மாருதி, டாடா கார்களை ஓட விடும்னு எதிர்பார்க்கப்பட்ட டால்-பாய் கியா கார்! ஆனால் வாங்க ஒருத்தரும் ஆள் இல்ல!
கியா சிரோஸ் (Kia Syros), இந்தியாவில் கியா நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புகளுடனும், நம்பிக்கை உடனும் அறிமுகம் செய்த கார் ஆகும். காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் என அறிமுகம் செய்யப்பட்டாலும், நன்கு உயரமாக பெட்டகம் போன்ற உடலமைப்புடன் எம்பிவி (MPV) ரக கார் போன்று சிரோஸ் விளங்குகிறது. இதனாலேயே 2025 பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது சிரோஸ் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதற்கேற்ப இந்த கியா காரின் விற்பனையும் ஆரம்பத்தில் சிறப்பாகவே இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக சிரோஸின் விற்பனை வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 2026 மார்ச் மாதத்தில் சிரோஸின் விற்பனை எண்ணிக்கை 100 யூனிட்களுக்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் 100 பேர் கூட சிரோஸ் காரை வாங்கவில்லை.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாகவே 59 சிரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மார்ச் மாதத்தில் 5 ஆயிரத்து 15 சிரோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், சிரோஸ் கார்களின் விற்பனை ஆனது சுமார் 99% குறைந்துள்ளது.
2025 மார்ச் மாதத்தில் இந்தியாவில் கியாவின் மொத்த கார்கள் விற்பனையில் சிரோஸின் பங்களிப்பு மட்டும் 20% ஆகும். அதாவது, அந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனையான 5இல் ஒரு கியா கார், சிரோஸ் ஆகும். அறிமுகம் செய்யப்பட்ட மாதமான 2025 பிப்ரவரியில் இன்னும் அதிகமாக 5 ஆயிரத்து 425 சிரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிலைமை மொத்தமாக தலைகீழாக மாறியுள்ளது. அதேபோல், கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் 662 சிரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையிலும் சிரோஸின் விற்பனை சுமார் 91% குறைந்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு முதல் நான்கு மாதங்களில் மட்டுமே கியா சிரோஸின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக இருந்தது.
அதன்பின், 2025 ஜூன் மாதத்தில் இருந்தே இந்த காரின் விற்பனை வெகுவாக குறைய ஆரம்பித்துவிட்டது. 2025 மே மாதத்தில் 3,611 சிரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த ஜூன் மாதத்தில் வெறும் 774 சிரோஸ் கார்களை மட்டுமே கியா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது.
2025 செப்டம்பரில் மத்திய அரசாங்கம் அறிவித்த ஜிஎஸ்டி (GST) குறைப்பால் மற்ற கார்களை போன்று கியா சிரோஸ் காரும் ரூ.1.85 லட்சம் வரையிலான விலை குறைப்பை பெற்றிருப்பினும், 2025 அக்டோபர் மாதத்தில் 785 சிரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதிகப்பட்சமாக கடந்த 2025ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 116 சிரோஸ் கார்கள் விற்பனையாகி இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு விற்பனை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வரும் போதிலும், கியா சிரோஸ் ஓர் தரமான கார் என்றே சொல்ல வேண்டும். எம்பிவி கார்களை போன்று அதிக உயரத்தை கொண்டிருப்பதால் இந்த காரின் உட்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கிறது. மேலும், உட்புறத்தில் டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் இரு டிரினிட்டி பனோராமிக் டிஸ்பிளே உள்ளிட்ட மாடர்ன் வசதிகளும் வழங்கப்படுகின்றன.
மொத்தம் 15 விதமான வேரியண்ட்களில் ரூ.8.67 லட்சத்தில் இருந்து ரூ.15.94 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் சிரோஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வரும்போதிலும், இன்னும் சில மாதங்களில் சிரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த கியா தயாராகி வருகிறது. அதன் அறிமுகத்துடன் சேர்த்து, தற்போது விற்பனையில் இருக்கும் சிரோஸ் காரையும் கியா அப்கிரேட் செய்தால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது எங்களது பரிந்துரை ஆகும்.


Click it and Unblock the Notifications








