கியா சைரோஸ் எலெக்ட்ரிக் காருக்கு அமோக வரவேற்பு... வெயிட்டிங் பீரியட் எத்தனை மாதங்கள் தெரியுமா?
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அதில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சைரோஸ் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் சைரோஸ் கார்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிலையில், அதன் எலெக்ட்ரிக் மாடலுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. சைரோஸ் எலெக்ட்ரிக் காருக்கு தற்போது வேரியண்ட் வாரியாக வெயிட்டிங் பீரியட் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டீம் பிஎச்பி தளத்தில் வெளியான தகவல்களின்படி, 42kWh பேட்டரி கொண்ட HTK வேரியண்ட்டுக்கு அதிகபட்சமாக 11 முதல் 12 வாரங்கள் காத்திருப்பு காலம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல மற்ற வேரியன்ட்களுக்கும் கணிசமான காத்திருப்பு காலம் உள்ளது. இதன்படி HTK Plus, HTX, HTK Plus ER, HTX ER மற்றும் X-Line ER உள்ளிட்ட வேரியண்ட்டுகளுக்கு 9 முதல் 10 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், சைரோஸ் எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்டைப் பொறுத்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காருக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், இந்த வெயிட்டிங் பீரியட் நிலவரம் என்பது ஒவ்வொரு நகரத்திற்கும், டீலருக்கும் மாறுபடும் என்பதுடன், அப்போதைய இருப்பை வைத்து கூறப்படும் நிலை என்பதை மனதில் வைக்க வேண்டும்.
சைரோஸ் எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் தனித்துவமான டிசைன், அதிக இடவசதி என்பதுடன் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் பேட்டரி பேக்குகளில் கிடைக்கிறது. பேட்டரி மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 526 கி.மீ. வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக தினசரி பயன்பாட்டுடன் நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்ற எலெக்ட்ரிக் காராக இது பார்க்கப்படுகிறது.
சைரோஸ் எலெக்ட்ரிக் காரில் பெரிய தொடுதிரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கனெக்டட் கார் வசதிகள், 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. பிரீமியம் இன்டீரியர், பல்வேறு டிரைவிங் மோடுகள் மற்றும் வசதியான கேபின் அமைப்பும் இந்த காரின் முக்கிய சிறப்புகளாக உள்ளன.
கியா சைரோஸ் எலெக்ட்ரிக் காரில் 42kWh பேட்டரி மற்றும் 51.4kWh பேட்டரி என இரண்டு விதமான தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 42kWh பேட்டரி மாடல் முழுமையாக சார்ஜ் செய்யும்போது 443கிமீ ரேஞ்சையும், இதன் மின்மோட்டார் 135 பிஎஸ் பவரையும், 255 என்எம் டார்க்கையும் வழங்கும். அதுவே உயர்வகையிலான 51.4kWh பேட்டரி மாடலானது 526கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த மாடலில் உள்ள மின்மோட்டார் 171 பிஎஸ் பவரையும், 255 என்எம் டார்க்கையும் கொடுக்கும். இந்த இரண்டு பேட்டரிகளையும் 100kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 10 முதல் 80 சதவீதம் வரை 39 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 42kWh மாடலானது HTK, HTK Plus, HTX ஆகிய வேரியண்ட்டுகளிலும், 51.4kWh பேட்டரி மாடலானது HTK Plus, HTX, HTX Plus மற்றும் X-Line ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது. சைரோஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.13.49 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. மேலும், இந்த காருக்கு பேட்டரியை சந்தா திட்டம் முறையில் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த திட்டத்தில் செல்வோருக்கு ரூ.7.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் காரை வாங்கும் வாய்ப்பை பெற முடியும். ஆனால், பேட்டரிக்கு ஒவ்வொரு கிமீ பயணத்திற்கும் ரூ.3.33 என்ற தனிக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Source: TeamBHP


Click it and Unblock the Notifications

