சர்வீஸ் சென்டர்களை திரும்பும் பக்கமெல்லாம் திறந்துவரும் கொரியன் கம்பெனி! இதுக்காகவே தைரியமா காரை வாங்கலாம்
தென்கொரியாவை சேர்ந்த கியா (Kia) நிறுவனம் இந்தியா முழுவதும் அமைத்துவரும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையில் வெற்றிக்கரமாக 500 என்கிற பெரிய எண்ணிக்கையை கடந்துள்ளது. கியா கார்களை இந்திய மக்கள் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ள இந்த செய்தி குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தென்கொரியாவில் இருந்து வந்து ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதை போன்று, 2019ஆம் ஆண்டில் நுழைந்த கியாவும் குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கியா பிராண்டின் மீது இந்திய மக்கள் வைத்த நம்பிக்கை ஆகும்.

மக்கள் தங்களது நம்பிக்கையை அவ்வளவு எளிதாக கார்பிரேட் கம்பெனியின் மீது வைத்துவிட மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்தியாவில் கியாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து வருகின்றன. கார்களை விற்பனை செய்ய வேண்டுமென்றால், அவற்றை விற்பனை செய்தவதற்கான ஷோரூம்களை திறந்தால் மட்டும் போதாது, அவற்றை முறையாக சர்வீஸ் செய்து கொடுப்பதற்கான மையங்களும் நாடு முழுவதும் அவசியம் என்பதை புரிந்துக்கொண்டு கியா நிறுவனம் இந்தியாவில் அதன் சர்வீஸ் செண்டர்களின் நெட்வொர்க்கையும் வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது.
அதன்படி, இந்தியாவில் 500வது வொர்க்ஷாப் (Workshop)-ஐ குஜராத்தில் கியா நிறுவனம் திறந்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரின் சாண்ட்கேடா பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய கியா வொர்க் ஷாப் ஆனது இந்தியாவில் இந்த தென்கொரிய கார் நிறுவனம் கொண்டிருக்கும் பெரிய அளவிலான வொர்க்ஷாப்களுள் ஒன்றாகும். இந்த 500 வொர்க்ஷாப்கள் இல்லாமல், நாடு முழுவதும் இன்னும் பல தொடு மையங்களையும் கியா கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 391 பகுதிகளில் மொத்தம் 800க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடு மையங்கள் கியா நிறுவனத்திற்கு சொந்தமாக செயல்படுகின்றன. இந்தியாவில் உள்ள 15 இலட்சம் கியா கார் கஸ்டமர்களுக்கான சேவைகளை இவை வழங்குகின்றன. அகமதாபாத்தின் சாண்ட்கேடா பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள புதிய கியா வொர்க் ஷாப் ஆனது மொத்தம் 76 ஆயிரத்து 69 சதுர அடி பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமானதாக அமைந்துள்ளது.
இதில் 57 சர்வீஸ் பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த 57இல் வாஷிங் (Washing) பகுதியும் அடங்கும். இந்த சர்வீஸ் மையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் ஏறக்குறைய 100 வாகனங்களை நிறுத்த முடியும். இந்த புதிய சர்வீஸ் மையத்தில் வருடத்திற்கு அதிகப்பட்சமாக 40 ஆயிரம் கியா கார்களை சர்வீஸ் பார்க்க முடியும். மேலும், இந்த சர்வீஸ் மையத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான 90 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரும் உள்ளது.
இவற்றுடன், காருக்கு செராமிக் கோட்டிங் (Ceramic Coating) போன்ற பிரீமியம் தரத்திலான வேலைப்பாடுகளுக்காக 'ஷைன் ஸோன்' (Shine Zone) என்கிற பிரத்யேகமான பகுதியும் இந்த சர்வீஸ் செண்டரில் உள்ளது. மேலும், அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த புதிய கியா வொர்க் ஷாப்பில் 145 கிலோவாட்ஸ் சூரிய ஆற்றல் ஜெனரேட்டர், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற வசதிகளும் அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்துவதில் கியா நிறுவனம் தொடர்ந்து ஈடுப்பாட்டுடன் உள்ளது. நாட்டின் பெரும் நகரங்களை தாண்டி, சிறு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களுக்கும் தனது கார் சர்வீஸை கொண்டு செல்ல கியா முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையில் 500 என்கிற மைல்கல்லை கியா கடந்திருப்பதுதான் இதற்கு சாட்சியாகும்.
இவ்வாறு, சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாக, கார் சேவைக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நேரத்தை கியா குறைக்கிறது. இவை மட்டுமின்றி, நடமாடும் சர்வீஸ் மையங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளையும் இந்தியாவில் கியா தொடர்ந்து வழங்கி வருகிறது. இதற்காக, 'மை கியா' (My Kia) என்கிற மொபைல் செயலியை கியா வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications