புதிய வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய செல்டோஸ் வேரியன்ட்களை வெளியிடும் கியா
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான செல்டோஸின் புதிய வேரியன்ட்களை கியா வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2019ல் இந்தியாவில் கால் பதித்த போது கியா முதன் முதலில் வெளியிட்ட மாடல் செல்டோஸ் தான். கியாவிற்கு அடித்தளமாகச் செயல்பட்டு தற்போது இந்தியாவில் அதனை முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக மாற்றியதும் செல்டோஸ் தான்.
இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை கடந்த ஜனவரி மாதம் தான் அப்டேட் செய்தது கியா. புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இரண்டாம் தலைமுறை மாடலாக அறிமுகமானது புதிய செல்டோஸ். மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் பாரத் NCAP தரச்சோதனை முடிவில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றிருக்கும் இந்தக் காரின் புதிய வேரியன்ட்கள் குறித்த தகவல்களை இங்கே நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது செல்டோஸ் எஸ்யூவி மாடலை, HTE, HTE(O), HTK, HTK(O), HTX, HTX(A), GTX, X Line, GTX(A) மற்றும் X Line(A) என 10 வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது கியா. இந்நிலையில், கூடுதல் வசதிகள் கொண்ட இரண்டு புதிய வேரியன்ட்களை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. GTX(O) மற்றும் X Line(O) என்ற பெயரில் இந்தப் புதிய வேரியன்ட்களை அந்நிறுவனம் வெளியிடலாம் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு புதிய தலைமுறை செல்டோஸ் மாடலை அறிமுகப்படுத்திய போது ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே வசதியும் கொடுக்கப்படும் என கியா தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் எந்த செல்டோஸ் வேரியன்டிலும் அந்த வசதி இல்லை. இந்த ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேவுடன், சீட் மெமரி ஃபங்ஷன் மற்றும் டேஷ்கேம் ஆகிய வசதிகளைக் கூடுதலாகக் கொடுத்து புதிய வேரியன்டை கியா வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

செல்டோஸின் முந்தைய மாடலில் 8 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே மற்றும் டேஷ்கேம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டு வந்தது. அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலில் அந்த வசதிகள் இல்லை. ஆனால், இவற்றை ஸ்டாண்டர்டாக கொடுப்பதற்கு பதிலாக, வேண்டும் வாடிக்கையாளர்கள் மட்டும் கூடுதல் தேர்வாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் கியா கொடுக்கவிருக்கிறது. அதனால் தான் இந்த வசதிகள் கூடுதலாகக் கொண்ட வேரியன்டை தனியாக வெளியிடுவதாகத் தெரிகிறது.
இதன் மூலம், இந்த வசதிகள் கூடுதலாக வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் மட்டும் புதிய வேரியன்ட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வேண்டாம் என்னும் வாடிக்கையாளர்கள் இதற்கு கீழாக இருக்கும் வழக்கமான வேரியன்டைத் தேர்ந்தெடுக்கலாம். புதிய GTX(O) மற்றும் X Line(O) ஆகிய வேரியன்ட்கள் ADAS வசதி கொண்ட GTX(A) மற்றும் X Line(A) ஆகிய டாப் எண்டு வேரியன்ட்களை விடக் குறைவான விலையைக் கொண்டிருக்கும் என்றே தெரிகிறது.
ஸ்டாண்டர்டு GTX மற்றும் X Line வேரியன்ட்களானது ரூ.18.39 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் எண்டான GTX(A) மற்றும் X Line(A) ஆகிய வேரியன்ட்களானது ரூ.19.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய GTX(O) மற்றும் X Line(O) வேரியன்ட்களானது இவற்றுக்கு இடைப்பட்ட விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அப்டேட்டுடன் கிரெட்டாவிற்கு இணையாக கார்களை விற்கும் திறனை செல்டோஸ் கொண்டுள்ளது. தற்போது டாப் 10 கார்கள் பட்டியிலில் ஒரேயொரு மிட்-சைஸ் காராக கிரெட்டாவே இருந்து வருகிறது. முன்பைப் போல இல்லாமல் பாதுகாப்பிலும் புதிய மாடலில் கவனம் செலுத்தியிருக்கிறது கியா. புதிய வேரியன்ட்களின் வெளியீட்டுடன் அனைத்து வகையான வசதிகளும் செல்டோஸ் லைன்-அப்பில் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது கியா. இது வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கு கூடுதல் தேர்வுகளை அளித்து விற்பனை அதிகரிக்கவும் வழி செய்யும்.


Click it and Unblock the Notifications








