ரூ.27.99 லட்சத்தில் புதிய கியா சொரென்டோ பிரிமீயம் எஸ்யூவி கார் அறிமுகம்... முழு விபரம்!
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள கியா சொரென்டோ கார் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள முதல் ஹைப்ரிட் கார் மாடலாக வந்துள்ள சொரென்டோ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய சொரென்டோ காருக்கு ரூ.27.99 லட்சம் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய கியா சொரென்டோ கார் HTE, HTE (O), HTK, HTK (A), HTK (A) Black Line, HTX (AWD) மற்றும் HTX Black Line (AWD) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். புதிய கியா சொரென்டோ கார் 4.8 மீட்டர் நீளமும், 1.78 மிமீ உயரம், 1.9 மீட்டர் அகலமும் உடையது. இதன் வீல்பேஸ் நீளம் 2.8 மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் வந்துள்ளது. இதில், நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் கொண்ட 6 பேர் செல்வதற்கான மாடலும், நடுவரிசையில் பென்ச் இருக்கை கொண்ட 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியுடன் கிடைக்கும்.
கியா நிறுவனத்தின் அடையாளமான தனித்துவமான டைகர்நோஸ் க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், விலை குறைவான வேரியண்ட்டுகளில் 18 அங்குல சக்கரங்களும், விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 19 அங்குலத்தில் பெரிய டைமண்ட் கட் அலாய் சக்கரங்களும் உள்ளன. இதன் பிரம்மாண்டமான தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ணத் தேர்வு இன்டீரியர் இடம்பெற்றுள்ளது. இதில், 12 ஸ்பீக்கர்களுடன் போஸ் ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப், 12.3 அங்குல திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். முதல்முறையாக ஜென் ஏஐ அசிஸ்டென்ட் வசதியையும் கியா இந்த காரில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய கியா சொரென்டோ காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கூடிய ஹைப்ரிட் மாடல் வந்துள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎஸ் பவரையும் 285 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த பெட்ரோல் ஹைப்ரிட் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 65 பிஎஸ் பவரையும், 264 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது.
மேலும், 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கும். இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமகா 193 பிஎஸ் பவரையும், 442 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் விலை உயர்ந்த HTX வேரியண்ட்டில் எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது. இந்த காரில் ஷிஃப்ட் பை ஒயர் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக கியர் மாற்றம் நடைபெறும் தொழில்நுட்ப வசதியும் குறிப்பிடத்தக்கது. குளிர்ச்சியை தரும் வென்டிலேட்டட் இருக்கைகளும் உள்ளன.
இந்த காரில் லெவல் 2 ப்ளஸ் ADAS பாதுகாப்பு கவச தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றுள்ளது. ஹில் டிசென்ட் கன்ட்ரோல், 10 ஏர்பேக்குகள், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன. மேலும், புதிய கியா சொரென்டோ கார் 8 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.
புதிய கியா சொரென்டோ கார் ரூ.27.99 லட்சம் முதல் ரூ.40.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் பல்வேறு வேரியண்ட் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உற்பத்தி ஆந்திராவில் உள்ள கியா ஆலையில் ஏற்கனவே உற்பத்தி துவங்கிய நிலையில், ரூ.25,000 முன்பணத்துடன் புக்கிங்கும் டீலர்களில் ஏற்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications