கியா கம்பெனி சொன்னதை செய்து காட்டிடுச்சு! டாடாவின் சியராவை வாங்குவதானு ரொம்ப குழப்பமா இருக்கே!!
இன்று (ஜன.2) விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புத்தம் புதிய கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் சமீபத்திய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார்களின் அறிமுகம், இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி (SUV) கார்கள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கார் மாடல்களும் ஏராளமான நவீன அம்சங்களுடன் வந்துள்ளன. அவற்றின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் வெளியான நிலையில், வாங்குபவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தேர்வு காத்திருக்கிறது.
பரிமாண அளவுகள்: புதிய கியா செல்டோஸ் ஒட்டுமொத்த நீளத்தில் பெரியது. இதன் நீளம் 4,460 மிமீ, அகலம் 1,830 மிமீ மற்றும் உயரம் 1,635 மிமீ ஆகும். காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் (வீல்பேஸ்) 2,690 மிமீ ஆகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு நீளமான கார்.

டாடா சியரா நீளத்தில் சற்று சிறியதாக 4,340 மிமீ ஆக இருந்தாலும், வேறு சில முக்கிய பரிமாணங்களில் பெரியதாக உள்ளது. இது 2,730 மிமீ நீளமான வீல்பேஸ் உடன் வருகிறது. மேலும், இந்த டாடா கார் 1,715 மிமீ-இல் நன்கு உயரமானது மற்றும் 1,841 மிமீ அகலம் கொண்டது. நீண்ட வீல்பேஸ் பொதுவாகப் பின் இருக்கைக்கான கால் வைக்கும் இடத்தையும், அதிக உயரம் கொண்டவர்களுக்கான இடத்தையும் காற்றோட்டமான உணர்வையும் மேம்படுத்துகிறது.
தொழிற்நுட்ப அம்சங்கள்: புதிய கியா செல்டோஸ், நடுத்தர-அளவிலான எஸ்யூவி கார்கள் பிரிவில் மிகவும் அம்சங்கள் நிறைந்த வாகனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் அடிப்படை வேரியண்ட்களிலேயே பல தொழிற்நுட்ப வசதிகள் உள்ளன. எண்ட்ரி-லெவல் எச்டிஇ வேரியண்ட் கூட முழு LED விளக்குகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் (வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே), முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல், பின் இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள் மற்றும் பல USB Type-C சார்ஜர்களைப் பெறுகிறது.

டாடா சியராவின் வேரியண்ட்கள் வரிசை முழுவதும் ஏராளமான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கின்றன. இது வசதி, பாதுகாப்பு மற்றும் நவீன கேபின் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குறைந்த விலையிலான ஸ்மார்ட்+ மற்றும் ப்யூர் வேரியண்ட்களில் கூட பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே), டிஜிட்டல் காக்பிட், பல டிரைவ் மோட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், பின் ஏசி வென்ட்கள், பறித்து-இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் மற்றும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்: இரண்டு எஸ்யூவி கார்களும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இந்த என்ஜின்களின் ஆற்றல் வெளியீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையே. புதிய செல்டோஸ் காரில் இந்த என்ஜின்கள் முறையே 115 பிஎஸ் / 144 என்.எம், 160 பிஎஸ் / 253 என்.எம் மற்றும் 115 பிஎஸ் / 250 என்.எம் இயக்காற்றலை வழங்குகின்றன.

அதே சமயம் சியராவில் இந்த மூன்று என்ஜின்களுக்கும் முறையே 106 பிஎஸ் / 145 என்.எம், 160 பிஎஸ் / 255 என்.எம் மற்றும் 118 பிஎஸ் / 280 என்.எம் ஆற்றலை வழங்குகின்றன. இந்த கார்களின் அதிகாரப்பூர்வ ARAI மைலேஜ் புள்ளி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
செல்டோஸ் மேனுவல், ஐஎம்டி (iMT), ஐவிடி (IVT), டிசிடி (DCT) மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும், சியராவும் இதேபோன்று கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. இருப்பினும், அதன் டர்போ பெட்ரோல் என்ஜின் டிசிடி அல்லது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்காது. மாறாக, குறைந்த ஆற்றல் கொண்ட சியரா நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் வேரியண்ட்டில் DCT கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

விலை: புதிய கியா செல்டோஸ் காரின் விலை நிர்ணயத்தில் கியா நிறுவனம் மிகவும் கவனமாக செயல்பட்டுள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களும் போட்டித்தன்மை வாய்ந்த விலைகளில் வந்துள்ளன. டாப்-எண்ட் வேரியண்ட்களின் விலைகள் ரூ.19.99 லட்சம் வரை செல்லும்.
மறுப்புறம், டாடா சியராவின் விலைகள், ஒப்பீட்டளவில் சற்றே அதிகமாகத் தொடங்குகின்றன. நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.11.49 லட்சத்தில் இருந்தும், டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்தும் துவங்குக்கின்றன. டாப்-எண்ட் சியரா வேரியண்ட்கள் ரூ.21.29 லட்சம் வரை செல்கின்றன. இது விலை நிர்ணயத்தில், செல்டோஸை விட சியரா பிரீமியம் ரகத்தில் உள்ளதை வெளிக்காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா செல்டோஸ் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள், அதிக உட்புற இடவசதி, மேம்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் அம்சங்கள் நிறைந்த வேரியண்ட்களுடன் களமிறங்கியுள்ளது. அதேபோல், டாடா சியரா தனது பாரம்பரியத் தோற்றம், மூன்று திரைகள் கொண்ட டேஷ்போர்டு, அதிநவீன மியூசிக் சிஸ்டம் மற்றும் வலிமையான வடிவமைப்பு ஆகியவற்றுடன் தனித்து நிற்கிறது.


Click it and Unblock the Notifications









