சுறா படம் போல் அட்டர் பிளாப் ஆன கொரிய நிறுவனத்தின் கார்! டாடா, மாருதியை சமாளிக்கறதுலாம் ஈஸி இல்ல ப்ரோ!
இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). ஆரம்பத்தில் கியா சைரோஸ் காரின் விற்பனை மிகவும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் நாளடைவில் கியா சைரோஸ் காரின் விற்பனை மிகவும் மந்தமாக மாறி விட்டது.
தற்போதெல்லாம் கியா சைரோஸ் கார் 3 இலக்க விற்பனை எண்ணிக்கையை கடப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. RushLane தளத்தில் வெளியாகியுள்ள கியா சைரோஸ் காரின், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), இதை நமக்கு மிகவும் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 275 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,546 கியா சைரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5,271 கியா சைரோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் கியா சைரோஸ் கார் விற்பனையில் 95.04 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில்தான் வீழ்ச்சி என்றால், மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கியா சைரோஸ் கார் விற்பனையில் கடுமையான சரிவைதான் சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,116 கியா சைரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஜனவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 275 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால் 841 கியா சைரோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 75.36 சதவீத வீழ்ச்சி ஆகும்.
கியா சைரோஸ் காரின் தோல்விக்கு, அதன் வழக்கத்திற்கு மாறான டிசைன் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் இந்த காருக்கு கியா நிறுவனம் விலையை சற்று அதிகமாக நிர்ணயம் செய்து விட்டதாகவும் வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சைரோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 8.67 லட்ச ரூபாயாக உள்ளது.
இது கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா சைரோஸ் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஏராளமான கார்கள் விற்பனையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். கியா நிறுவனத்தின் சொனெட் காரும் கூட இந்த செக்மெண்ட்டை சேர்ந்ததுதான். இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி மிக கடுமையாக இருப்பதும், கியா சைரோஸ் காரின் தோல்விக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் தயாரிப்பான சைரோஸ் காரானது, டால்-பாய் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான இடவசதியை கியா சைரோஸ் வழங்குகிறது. அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), கியா சைரோஸ் கார் கொண்டுள்ளது.
இதன் காரணமாக பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் (Crash Test) முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) கியா சைரோஸ் பெற்றுள்ளது. இருப்பினும் டிசைன் வாடிக்கையாளர்களை கவர தவறியது மற்றும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பது போன்ற ஒரு சில காரணங்களால், கியா சைரோஸ் தோல்வியை தழுவியிருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








