10 லட்ச ரூபாயை கூட காரின் ஆரம்ப விலை தொடல! இந்த பொங்கலுக்கு புக்கிங் போடவே புதிய கியா கார் அறிமுகம்!
தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா (Kia) இந்தியாவில் தனது சைரோஸ் (Syros) எஸ்யூவி காரின் வேரியண்ட்கள் வரிசையில் புதிய 'எச்.டி.கே (இஎக்ஸ்)' (HTK(EX)) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த விலையில் கூடுதல் அம்சங்களை வழங்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளிக்கும் ஒரு தேர்வாக சந்தையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய சைரோஸ் எச்.டி.கே (இஎக்ஸ்) பெட்ரோல் வேரியண்ட் ரூ.9.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், டீசல் வேரியண்ட் ரூ.10.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இதன் வருகையால், சைரோஸ் கார் வரிசையில் இப்போது மொத்தம் ஏழு வேரியண்ட்கள் உள்ளன. இந்த புதிய எச்.டி.கே (இஎக்ஸ்) வேரியண்ட் ஆனது எச்.டி.கே (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கியா சைரோஸ் கார் புதிய எச்.டி.கே (இஎக்ஸ்) வேரியண்ட்டின் பின்பக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றுள்ளது. காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த எஸ்யூவி காருக்கு மேம்பட்ட தோற்றத்தை அளிக்கின்றன.
உட்புறத்தில், எச்.டி.கே (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை விட பல சிறப்பம்சங்கள் எச்.டி.கே (இஎக்ஸ்) வேரியண்ட்டில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, எலக்ட்ரிக் சன்ரூஃப், மேம்படுத்தப்பட்ட உட்புற கதவு கைப்பிடிகள், 31.2 செ.மீ (12.3-இன்ச்) தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த புதிய வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன், மின்சாரம் மூலம் சரிசெய்யக்கூடிய/ மடக்கக்கூடிய ORVM-கள், சென்சார்களுடன் கூடிய பின்பக்க பார்க்கிங் கேமரா ஆகியவை தினசரி கார் பயண அனுபவத்தை சிறப்பாக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய கியா சைரோஸ் எச்.டி.கே (இஎக்ஸ்) வேரியண்ட் ஆனது விரிவான தொகுப்புடன் வந்துள்ளது.
ஆறு ஏர்பேக்குகள், இபிடி (EBD) உடன் ஏபிஎஸ் (ABS), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை இதில் அடங்கும். இவற்றுடன், 20க்கும் மேற்பட்ட நிலையான பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய சைரோஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வேரியண்ட் அறிமுகம் குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தேசிய தலைவருமான அதுல் சூட் கருத்து தெரிவிக்கையில், "கியாவில், வாடிக்கையாளர்களின் கருத்துக்களே எங்கள் தயாரிப்பு முடிவுகளின் வழிகாட்டி ஆகும்.
புதிய சைரோஸ் எச்.டி.கே (இஎக்ஸ்) அறிமுகம், வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு பதிலளித்து, சிறந்த மதிப்பை வழங்குவதில் எங்கள் தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது" என்றார். மேலும், "இந்த மலிவான விலையில் எங்கள் கார்கள் வரிசையை விரிவுபடுத்துவதன் மூலம், எங்கள் எஸ்யூவியை அணுகக்கூடியதாக்குவதையும், கியாவிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் மற்றும் தரத்தைத் தொடர்ந்து வழங்குவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சைரோஸ் காரில் புதிய எச்.டி.கே (இஎக்ஸ்) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, இந்திய காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் கியாவின் நிலையை பலப்படுத்துகிறது. இது சைரோஸ் காரின் ஆரம்ப மற்றும் நடுத்தர ரக வேரியண்ட்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்து, கணிசமான விலை உயர்வு இல்லாமல் கூடுதல் சவுகரியம், வசதி மற்றும் ஸ்டைலிங் மேம்பாடுகளுடன் கியா சைரோஸ் காரை பெற உதவும்.


Click it and Unblock the Notifications









