செல்டோஸை விட சற்றே கூடுதல் விலை... புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்குகிறது கியா?
கியா மோட்டார் இந்தியா நிறுவனம் விரைவில் சொரென்டோ என்ற பிரிமீயம் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அடுத்து இரண்டு புதிய ரக எஸ்யூவி மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், ஒன்று 7 சீட்டர் எஸ்யூவியாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகமான மாடலாக செல்டோஸ் இருந்து வருகிறது. விற்பனையிலும் இந்த எஸ்யூவி கியா நிறுவனத்திற்கு மிக வலுவான வர்த்தகத்தை பெற்று தந்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள் என அனைத்து விஷயங்களிலும் இந்த எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு இருந்து வருகிறது.

(Representational Image)
இந்த நிலையில், சொரென்டோ என்ற 7 சீட்டர் பிரிமீயம் எஸ்யூவியை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஹைப்ரிட் எஸ்யூவி மாடல் என்பதுடன், சற்றே பிரிமீயம் ரகத்தில் வருகிறது. இந்த நிலையில், தற்போதைய செல்டோஸ் 5 சீட்டர் எஸ்யூவிக்கும், சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவிக்கும் இடையிலான விலையில் புதிய 7 சீட்டர் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது செல்டோஸ் 7 சீட்டர் என்ற ரகத்திலும், விலையிலும் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வரும். குறிப்பாக, ஹூண்டாய் அல்காஸர் பிரிவில் இது நிலைநிறுத்தப்படும். இது சற்று பெரிய குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்யும்.
இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்படும் எஞ்சின் உள்ளிட்ட பல அம்சங்கள் பரிசீலனை நிலையிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளும், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன்மூலமாக, செல்டோஸ் மீது இருக்கும் அதிகப்படியமான வர்த்தக சார்பு நெருக்கடியை கியா மோட்டார் இந்தியா குறைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கனவே கேரன்ஸ் மற்றும் க்ளாவிஸ் இருந்தாலும், இது எஸ்யூவி மாடலுக்குரிய தோரணை மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் பரிமாணத்திலும், அம்சங்களிலும் பெரிதாகவும் சி செக்மென்ட் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இது செல்டோஸ் 7 சீட்டர் என்று கூறப்பட்டாலும், முற்றிலும் புதிய மாடலாகவே நிலைநிறுத்த கியா திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
வரும 2028ம் ஆண்டுவாக்கில் இந்த புதிய மாடலை களமிறக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 2030ம் ஆண்டுக்குள் தனது மாடல்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. அதில், இந்த புதிய எஸ்யூவி மாடலும் இடம்பெற்றிருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாடலுக்கு சரியான விலை நிர்ணயித்துவிட்டால், செல்டோஸ் போன்றே இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியும் கியா நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை நிச்சயமாக வழங்கும். 7 சீட்டர் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகவும் அமையும் என்பதால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்ற ஆவல் எழுந்துள்ளது. இப்போது இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications