நாளை இந்திய சந்தையில் 2 முக்கிய அறிமுகங்கள்: கியா சொரென்டோ, ஹிமாலயன் 440!
இந்திய வாகன சந்தையில் அதிக ஆவலை ஏற்படுத்திய இரண்டு முக்கிய மாடல்கள் நாளை அறிமுகமாக இருக்கின்றன. நாட்டின் முன்னணி நிறுவனங்களான கியா மோட்டார் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களின் புதிய மாடல்களை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன.
இதில் ஒன்று சொரென்டோ என்ற பிரீமியம் எஸ்யூவியாகவும், மற்றொன்று ஹிமாலயன் 440 என்ற நீண்ட தூரப் பயணங்களுக்கான அட்வென்ச்சர் ரக பைக் மாடலாகவும் வர இருக்கிறது.

கியா சொரென்டோ எஸ்யூவி
கியா நிறுவனத்தின் தொழில்நுட்ப சிறப்புகளை பறைசாற்றும் வகையில் இந்தியாவில் அந்நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் கார் மாடலாக சொரென்டோ (Kia Sorento) எஸ்யூவி களமிறங்க உள்ளது. இந்த எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் 6 பேர் மற்றும் 7 பேர் செல்வதற்கான மாடல்களில் வர இருக்கிறது.
இதில் 1.6 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய ஸ்டிராங்-ஹைப்ரிட் மாடலாக வருகிறது. இந்த மாடல் அதிகபட்சமாக 238 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். அடுத்து 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வருகிறது. இந்த டீசல் எஞ்சின் 202 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.
ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதி, லெவல் 2 ADAS பாதுகாப்புத் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல திரைகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக அமையும்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440
அட்வென்ச்சர் பைக் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 மோட்டார்சைக்கிள் நாளை லடாக்கில் நடைபெறவுள்ள ஹிமாலயன் பேஸ் கேம்ப் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் 411 மாடலை நினைவுபடுத்தும் வடிவமைப்பு அம்சங்களுடனும், ஸ்க்ராம் 440 மாடலில் பயன்படுத்தப்படும் 443சிசி எஞ்சினை அடிப்படையாகக் கொண்டும் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 443சிசி ஏர்/ஆயில்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 25.4 பிஎச்பி பவரையும் 34 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சஸ்பென்ஷன், 21 அங்குல முன் சக்கரம் மற்றும் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.
இந்த புதிய மாடல் ஹிமாலயன் 450 மாடலை விட எளிதானதாகவும், பராமரிப்பு குறைவான பைக்காகவும் இருக்கும். இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2.50 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. நாளை மாலை இதன் அறிமுக நிகழ்ச்சி லடாக்கில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications

