பாதுகாப்பில் டாடா, மாருதியை ஓடவிட்ட கியா கார்.. இனி கண்ணை மூடிட்டு வாங்கலாம்!
இந்திய வாடிக்கைாளர்கள் தற்போது வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுக்கு மேலாக பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்யும் கார்களை தரமானதாக மாற்றி வருகின்றன. மாருதியிடம் கூட இந்த மாற்றத்தைக் கடந்த ஆண்டிலிருந்து நாம் பார்த்து வருகிறோம்.
தற்போது அந்த வரிசையில் கியாவும் இணைந்துள்ளது. தற்போது கியாவில் புதிய மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மாடலை பாதுகாப்பு தரச்சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது பாரத் NCAP பாதுகாப்பு தரச்சோதனை அமைப்பு. இந்த சோதனை முடிவில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியிருக்கிறது செல்டோஸ் எஸ்யூவி. இது குறித்த தகவல்களை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

கியாவின் தற்போதைய பாதுகாப்பு தரச்சோதனை முடிவுகளைப் பார்ப்பதற்கு முன்னாள் ஒரு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். 2020ம் ஆண்டு இந்தியாவில் அப்போது விற்பனையில் இருந்த செல்டோஸ் எஸ்யூவி மாடலை தரச்சோதனை செய்தது குளோபல் NCAP அமைப்பு. அந்த சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்களும் மட்டுமே பெற்றிருந்தது கியா செல்டோஸ். அப்போது அந்தக் காரில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்படியே இப்போதைய தரச்சோதனை முடிவிற்கு வருவோம். பாரத் NCAP அமைப்பு மேற்கொண்ட தற்போதை தரச்சோதனை முடிவில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 31.70 புள்ளிகளுடன் 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளுடன் 5 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்று அசத்தியிருக்கிறது புதிய கியா செல்டோஸ். இந்த மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செல்டோஸ் மாடலைக் கொண்டு, ஃப்ரண்டல் ஆஃப்செட் டீஃபார்மபில் பேரியர், சைடு மூவபிள் டீஃபார்மபில் பேரியர் ஆகிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்து சோதனைகளிலும் புதிய செல்டோஸ் மிகச்சிறப்பாக செயல்பட்ட நிலையில், காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த டம்மிகளுக்கு பெரியளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் மிகச்சிறப்பான முடிவுகளையே கொடுத்துள்ளது புதிய செல்டோஸ்.
இந்த செல்டோஸ் எஸ்யூவி மாடலில் 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் வியூ கேமரா, ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல், ISOFIX சைல்டு மவுன்டுகள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டாகவே கொடுத்துள்ளது கியா.
ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.99 லட்சத்திற்குள்ளான விலையில், ரெனோ டஸ்டர், மாருதி சுஸூகி விக்டோரில், டாடா சியரா, ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன டைகூன் ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக கியா செல்டோஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கார் மாடல்களில் மாருதி சுஸூகி விக்டோரிஸ், டாடா சியரா ஆகிய கார் மாடல்களையும் ஏற்கனவே பாதுகாப்பு தரச்சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது பாரத் NCAP தரச்சோதனை அமைப்பு. இந்த இரண்டு கார்களும் சோதனையில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், செல்டோஸ் மாடலானது அவற்றை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதுவரை பாரத் NCAP சோதனை செய்த கார்களில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்ற நான்காவது மாடலாக செல்டோஸ் எஸ்யூவி இருக்கிறது. இதற்கு மேலே இருக்கும் மற்ற மூன்றுமே எலெக்ட்ரிக் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்கள் பாதுகாப்பானவையாக இருப்பதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்து வருவதையே செல்டோஸின் இந்த பாதுகாப்பு தரச்சோதனை முடிவுகள் காட்டுகின்றன. பாரத் NCAP அமைப்பு இதுவரை 30-க்கும் மேலான கார்களை பாதுகாப்பு தரச்சோதனைக்கு உட்படுத்தியிருககிறது. அதில் கிட்டத்தட்ட 30 கார்கள் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றுள்ளதை இதற்கான சான்றாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கான புதிய தொடக்கமாக இந்தக் பாதுகாப்பான கார்கள் இருக்கப் போகின்றன.


Click it and Unblock the Notifications








