கொரியன் கார் கம்பெனினா ஹூண்டாய் மட்டும்தான்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம்! சைலண்டா 18,659 கார்களை விற்ற கியா
கியா இந்தியா (Kia India) நிறுவனம் 2025 டிசம்பர் மாதத்தில் தனது வரலாற்றிலேயே மிகச் சிறந்த விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 18,659 யூனிட் கார்களை விற்பனை செய்து, 2024 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 105% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை கியா பிடித்துள்ளது.
எனினும், கடந்த 2025ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் (25,489 யூனிட்கள்), விற்பனை 27% சரிந்துள்ளது. இருப்பினும், இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்கு கடந்த டிசம்பரில் 2.8%-இல் இருந்து 4.6% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக, கியா சொனெட் (Sonet), செல்டோஸ் (Seltos) மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) ஆகிய கார் மாடல்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

கியா சொனெட் கடந்த மாதத்தில் 9,418 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 டிசம்பரில் விற்கப்பட்ட 3,337 சொனெட் கார்களை விட 182% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை குறிக்கிறது. ஆனால், 2025 நவம்பர் மாத விற்பனையான 12,051 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் மாதத்திற்கு மாதம் 22% சரிவும் ஏற்பட்டுள்ளது.
கியா செல்டோஸ் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 54% அதிகரித்து 2,830 யூனிட்களில் இருந்து கடந்த டிசம்பரில் 4,369 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இருப்பினும், முந்தைய நவம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 6,305 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், செல்டோஸ் கார் தேவை 31% குறைந்துள்ளது. புதிய 2026 கியா செல்டோஸ் மிக சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள புதிய செல்டோஸ், வரும் மாதங்களில் கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் அதன் எலெக்ட்ரிக் பதிப்பு கடந்த மாதம் 3,681 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது 2024 டிசம்பரில் விற்கப்பட்ட 2,626 யூனிட்களை விட 40% வலுவான வளர்ச்சி ஆகும்.
ஆயினும், 2025 நவம்பரில் விற்கப்பட்ட 6,530 கேரன்ஸ் கிளாவிஸ் கார்களுடன் ஒப்பிடுகையில், மாதத்திற்கு மாதம் 44% விற்பனை சரிந்துள்ளது. இந்த விற்பனை பட்டியலில் நான்காவது இடத்தில் கியா சைரோஸ் (Syros) என்கிற சப்-4-மீட்டர் எஸ்யூவி கார் உள்ளது. இது கடந்த மாதம் 1,116 யூனிட்கள் விற்பனையாகி, 2025 நவம்பரில் விற்கப்பட்ட 544 யூனிட்களை விட 105% மாதத்திற்கு மாதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சைரோஸ் இவி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது; இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம். இந்தியாவில் கியாவின் விலையுயர்ந்த காரான கார்னிவல் (Carnival) கடந்த மாதம் 75 யூனிட்கள் விற்பனையாகி, 2024 டிசம்பரை விட 27% விற்பனை சரிவை பதிவு செய்துள்ளது. ஏனெனில், 2024 டிசம்பரில் 103 கார்னிவல் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
எனினும், 2025 நவம்பரில் விற்கப்பட்ட 58 கார்னிவல் கார்களுடன் ஒப்பிடும்போது, மாதத்திற்கு மாதம் விற்பனை 29% அதிகரித்து நேர்மறையாக முடிந்துள்ளது. கியா கம்பெனியின் எலக்ட்ரிக் கார் மாடல்களான இவி6 (EV6) மற்றும் இவி9 (EV9) ஆகியவற்றின் கடந்த மாத விற்பனை பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது.
| No | Kia | Dec-25 | Dec-24 | Diff | % Change YoY | % Share Dec 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Sonet | 9,418 | 3,337 | 6,081 | 182.23 | 50.47 |
| 2 | Seltos | 4,369 | 2,830 | 1,539 | 54.38 | 23.41 |
| 3 | Carens Clavis / EV | 3,681 | 2,626 | 1,055 | 40.18 | 19.73 |
| 4 | Syros | 1,116 | 0 | 1,116 | 5.98 | |
| 5 | Carnival | 75 | 103 | -28 | -27.18 | 0.40 |
| 6 | EV6 | 0 | 61 | -61 | -100.00 | 0.00 |
| 7 | EV9 | 0 | 0 | 0 | 0.00 | |
| - | Total | 18,659 | 8,957 | 9,702 | 108.32 | 100.00 |
| No | Kia | Dec-25 | Nov-25 | Diff | % Change MoM | % Share Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Sonet | 9,418 | 12,051 | -2,633 | -21.85 | 47.28 |
| 2 | Seltos | 4,369 | 6,305 | -1,936 | -30.71 | 24.74 |
| 3 | Carens Clavis / EV | 3,681 | 6,530 | -2,849 | -43.63 | 25.62 |
| 4 | Syros | 1,116 | 544 | 572 | 105.15 | 2.13 |
| 5 | Carnival | 75 | 58 | 17 | 29.31 | 0.23 |
| 6 | EV6 | 0 | 0 | 0 | 0.00 | 0.00 |
| 7 | EV9 | 0 | 1 | -1 | -100.00 | 0.00 |
| - | Total | 18,659 | 25,489 | -6,830 | -26.80 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து தென்கொரியாவில் இருந்து 2019ஆம் ஆண்டில் வந்த மற்றொரு நிறுவனமான கியாவும் இந்திய சந்தையில் மெல்ல மெல்ல அதற்கான இடத்தை பிடித்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் கியா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த டிசம்பரில் இது டபுள் மடங்காக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









