கிரெட்டாவுக்கு பதிலா இப்போ எல்லாரும் இந்த எஸ்யூவிய தான் அதிகமா வாங்க ஆரம்பிச்சுருக்காங்க.. ஏன் தெரியுமா?
இப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த காராக இருப்பது மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் தான். உண்மையில் விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக இல்லாமல் இருந்தால், அனைவருமே மிட்-சைஸ் எஸ்யூவிக்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். எப்போதும் வாடிக்கையாளர்கள் ஃபேவரைட்டாக இருக்கும் ஹூண்டாய் கிரெட்டாவுடன், இப்போது மாருதி விக்டோரிஸும் வெற்றிகரமான கார்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
ஆனால் நாம் இங்கே பார்க்கப்போவது அந்தக் கார்களைப் பற்றி அல்ல. இதே பிரிவிலேயே விற்பனை செய்யப்பட்டு வரும் கியா செல்டோஸைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். இந்தக் காரின் விலையை தற்சமயம் 2,900 வரை உயர்த்தியிருக்கிறது கியா. ஜூலை 1ம் தேதி முதல் கியா கார்களின் உயரவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதன் ஒரு பகுதியாக செல்டோஸின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

10.99 லட்சம் ரூபாய் முதல் 20.19 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் செல்டோஸ் எஸ்யூவிக்கு இது சொற்ப உயர்வு தான். இந்தாண்டு ஜனவரி மாதம் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸை வெளியிட்டது கியா. வெளியிட்டு ஆறு மாதங்கள் கூட முழுவதும் முடியாத நிலையில் விலையை உயர்த்தினால் நன்றாகவா இருக்கும். எனவே தான் இவ்வளவு குறைவான விலை உயர்வினை இந்தக் காருக்கு கியா அறிவித்திருக்கும் எனத் தெரிகிறது.
இரண்டாம் தலைமுறையாக அப்டேட் செய்யப்பட்ட பின்பு வாடிக்கையாளர்களிடம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது கியா செல்டோஸ். மாதம் 10,000 யூனிட்டுகள் என்ற அளவிற்கு இதன் விற்பனை உயர்ந்திருக்கிறது. கிரெட்டா, விக்டோரிஸுக்குப் பின்பு தற்போது மிட்-சைஸ் எஸ்யூவியில் அதிக விற்பனையைப் பதிவு செய்து வரும் கார் என்றால் அது கியா செல்டோஸ் தான்.

முன்பை விட பெரிய காராக, ரக்கடான மற்றும் ப்ரீமியமான லுக்கைக் கொண்ட காராக புதிய இரண்டாம் தலைமுறை செல்டோஸ் இருக்கிறது. காரின் அளவுகளை கியா அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, காரின் உட்புறம் இடவசதி இன்னும் சற்று கூடியிருக்கிறது. ஐந்து பேர் வரை எந்தப் பிரச்சினையும் இன்றி வசதியாக அமர்ந்து செல்லும் கார்களில் ஒன்றாக இந்தக் கியா செல்டோஸ் இருக்கிறது.
ஒருமுறை மிகவும் வயதான பெண்மணி ஒருவரையும் செல்டோஸில் நீண்ட தூரப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார் நண்பர் ஒருவர். அவ்வளவாக உடல்நிலை ஒத்துழைக்காமல், காரிலேயே செல்ல பயப்படும் அவர், அந்தப் பயணம் சௌகரியமாக இருப்பதாகச் சொன்னதாக நண்பர் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. அப்படி சொகுசு என்னும் போது, நீண்ட தூரம் பயணம் செய்த பின்பும் களைப்படையாமல் இருக்கும் வகையிலான ஒரு காராக செல்டோஸ் இருப்பதற்குத் தான் இங்கே இந்தத் தகவலைக் குறிப்பிட்டேன்.
1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின் தேர்வுகளில் இந்த கியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கிடைக்கிறது. மூன்று இன்ஜின்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய காம்பினேஷன்கள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விலை உயர்வானது செல்டோஸின் விற்பனையை எந்த வகையிலும் பாதிக்கும் அளவிற்கு இல்லை. மேலும், இரண்டாம் தலைமுறை அப்டேட் செல்டோஸுக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வரும் மாதங்களில் செல்டோஸின் விற்பனை மேலும் உயரும் என்று கூட எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெட்டாவை விரைவில் அப்டேட் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. செல்டோஸில் பார்த்த நிறைய மேம்பாடுகளை கிரெட்டாவிலும் நாம் பார்க்கலாம். அப்டேட் ஆகும் வரை கிரெட்டாவின் விற்பனை கொஞ்சம் சரிவில் தான் இருக்கும். அந்த வாடிக்கையாளர்கள் செல்டோஸை நோக்கி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே கிரெட்டா அப்டேட் செய்யப்படும் வரை செல்டோஸ் காட்டில் மழை தான்.


Click it and Unblock the Notifications