டீசர் வீடியோவில் கியா சொன்ன 2 ரகசிய குறியீடுகளுக்கு இதுதான் அர்த்தமா! 'டீகோட்' பண்ணீட்டோம்!
கியா இந்தியா (Kia India) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், BEV மற்றும் HEV என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதை குறிக்கிறது? என கணியுங்கள் எனவும் கியா இந்தியா நிறுவனம் அந்த பதிவில் கூறியுள்ளது.
கியா இந்தியா நிறுவனம் சூசகமாக கூறியுள்ள இந்த வார்த்தைகள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு வித ஆவலை தூண்டியுள்ளன. கியா இந்தியா நிறுவனம் இந்த பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறது? என பலரும் யோசிக்க தொடங்கியுள்ளனர். எனவே கியா இந்தியா நிறுவனத்தின் பதிவை 'டீகோட்' செய்ய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடமைப்பட்டுள்ளது.

கியா இந்தியா நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2 கார்களைதான் இந்த பதிவின் மூலம் சூசகமாக கூறியுள்ளது என நாங்கள் கருதுகிறோம். இதில், BEV என்பது Battery Electric Vehicle என்பதை குறிக்கிறது. அதாவது பேட்டரியில் சேமிக்க கூடிய மின்சாரம் மூலம் இயங்க கூடிய கார் ஆகும்.
அனேகமாக இது கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் காராக இருக்கலாம். கியா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் கியா சைரோஸ் இவி. இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 42 kWh மற்றும் 49 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 450 கிலோ மீட்டர் மற்றும் 500 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் 12.3 டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் நாம் எதிர்பார்க்கலாம்.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், கியா சைரோஸ் இவி போட்டியிடும். இது 5 சீட்டர் காராக இருக்கும்.
சரி, கியா இந்தியா நிறுவனத்தின் டீசர் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு வார்த்தை HEV. Hybrid Electric Vehicle என்பதன் சுருக்கம்தான் HEV. கியா இந்தியா நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள கியா சொரெண்டோ (Kia Sorento) காரை இது குறிப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), ஃபோக்ஸ்வேகன் டேரான் (Volkswagen Tayron) மற்றும் எம்ஜி மெஜஸ்ட்டர் (MG Majestor) போன்ற கார்களுக்கு எல்லாம் போட்டியாக கியா சொரெண்டோ விற்பனைக்கு வரவுள்ளது. இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சொரெண்டோ காரில் 1.6 லிட்டர் டர்போ இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் இதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) வெர்ஷனை கியா இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய போகிறதா? அல்லது பிளக்-இன் ஹைப்ரிட் (Plug-in Hybrid - PHEV) வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறதா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இங்கே ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களுக்கு இடையேயான வித்தியாசத்தை முதலில் உங்களுக்கு விளக்கி விடுகிறோம். ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களில் வழக்கமான இன்ஜின் உடன் பேட்டரி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பேட்டரி சிறியதாக இருக்கும். இன்ஜின் மற்றும் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் இது சுயமாகவே சார்ஜ் ஆகி கொள்ளும். இதை தனியாக சார்ஜ் செய்ய முடியாது.
பிளக்-இன் ஹைப்ரிட் கார்களிலும் வழக்கமான இன்ஜின் உடன் பேட்டரிதான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பேட்டரி சற்று பெரியதாக இருக்கும். இந்த பேட்டரியை முழுமையான எலெக்ட்ரிக் கார்களை போல் சார்ஜர் மூலம் தனியாக சார்ஜ் செய்து கொள்ளலாம். ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களுக்கு இடையேயான வித்தியாசம் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
கியா நிறுவனம் இந்தியாவின் சொரெண்டோ காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக தென்படுகின்றன. அதற்காக பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பே இல்லை எனவும் உறுதியாக கூறி விட முடியாது. எனவே எந்த வெர்ஷன் விற்பனைக்கு வர போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கியா சொரெண்டோ காரிலும் பனரோமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 அடாஸ் வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், போஸ் ஆடியோ சிஸ்டம், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் சொரெண்டோ காரில் கியா வழங்கும் என நம்பலாம்.
இந்திய சந்தையில் கியா சொரெண்டோ காரின் ஆரம்ப விலை சுமார் 35 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நடப்பு 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ கியா சொரெண்டோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் இவி மற்றும் கியா சொரெண்டோ கார்களின் வருகையைதான், கியா இந்தியா நிறுவனம் டீசர் வீடியோவின் மூலம் சூசகமாக குறிப்பிட்டுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த 2 கார்களுமே இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் வருகைக்கு பின், கியா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications