விற்பனையில் டொயோட்டோவை பின்னுக்குத் தள்ளிய கியா.. முஷ்டியை உயர்த்தி மாஸ் காட்டிய செல்டோஸ்!
இந்திய கார் சந்தையில் பண்டிகைக் கால விற்பனை களைகட்டி வரும் நிலையில், கியா இந்தியா நிறுவனம் தனது விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கியா செல்டோஸ் மற்றும் சோனெட் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
அக்டோபர் 2026 மாதத்தில் கியா நிறுவனம் மொத்தம் 33,462 கார்களை விற்பனைக்கு அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 29,556 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 13.22 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் 3,906 கார்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன.

விற்பனை சாதனை
அக்டோபர் மாத விற்பனையில் கியா நிறுவனத்திற்கு மற்றொரு முக்கியமான மைல்கல்லாகவும் மாறி இருக்கிறது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 32,017 கார்களை விற்பனை செய்து இதற்கு முந்தைய சாதனையைப் படைத்திருந்தது. தற்போது அக்டோபரில் அதைவிட 4.51 சதவீதம் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக விற்பனையில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்த விற்பனை வளர்ச்சியின் மூலம் இந்திய கார் சந்தையில் டொயோட்டா நிறுவனத்தையும் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்துக்கு கியா முன்னேறியுள்ளது. அக்டோபரில் 33,462 கார்களை விற்பனை செய்துள்ள கியா, நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. செல்டோஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஓவர்டேக் செய்த விற்பனை
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களிலேயே கியா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 2,86,470 கார்களை கியா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,36,138 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் 21.31 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் கியா இந்தியா நிறுவனம் விற்பனை செய்த 2,80,286 கார்களைவிட, இந்த ஆண்டு முதல் 10 மாதங்களிலேயே அதிக கார்களை விற்பனை செய்துள்ளது. இன்னும் நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில், இந்த ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்டோஸ், சோனெட் கார்களுக்கு அதிக வரவேற்பு
கியா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு செல்டோஸ் மற்றும் சோனெட் ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் மட்டும் செல்டோஸ் கார் 13,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 39 சதவீதத்தை இந்த கார் மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த ஜனவரியில் அறிமுகமான புதிய செல்டோஸ் கார், தொடர்ந்து மாதந்தோறும் 10,000 யூனிட்டுகளுக்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சோனெட் காரும் தனது பிரிவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குடும்பத்திற்கான கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் மாடல்களும் விற்பனைக்கு வலுசேர்க்கின்றன.

மின்சார கார்களின் விற்பனையிலும் புதிய சாதனை
கியா நிறுவனத்தின் மின்சார கார் விற்பனையும் அக்டோபரில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, அக்டோபரில் மின்சார கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது. கியா சைரோஸ் EV மற்றும் காரென்ஸ் கிளாவிஸ் EV ஆகிய மாடல்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
மேலும், கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் கார்களின் CNG மாடல்களும் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 10 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீசல், CNG மற்றும் மின்சார கார்கள் என பல்வேறு பிரிவுகளிலும் கியா தனது வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications


