டொயோட்டாவை அடிச்சு தூக்க இந்தியாவுக்கு வருது புதிய கார்.. என்ன தெரியுமா?
இந்தியாவில் பல்வேறு புதிய கார் மாடல்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது கியா. இதுவரை எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், அடுத்த கட்டமாக ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாடல்களையும் வெளியிடவுள்ளது. ஹைபிரிட் கார்கள் சற்று கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் என்பதால் ப்ரீமியம் பிரிவில் விற்பனை செய்யும் கார் மாடல்களிலேயே முதலில் இந்தப் பவர்ட்ரெயினைக் கொடுக்க கியா முடிவெடுத்திருக்கிறது.
அந்த வகையில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் சோரென்டோ (Sorento) எஸ்யூவி மாடலை ஹைபிரிட் பவர்ட்ரெயினுடன் இந்தியாவில் வெளியிட கியா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹைபிரிட் பவர்ட்ரெயின் இந்தியாவிற்கு வருவதை கியாவும் உறுதி செய்திருக்கிறது. இந்தப் புதிய சோரன்டோ எஸ்யூவி மாடல் என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதனை இங்கே நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் இந்த சோரென்டோ எஸ்யூவியே இந்தியாவில் கியாவின் முதல் ஹைபிரிட் கார் மாடலாக இருக்கும். கார்னிவல் எம்பிவி மாடலின் ஹைபிரிட் வெர்ஷனையும் அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் திட்டமும் கியாவிடம் இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் இன்ஜினுடன் இல்லாமல், இந்தியாவில் கியா கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இன்ஜினையே ஹைபிரிட் சிஸ்டத்துடன் கியா புதிய சோரென்டோவில் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.
குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வகையில் நிறைவான வசதிகளைக் கொடுத்து அனுப்புவது தான் கியாவின் ஸ்டைல். எனவே புதிய சோரென்டோ எஸ்யூவியிலும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம். இரண்டு 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், ஃபிங்கர் பிரிண்ட் லாக் மற்றும் அன்லாக், டூயல் கேமராக்கள், டிஜிட்டல் IRVM ஆகிய அம்சங்கள் புதிய சோரென்டோ எஸ்யூவியில் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இவற்றுடன் மேலும், பவர்டு டெயில்கேட், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், மல்டி ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், லெதர் சீட்கள் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்படலாம். பாதுகாப்பிற்காக இந்தக் காரனது லெவல் 2 ADAS, 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கும். 6 மற்றும் 7 சீட்டர் என இரண்டு விதமான சீட்டிங் லேஅவுட்களுடன் இந்த சோரென்டோ இந்தியாவில் வெளியாகும்.
வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சோரென்டோ மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைபிரிட் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் இந்த பவர்ட்ரெயினானது 178 hp பவர் மற்றும் 265 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. இத்துடன் 65 hp பவர் மற்றும் 250 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு வகையான டிரைவ் தேர்வுகளைக் கொண்டுள்ளது இந்த எஸ்யூவி. ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதி கொண்ட வெர்ஷனானது லிட்டருக்கு 14.8 கிமீ வரையிலான மைலேஜையும், ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட வெர்ஷனானது 13.8 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என கியா தெரிவித்துள்ளது.
இது தவிர 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு ஒன்றும் சோரென்டோவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதே இன்ஜின் தான் இந்தியாவில் கார்னிவல் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 190 hp பவர் மற்றும் 441 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் தேர்வையும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாடலின் வெளியீட்டிற்குப் பிறகு இந்தியாவிற்குக் கொண்டு வர கியா திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.85 மீ நீளம் மற்றும் 2.81 மீ நீள வீல்பேஸுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி மெஜஸ்டர் உள்ளிட்ட ஃபுல் சைஸ் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக புதிய கியா சோரென்டோ விற்பனை செய்யப்படும். ஃபோக்ஸ்வாகன் டேரான் R-லைன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களையும் இதற்கான போட்டியாகக் கூறலாம்.
இவை தவிர ஹூண்டாய் சான்டா ஃபீ (Santa fe, கியாவின் சோரென்டோவிற்கு இணையான ஹூண்டாய் கார்) மற்றும் ஹோண்டா CR-V ஆகிய கார்களும் மேற்கூறிய கார்களுக்குப் போட்டியாக வெளியாவதற்கான இந்திய லைன்-அப்பில் இருக்கின்றன. ப்ரீமியம் எஸ்யூவி செக்மெண்ட் இந்தியாவில் களைகட்டப் போகிறது. அதில் முக்கியமான ஒரு கார் மாடலாக கியா சோரென்டோ இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் கார்களுக்குப் பெயர் போன இந்திய சந்தையில் தங்களுடைய முதல் காராக ஒரு மிட்-சைஸ் எஸ்யூவியை களமிறக்கி வெற்றி பெற்ற நிறுவனம் கியா. எனவே அந்த நிறுவனத்தின் இந்த ப்ரீமியம் கார் மாடலுக்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகத் தான் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் பல்ஸ் பிடித்து கார்களை இறக்குமதி செய்வதில் கியா ஓரளவுக்கு கற்றுத் தேர்ந்து தான் இருக்கிறது. அது சோரென்டோ ஹைபிரிட்டிற்கு செல்லுபடியாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








