உள்ளே காலை நீட்டி படுத்துட்டு போனாலும் இன்னும் இடம் இருக்கும்... ஃபார்ச்சூனருக்கு போட்டியா கியாவின் புதிய கார்
கியா (Kia) நிறுவனம் புதியதாக 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்ட ஒரு எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதுதான், சொரெண்டோ ஹைப்ரீட் (Sorento Hybrid) கார் ஆகும். வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த ஹைப்ரீட் கார் இந்தியாவில் முதல்முறையாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) என்டிடிவி (NDTV) மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. இந்த படங்களில் சொரெண்டோ ஹைப்ரீட் கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சித் தருவதை காணலாம். இருப்பினும், காரின் செவ்வக வடிவிலான நிமிர்ந்த தோற்றத்தை பார்க்க முடிகிறது.

முன்பக்கத்தில் ஹெட்லேம்ப்கள் செங்குத்தான டிசைனில் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், தற்போது சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சொரெண்டோ ஹைப்ரீட் கார் அதன் உலகளாவிய டிசைனில் உள்ளது. அதாவது, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சொரெண்டோ ஹைப்ரீட் காரை இந்தியாவிற்கு கொண்டுவந்து இந்த சோதனை ஓட்டத்தை கியா மேற்கொண்டுள்ளது.
கியா சொரெண்டோவின் ஸ்பெஷலே அதன் அதிகப்படியான நீளம் ஆகும். சுமார் 4.8 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்படும் இந்த காரில் 3-வரிசைகளில் இருக்கைகள் நன்கு விசாலமான கேபின் உடன் வழங்கப்படுகின்றன. அதிக நீளம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சொரெண்டோ காரின் அகலம் 1,900மிமீ மற்றும் உயரம் 1,700மிமீ ஆகும்.

காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2,815மிமீ ஆகும். முன்பக்க ஹெட்லைட் மட்டுமின்றி, காரின் பின்பக்கத்திலும் டெயில்லைட்கள் வெளிநாட்டு சொரெண்டோ காரில் உள்ளதை போன்று செங்குத்தான டிசைனில் பொருத்தப்பட்டுள்ளன. அதிகப்படியான நீளம், அகலத்திற்கு ஏற்றாற் போன்று, சொரெண்டோ ஹைப்ரீட் காரில் நன்கு பெரிய அளவில் 19-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.
தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் சொரெண்டோ ஹைப்ரீட் காரின் உட்புறத்தை பார்க்க முடியவில்லை. ஆனால், எப்படியிருந்தாலும் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சொரெண்டோ ஹைப்ரீட் காரை போன்றுதான் இருக்கும். இருப்பினும், இந்திய மார்க்கெட் சூழலுக்கு ஏற்ப சில மாறுதல்களை எதிர்பார்க்கலாம். என்ஜினை பொறுத்தவரையில், வெளிநாடுகளில் இந்த காரில் வழங்கப்படும் அதே 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் தான் இந்தியாவிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் சொரெண்டோ ஹைப்ரீட் கார் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு சந்தைகளில் மைல்ட்-ஹைப்ரிட் (238 எச்பி) மற்றும் பிளக்-இன் ஹைப்ரீட் (288 எச்பி) என இரு விதமான வெர்சன்களில் சொரெண்டோ ஹைப்ரீட் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த இரு வெர்சன்களும் அறிமுகம் செய்யப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
சொரெண்டோ ஹைப்ரீட் காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 8-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. நன்கு பரந்து விரிந்த எஸ்யூவி காராக விளங்குவதால், கியா சொரெண்டோ ஹைப்ரீட் காரின் ஆரம்ப விலை இந்தியாவில் எப்படியிருந்தாலும் ரூ.30 லட்சத்திற்குள் மேல் நிர்ணயிக்கப்படும். இந்தியாவின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார் என்கிற அடைமொழி உடன் வருவதால் ரூ.40 லட்சம் அளவிலான விலையில் இந்த கார் களமிறக்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது சோதனை ஓட்டங்கள் துவங்கப்பட்டு இருப்பதால், இந்த புதிய கியா காரின் அறிமுகத்தை இந்த 2026ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) கார்களுக்கு போட்டியாக சொரெண்டோவை நேரடியாக ஹைப்ரீட் ஆப்ஷனில் கியா நிறுவனம் கொண்டுவருவது இந்த காரின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








