிஸ் சிஎன்ஜி மாடலானது HTE மற்றும் HTE (O) ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இவற்றிற்கு முறையே ரூ.12.39 லட்சம் மற்றும் ரூ.13.35 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மாடல்களுடன் ஒப்பிடும்போது CNG மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரை கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு சிஎன்ஜி மாடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் இயங்கும்போது இந்த எஞ்சின் 96 பிஎஸ் பவரையும், 123 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் பயன்பாட்டில் கிடைக்கும் பவர் மற்றும் டார்க்கை விட சிஎன்ஜியில் இயங்கும்போது சற்று குறைவாக இருக்கும். ஆனால், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் எஞ்சினில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் சிஎன்ஜி மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல்களில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சிஎன்ஜி மாடல்களில் இடம்பெறவில்லை.

இரண்டு மாடல்களிலும் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கமான மாடல்களில் கிடைக்கும் 216 லிட்டர் பூட் ஸ்பேஸ், இந்த சிஎன்ஜி மாடல்களில் 116 லிட்டராக குறைந்துள்ளது. அதேநேரத்தில், ஸ்பேர் வீல் காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டு இருப்பதால் பூட் ரூம் பகுதி ஓரளவு பொருட்களை வைப்பதற்கான இடவசதியை அளிக்கும்.
சிஎன்ஜி எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டதால் காரின் எடையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்பிலும் தேவையான மாற்றங்களை கியா நிறுவனம் செய்துள்ளது. இதுதவிர, முன்புறத்தில் 16 அங்குல டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சிஎன்ஜி மாடல்களில் 4.2 அங்குல கலர் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி மூலம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் Distance-to-Empty தகவலும் இடம்பெறுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இடையே எரிபொருள் பயன்பாட்டை மாற்றுவதற்கான பிரத்யேக சுவிட்சும் வழங்கப்பட்டு இருப்பதால், ஓட்டுனர் தேவைக்கேற்ப எரிபொருளை மாற்றிக்கொள்ள முடியும்.
மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் கார்களில் மூன்றாவது வரிசையில் அமரும் பயணிகளின் வசதியையும் கியா கருத்தில் கொண்டுள்ளது. சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்ட பிறகும் மூன்றாவது வரிசை இருக்கையின் சாய்வு கோணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டிருந்தாலும் பின்புற பயணிகளுக்கு சவுகரியமாக இருக்கும் என நம்பலாம்.
கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் சிஎன்ஜி மாடல்களை அறிமுகம் செய்திருப்பதன் மூலம், மூன்று வரிசை குடும்ப காரை வாங்க நினைப்பவர்களுக்கு கியா கூடுதல் தேர்வை வழங்கியுள்ளது. பெட்ரோல் காரின் எரிபொருள் செலவை குறைக்க விரும்புபவர்கள், தினசரி அதிக தூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய சிஎன்ஜி மாடல்களை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications


