கியா சொரென்டோ காரின் மைலேஜ் வெளியானது: ஹைப்ரிட் vs டீசல்... முழு எரிபொருளில் 1,300 கிமீ தூரம் பயணிக்கும்!
இந்தியாவில் பிரீமியம் எஸ்யூவி பிரிவில் களமிறங்கியுள்ள கியா சொரென்டோ எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளுடன் இந்த எஸ்யூவி கிடைக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல் அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இந்த பிரம்மாண்ட எஸ்யூவி காரின் மைலேஜ் விபரங்கள் சிறிய வகை கார்களுடன் போட்டி போடும் வகையில் இருப்பதுடன், ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 1,300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் இருக்கிறது. பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் எஞ்சின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள நிலையில், அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா சொரென்டோ 4,815 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம் மற்றும் 2,820 மிமீ வீல்பேஸ் கொண்ட பெரிய எஸ்யூவி ஆகும். இந்தியாவில் இது 6 மற்றும் 7 இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், குளிரூட்டப்பட்ட இருக்கைகள், பல்வேறு வசதிகள் மற்றும் மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.
எஞ்சின் தேர்வுகள்
சொரென்டோ எஸ்யூவியில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது. இதேபோல் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்வுகளில் கொடுக்கப்படுகிறது.
ஹைப்ரிட் மாடல் மைலேஜ்
இந்த காரின் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மாடலின் 2 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 19.60 கிமீ மைலேஜையும், 4 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 17.70 கி.மீ மைலேஜையும் வழங்கும் என கியா தெரிவித்துள்ளது. இந்த காரில் 67 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிட்டால், எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பும்பட்சத்தில், 2 வீல் டிரைவ் மாடலில் 1,313 கிமீ தூரம் வரையிலும், 4 வீல் டிரைவ் மாடலில் 1,186 கிமீ தூரம் வரையிலும் பயணிக்க முடியும்.
டீசல் மாடல் மைலேஜ்
அதேபோன்று, இதன் 2.2 லிட்டர் டீசல் மாடலின் 2 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 17.66 கி.மீ மைலேஜையும், 4 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 15.79 கி.மீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் 67 லிட்டர் எரிபொருள் டேங்க் திறனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், டீசல் எஞ்சின் கொண்ட 2 வீல் டிரைவ் மாடல் ஒரு முழு டேங்கில் சுமார் 1,183 கிமீ தூரமும், 4 வீல் டிரைவ் மாடலில் 1,058 கிமீ தூரமும் பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும். எனினும், ஓட்டுதல் முறை, தட்பவெப்பம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் நடைமுறை பயன்பாட்டில் இந்த மைலேஜ் சற்று குறைவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விலை விபரம்
இந்தியாவில் கியா சொரென்டோ கார் ரூ.27.99 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல்களின் விலை ரூ.27.99 லட்சத்தில் தொடங்குகிறது. ஹைப்ரிட் மாடல்களின் விலை ரூ.29.49 லட்சத்தில் தொடங்குகிறது. உயர்நிலை 4 வீல் டிரைவ் ஹைப்ரிட் மாடலின் விலை ரூ.40.19 லட்சம் வரை செல்கிறது.
டிசைன், இடவசதி, வசதிகள், எரிபொருள் சிக்கனம் என அனைத்தையும் வழங்கும் ஒரு பெரிய வகை எஸ்யூவி மாடலாக வந்திருப்பதுடன் கியா பிராண்டு மீதான நம்பகத்தன்மையும் இதன் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


