இந்தியாவில் இந்த இரண்டு ஹைபிரிட் கார்களின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது கியா
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது கியா. 2019லேயே இந்தியாவில் கால் பதித்த இந்த தென் கொரிய நிறுவனம் தற்போது ஐந்தாம் இடத்திற்காக டொயோட்டாவுடன் போட்டியிட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹோண்டா, ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்களே இந்திய சந்தையில் நிலையான இடம் பிடிக்க கடுமையாக போராடி வரும் நிலையில், கியா தனியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது.
குறிப்பாக கியாவின் செல்டோஸ், சோனெட், கேரன்ஸ் ஆகிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மாடல்களாக மாறியிருக்கின்றன. மேலும், மற்ற நிறுவனங்களைப் போல கார் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தாமல், சர்வீஸ் நெட்வொர்க்கை மேம்படுத்துவதிலும் கியா கவனம் செலுத்துவது அதன் வெற்றிக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

சமீபத்தில் கியாவின் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது. அதில் இந்தியாவிற்கான வருங்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2030ம் ஆண்டிற்கு இந்தியாவில் 10 புதிய கார் மாடல்களை வெளியிட கியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் 8 எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களும், 2 எரிபொருள் கார்களும் அடங்கும்.
இந்த 8 எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில், சோரன்டோ ஹைபிரிட், கார்னிவல் ஹைபிரிட் ஆகியவற்றின் இந்தி வெளியீடுகளை கியா உறுதி செய்திருக்கிறது. சோனெட் EV-யும் வரிசையில் இருக்கிறது. 2030ம் ஆண்டிற்குள் இந்தக் கார் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளது கியா. ஒவ்வொரு மாடலும் எப்போது வெளியாகும் என்ற குறிப்பிட்ட தகவலை அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. கியாவின் புதிய மாடல்கள் குறித்த தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

கியா சோரென்டோ ஹைபிரிட் (Kia Sorento Hybrid)
முதன் முதலில் இந்தியாவில் கியா வெளியிட்ட செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவிக்கு மேலாக, மூன்று வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவி மாடலாக சோரென்டோ ஹைபிரிட் பிளேஸ் செய்யப்படவிருக்கிறது. இந்தியாவிற்காக மூன்று வரிசை சீட்கள் கொண்ட புதிய எஸ்யூவியை கியா உருவாக்கி வருவதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது. அது வேறெதுவும் இல்லை இந்த சோரென்டோ ஹைபிரிட் எஸ்யூவிக்கான 1.5 லிட்டர் ஹைபிரிட் பவர்ட்ரெயின் தான்.
சர்வதேச அளவில் கியாவின் கார்களில் பயன்பாட்டில் இருக்கும் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களை இந்திய மாடலில் கியா கொடுக்க முடியாது. எனவே ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்க முடிகிற வகையில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை ஹைபிரிட்டாக்கி வருவதாகத் தெரிகிறது. இந்தக் கார் மாடலை சோரென்டோ என்ற பெயரில் தான் கியா வெளியிடுமா அல்லது வேறு பெயரைப் பயன்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுமார் 4.8 மீ நீளத்தில் மஹிந்திரா XUV 7X0, டாடா சஃபாரி, உள்ளிட்ட மூன்று வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவி மாடலுக்குப் போட்டியாக புதிய கியா சோரென்டோ எஸ்யூவி இருக்கும். இந்தியா மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்குச் சேர்த்து ஆண்டுக்கு 50,000 சோரென்டோ கார்களை தயாரிக்க கியா இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ரூ.30 லட்சத்தை ஒட்டிய விலையில் இந்த ஹைபிரிட் எஸ்யூவியின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.
கியா கார்னிவல் ஹைபிரிட் (Kia Carnival Hybrid)
கியாவின் ப்ரீமியம் எம்பிவி மாடலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது கார்னிவல் ஹைபிரிட். 2024-ல் தான் மேம்படுத்தப்பட்ட கார்னிவல் எம்பிவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது கியா. தற்போது இந்தக் காரில் டீசல் இன்ஜினே பயன்பாட்டில் உள்ளது. இதில் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜினைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது கியா.
சர்வதேச அளவில் விற்பனையில் இருக்கும் கார்னிவல் ஹைபிரிட் மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், பேரலல் ஹைபிரிட் சிஸ்டத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. 272 hp பவர் மற்றும் 367 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனுடன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது இந்த பவர்ட்ரெயின்.
இதே பவர்ட்ரெயினையே இந்திய கார்னிவல் ஹைபிரிட் மாடலிலும் கியா கொடுக்குமா அல்லது வேறு புதிய பவர்ட்ரெயினைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் கார்னிவல் டீசல் மாடலானது ரூ.59.42 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் அதே நேரத்தில் ஒரு ஹைபிரிட் அலையும் வீசும் எனத் தெரிகிறது. டீசல் வாகனங்களின் குறையை, மைலேஜ் அளவிலாவது நிவர்த்தி செய்ய ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களின் வெளியீடுகளை பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. கியாவும் தற்போது அதற்கு தயாராகி வருகிறது.
இந்தப் பெரிய கார் மாடல்களில் ஹைபிரிட் பவர்ட்ரெயின்கள் கொடுக்கப்படுவதைத் தொடர்ந்து, கியாவின் சிறிய கார் மாடல்களான செல்டோஸ் மற்றும் சோனெட் ஆகிவற்றிலும் ஹைபிரிட் பவர்ட்ரயினின் பயன்பாட்டை வரும் ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கலாம். ஹைபிரிட் கார்கள் எந்தளவிற்கு இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








