மாருதி, டொயோட்டாவுக்கு போட்டியாக... லிட்டருக்கு 25கிமீ மைலேஜ் தரும் கார்களை உருவாக்கும் கியா & ஹூண்டாய்!
கியா நிறுவனம் இந்தியாவில் அதன் செல்டோஸ் காரின் ஹைப்ரீட் வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் அதன் கிரெட்டா காரை ஹைப்ரீட் வெர்சனில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த ஹைப்ரீட் கார்களின் அறிமுகத்தால், அவை டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுவது படிபடியாக குறைத்துக் கொள்ளப்படும். அதேவேளையில், இந்த ஹைப்ரீட் கார்களில் மைலேஜும் அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி.
செல்டோஸ் ஹைப்ரீட் மற்றும் கிரெட்டா ஹைப்ரீட் இவை இரண்டில் எது முதலாவதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என கேட்டால், கியா மாடல் முதலாவதாக அறிமுகம் செய்யப்படுவதற்கே வாய்ப்புள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த இரு கொரியன்-ஸ்டைல் ஹைப்ரீட் கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான என்ஜின் சிஸ்டத்தை தான் கொண்டிருக்கும்.

கார்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் முயற்சியாக முடிந்தவரையில் இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு இவற்றின் என்ஜின் சிஸ்டத்திற்கான பாகங்கள் உருவாக்கப்படும். செல்டோஸ் மற்றும் கிரெட்டா கார்களில் தற்சமயம் வழங்கப்படும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இதில் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது காரின் பின் சக்கரங்களுக்கு இயக்க ஆற்றலை அனுப்பி காரின் சக்கரங்களின் பிடிமானத்தை பாதுகாக்கும் வகையில் இருக்கும். இன்றைய காலத்தில் உருவாக்கப்படும் புதிய செல்டோஸ் மற்றும் நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் கிரெட்டா கார்கள் இரண்டும் கே3 என்கிற பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுகின்றன. இந்த பிளாட்ஃபாரம் ஆனது ஹைப்ரீட் என்ஜின் உடன் காரை உருவாக்க ஏற்றதாகும்.

மேலும், ஹைப்ரீட் பவர்டிரெயினில் இருந்து கிடைக்கும் இயக்க ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்க முடியும். அமெரிக்காவில் செல்டோஸ் ஹைப்ரீட் காரை இவ்வாறு வழங்க உள்ளதாக ஏற்கனவே கியா நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது. இருப்பினும், இந்தியாவிற்கான செல்டோஸ் ஹைப்ரீட் கார் ஆனது முன் சக்கரங்களில் இயங்கக் கூடியதாகவே இருக்கும்.
மைலேஜை பொறுத்தவரையில், கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் அவற்றின் இந்த ஹைப்ரீட் கார்களை ஏறக்குறைய லிட்டருக்கு 25கிமீ என்கிற அளவில் மைலேஜை வழங்க முயற்சிக்கும். நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் ஹூண்டாய் கிரெட்டா ஆனது ஹூண்டாயின் கிராட்டர் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இதனால், புதிய கிரெட்டா ஹைப்ரீட் கார் தற்போதைய கிரெட்டா காரை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும்.
நீளம் குறைந்தது 4.5 மீட்டர்களாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பாயோன் என்கிற சிறிய அளவிலான எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், அதில் இருந்து பெரிய அளவில் வேறுப்பட்டதாக புதிய கிரெட்டா இருக்கும். நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் கிரட்டாவின் டாஷ்போர்டில் 9.9-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் 12.9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படலாம்.
இவற்றுடன், பவர் டெயில்கேட், பவர் லம்பர் சப்போர்ட் உடன் டிரைவர் இருக்கை, 64-வண்ண கேபின் விளக்குகள், 20க்கும் மேற்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை எல்லாம் நிச்சயமாக வழங்கப்படும். மேலும், கிரெட்டா ஹைப்ரீட் காரின் எலெக்ட்ரிக் பவர் மூலம் வெளி மின்சாதனங்களை இயங்க வைக்கும் வைகல்-டூ-லோடு (V2L) வசதி வழங்கப்படலாம். இதனை கியா செல்டோஸ் ஹைப்ரீட் காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா, செல்டோஸ் இவை இரண்டும் பிரபலமான எஸ்யூவி கார்களாக விளங்குவதால், இவை ஹைப்ரீட் பவர்டிரெய்னிலும் விற்பனை செய்யப்படுவது இந்தியாவில் ஹைப்ரீட் கார்களின் மார்க்கெட்டை பெரியதாக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். கியா செல்டோஸ் ஹைப்ரீட் கார் அடுத்த 2027ஆம் ஆண்டின் துவக்கத்திலும், ஹூண்டாய் கிரெட்டா ஹைப்ரீட் கார் 2027ஆம் ஆண்டின் மத்தியிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications