வெளியானது இந்தியாவுக்கான கியா சொரென்டோ எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள்... உற்பத்தியும் துவங்கியது!
இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள கியா சொரென்டோ எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா ஆலையில் இந்த காரின் உற்பத்தியும் துவங்கி இருக்கிறது.
பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டுள்ளோரின் பட்டியலில் கியா நிறுவனத்தின் புதிய சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவியும் உள்ளது. இதுவரை டீசர்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. இதனால், இந்த கார் எப்படி இருக்கும் என்ற ஆவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக முதல்முறையாக இந்தியாவுக்கான சொரென்டோ எஸ்யூவியின் படங்களை கியா மோட்டார் இந்தியா வெளியிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 4ந் தேதி இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இன்று உற்பத்திப் பிரிவில் இருந்து வெளிவந்த முதல் காரின் படத்தை வெளியிட்டுள்ளது. அப்போது கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருக்கின்றனர். தவிரவும், இரண்டு இன்டீரியர் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கியா செல்டோஸ் நடுத்தர வகை மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில், இந்த புதிய மாடல் பிரிமீயம் ரக எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது. மேலும், இந்தியாவில் கியா நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் ஹைப்ரிட் எஸ்யூவி என்ற சிறப்புடன் வர இருக்கிறது. இந்த புதிய மாடலில், ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதியுடன் கூடிய ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது. இதன் மூலம் மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட பிரீமியம் எஸ்யூவி பிரிவில் கியா புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொரென்டோ எஸ்யூவியின் வடிவமைப்பில் கியா அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள படங்களில் பெரிய மற்றும் கம்பீரமான எஸ்யூவி தோற்றம், தனித்துவமான வெளிப்புற டிசைன் அம்சங்கள் மற்றும் நவீனமான உட்புற அமைப்பு ஆகியவை வெளிப்படுகின்றன. குடும்ப பயன்பாட்டை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பிரீமியம் எஸ்யூவியாக சொரென்டோ நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் மட்டுமின்றி, டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனத்தை விரும்பும் ஹைப்ரிட் வாடிக்கையாளர்களுக்கும், நீண்ட தூரப் பயணங்களுக்கு டீசல் வாகனத்தை விரும்புபவர்களுக்கும் வேறுபட்ட தேர்வுகள் கிடைக்கும்.
இந்த எஸ்யூவியில் இடம்பெறவுள்ள முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று கியா AI Assistant என்று குறிப்பிடப்படுகிறது. இது Live Generative AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய வசதியாக வழங்கப்பட உள்ளது. முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குரல் வழிக் கட்டளைகளுக்கு மட்டும் பதிலளிப்பதைத் தாண்டி, உரையாடல் முறையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகும் சொரென்டோ காரில்தான் இந்த Live Generative AI வசதியுடன் உலக அளவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் கியா கார் மாடலாக இருக்கும். மேலும், இந்திய ஆட்டோமொபைல் துறையிலும் இந்த தொழில்நுட்பத்துடன் வரும் முதல் வாகனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொரென்டோ எஸ்யூவிக்கான முன்பதிவு ஏற்கனவே கியா நிறுவனத்தின் ஷோரூம்களிலும், அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் தொடங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 4ந் தேதி நடைபெற உள்ள அறிமுக நிகழ்ச்சியில் இந்த கார் குறித்த சிறப்பம்சங்ங்கள், விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications

