விற்பனையில் வேற லெவல் வளர்ச்சி.. 10 மாதங்களில் 87% அதிகரித்த கியா செல்டோஸ் விற்பனை!
இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி ரக கார் சந்தையில் கியா செல்டோஸ் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையில் கியா செல்டோஸ் கார் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான கியா செல்டோஸ், தற்போது ஒட்டுமொத்தமாக 7 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளது. அதாவது, 7,04,829 யூனிட்டுகள் என்ற சிறப்பான விற்பனை எண்ணிக்கையை இதுவரை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையையும் செல்டோஸ் தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துள்ளது.

இந்த ஆண்டில் செல்டோஸ் காரின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் மட்டும் 1,13,078 செல்டோஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 60,526 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் விற்பனை 87 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 13,423 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரையிலான காலக்கட்டத்தில் இந்த கார் இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. புதிய தலைமுறை மாடலின் அறிமுகத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்களிடம் மீண்டும் அதிக வரவேற்பு இருப்பதை இந்த விற்பனை மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.
செல்டோஸ் காரின் விற்பனை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பின்னர் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட போட்டியாளர்களின் வருகையால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 2025ம் ஆண்டில் விற்பனை 72,618 யூனிட்டுகளாக குறைந்தது.
இந்த சூழலில் கியா நிறுவனம் கடந்த ஜனவரியில் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தியது. அசத்தலான புதிய வடிவமைப்பு, உருவத்திலும் பெரிதாகவும், மேம்படுத்தப்பட்ட உட்புற வசதிகள் என பல மாற்றங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்தது. இதன் அறிமுகம் செல்டோஸ் காரின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்து பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் கார் கிடைப்பது செல்டோஸ் காரின் முக்கிய பலமாக இருக்கிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இதில் மேனுவல், ஐவிடி, டிசிடி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. இதனால் நகர்ப்புறங்களில் தினசரி பயணம் செய்பவர்கள் முதல் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள் வரை வெவ்வேறு தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களையும் இந்த கார் கவர்ந்து வருகிறது.
புதிய செல்டோஸ் காரில் பெரிய டிஜிட்டல் திரைகள், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் ரக வேரியண்ட்டுகளில் மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் பிரீமியம் அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய செல்டோஸ் கவனம் பெற்றுள்ளது. பாரத் என்சிஏபி (Bharat NCAP) பாதுகாப்பு சோதனையில் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு இது கூடுதல் நம்பிக்கையை வழங்குகிறது.
இந்திய வாடிக்கையாளர்களிடம் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சந்தைகளிலும் செல்டோஸ் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை 1.6 லட்சத்திற்கும் அதிகமான செல்டோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கியா இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மாடலாகவும் செல்டோஸ் விளங்குகிறது.
தற்போது நடுத்தர எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ், மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளிட்ட பல மாடல்கள் செல்டோஸ் காருக்குப் போட்டியாக உள்ளன. இருந்தாலும் புதிய தலைமுறை மாடலின் வருகை, பல்வேறு எஞ்சின் தேர்வுகள் மற்றும் நவீன வசதிகள் ஆகியவை அதன் விற்பனை வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருகின்றன.


Click it and Unblock the Notifications


