கியா செல்டோஸில் ஹைபிரிட் பவர்ட்ரெயின்.. அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவிலும் வெளியீடு!
கடந்த ஜனவரி மாதம் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது கியா. தற்போது இந்தியாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் செல்டோஸ் மாடலை மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மாடலை தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இங்கே பெட்ரோல் இன்ஜின் கொண்ட செல்டோஸ் மாடல் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் மோட்டாருடன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட செல்டோஸ் மாடலையும் கியா நிறுவனம் வெளியிடவுள்ளது. ஹைபிரிட் செல்டோஸ் மாடலை அமெரிக்காவில் மட்டுமின்றி இந்தியாவிலும் வெளியிட கியா திட்டங்களை வைத்திருக்கிறது. இது குறித்த தகவல்களை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

பெட்ரோல் இன்ஜின் கொண்ட மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மாடலை வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் அமெரிக்காவில் கியா வெளியிடவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டின் இறுதிக்குள் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட செல்டோஸ் மாடலின் வெளியீடு அந்நாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வெளியிடப்படவிருக்கும் ஹைபிரிட் வெர்ஷனில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் அதே பவர்ட்ரெயின் செட்டப்பை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்காவிற்கான செல்டோஸ் மாடலை அந்நாட்டிலேயே தயாரிக்காமல் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்தே விற்பனை செய்து வருகிறது கியா. இந்தியாவில் அப்படி இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியாது. இந்தியாவிலேயே தயாரித்தால் தான் போட்டியாளர்களுடன் தாக்குப்பிடிக்கும் வகையிலான விலையில் புதிய காரை கியாவால் விற்பனை செய்ய முடியும்.

இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்டோஸ் மாடலில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடனேயே ஹைபிரிட் செட்டப்பை கியா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவிலேயே ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட செல்டோஸை தயாரிக்க முடிவதுடன், இறக்குமதி செய்வதை விடக் குறைவான விலையிலேயே அவற்றை விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் அதிகளவிலான விற்பனை இலக்கையும் செல்டோஸ் மூலம் கியா எட்ட முடியும்.
2027ல் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட செல்டோஸ் எஸ்யூவி மாடலை கியா இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. செல்டோஸ் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவிலேயே ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாருதி கிராண்டு விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார் மாடல்களும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட இந்திய செல்டோஸ் மாடலானது சுமார் 10 வேரியன்ட்களாக ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. அப்டேட்டிற்கு முந்தைய மாடலை விட அளவில் சற்று பெரியதாகவும், கூடுதல் வசதிகளைக் கொண்டதாகவும், டிசைனில் மேம்பட்டும் இருக்கிறது. இந்தியாவில் கியா முதன் முதலில் வெளியிட்ட கார் மாடல் செல்டோஸ் தான். இந்தியாவில் கியாவுக்கு அதிகம் விற்பனையாகும் ஒரு கார் மாடலாகவும் செல்டோஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட செல்டோஸ் மாடலின் அறிமுகமானது இந்தியாவில் அதன் விற்பனையையும் கணிசமான அளவில் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒரு கார் மாடலாக செல்டோஸ் இருந்து வருகிறது. ஹூண்டாயின் கிரெட்டா, மாருதியின் கிராண்டு விட்டாரா மற்றும் விக்டோரிஸ் ஆகியவற்றைக் தொடர்ந்து அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவியாக செல்டோஸ் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வருவது குறித்து திட்டமிட்டு வருகின்றன. ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம் காரின் விலையையும் எதிர்பார்ப்பதற்கு மேல் உயர்த்தக்கூடும் என்பதால் மிட்-சைஸ் கார் பிரிவிலேயே இதனை நாம் அதிகம் பார்க்க முடியும். அந்த வகையில் கியாவும் மிட்-சைஸ் எஸ்யூவிலேயே முதல் முறையாக ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டத்தைக் கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








