புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடும் கியா
கியாவிடம் (Kia) இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் காரான சிராஸ் EV (Syros EV) ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் கியா வெளியிடலாம் எனத் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியீடு குறித்த தகவல் கசிந்திருக்கிறது.
இது முற்றிலும் புதிய வாகனமாக இருக்காது. எரிபொருள் சிராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாகவே இருக்கும். அப்படியென்றால் பெரிய அளவில் வசதிகள் மற்றும் டிசைனில் மாற்றங்களை நாம் எதிர்பார்க்க வேண்டாம். எலெக்ட்ரிக் காருக்கே உரிய குளோஸ்டு அப் கிரில், புதிய பம்பர் டிசைன், புதிய வடிவிலான அலாய் வீல்கள் ஆகிய மாற்றங்களை சிராஸ் EV-யில் நாம் எதிர்பார்க்கலாம்.

எரிபொருள் சிராஸ் எஸ்யூவிக்குப் பயன்படுத்தப்பட்ட அதே K1 பிளாட்ஃபார்மையே எலெக்டரிக் சிராஸ் காருக்கும் கியா பயன்படுத்தவுள்ளது. ஏற்கனவே இதே போல் எரிபொருள் கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக கேரன்ஸ் கிளாவிஸ் EV-யை கியா வெளியிட்டதை கடந்த ஆண்டு நாம் பார்த்தோம். மேலே கூறியது போல டிசைனிலோ, வசதிகளிலோ கியா பெரியளவில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. சிராஸ் EV-யிலும் அதே நடைமுறையையே கியா பின்பற்றும் எனத் தெரிகிறது.
எலெக்ட்ரிக் கார்களிலேயே கொடுக்கப்படும் வசதிகளான V2L (Vehicle to Load) மற்றும் V2V (Vehicle to Vehicle) ஆகிய வசதிகளை சிராஸ் EV-யில் கியா கொடுக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். V2L என்பது காரின் பேட்டரி பேக்கில் இருக்கும் ஆற்றல் மூலம் லேப்டாப், மொபைல்போன் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி. V2V என்பது பிற எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த கார் மூலம் சார்ஜ் செய்யும் வசதி.

கியாவின் மற்றொரு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் காரான கேரன்ஸ கிளாவிஸ் EV-யில் இந்த வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சிராஸ் எரிபொருள் காரின் அப்டேட் செய்யப்பட்ட 2026 வெர்ஷனில் லெவல் 2 ADAS வசதியை கொடுப்பதை கியா நிறுத்தியுள்ளது. அதனைப் பின்பற்றி எலெக்ட்ரிக் காரிலும் அந்த பாதுகாப்பு வசதியை கியா கொடுக்காதா அல்லது எலெக்ட்ரிக் கார்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதனைக் கொடுக்குமா என்பதையும் நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்தக் காரில் என்ன விதமான பேட்டரி பேக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை இல்லை. சர்வதேச அளவில் ஹூண்டாயின் இன்ஸ்டர் EV என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காருக்கும் சிராஸ் EV-க்குப் பயன்படுத்தப்படவிருக்கும் K1 பிளாட்ஃபார்மே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே அதில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி பேக்குகளை புதிய சிராஸ் EV-யில் கியா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லையென்றால் கேரன்ஸ் கிளாவிஸ் EV-யில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல 42 kWh மற்றும் 51.4 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக்குகளையே புதிய சிராஸ் EV-யிலும் கியா கொடுக்கலாம். இதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த 51.4 kWh பேட்டரி பேக்கானது அதிகபட்சமாக 490 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது கேரன்ஸ் கிளாவிஸ் EV, EV6 மற்றும் EV9 ஆகிய மூன்று எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இதில் EV6 மற்றும் EV9 ஆகிய இரண்டு சொகுசு கார்கள் வகையறாவைச் சேர்ந்தவை. கேரன்ஸ் கிளாவிஸ் EV மட்டுமே மாஸ் மார்க்கெட் பிரிவில் 17.99 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சிராஸ் EV தான் இந்தியாவில் கியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கப் போகிறது. எனவே அதிகளவிலான விற்பனையை கியா எதிர்பார்க்கும். 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு உள்ளான விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக புதிய கியா சிராஸ் EV விற்பனை செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
சிராஸ் EV-யின் வெளியீடு எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். ஆனால் சிராஸ் எரிபொருள் காருக்கே இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்னும் போது எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்குமா எனத் தெரியவில்லை. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான கிரெட்டாவின் எலெக்ட்ரிக் வடிவம் வெளியான போதே வாடிக்கையாளர்கள் அதற்கு போதிய வரவேற்பு கொடுக்கவில்லை. சிராஸ் EV-யின் நிலை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications