இப்போ இந்த எஸ்யூவிக்கு தான் மவுசு.. இந்தக் காரை வாங்க தான் ஷோரூம் வாசல்ல கூட்டம் அலைமோதுது!
இந்தியாவில் ஒரே ஆண்டில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது ஸ்கோடா நிறுவனத்தின் இலக்கு. இதுவரை அந்த இலக்கை அந்நிறுவனம் அடையவில்லை. ஆனால், விரைவில் அந்த இலக்கை ஸ்கோடா நிறுவனம் எட்டிவிடும் எனத் தெரிகிறது. அதற்கு முக்கியக் காரணமாக கைலாக் எஸ்யூவி மாடலே இருக்கும். ஸ்கோடாவிற்கு மிகப்பெரிய அளவில் இல்லையென்றாலும், ஓரளவிற்கு வெற்றியையே கொடுத்திருக்கிறது கைலாக் (Kylaq) சப்-காம்பேக்ட் எஸ்யூவி.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான 2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 20,028 கார்களை விற்பனை செய்துள்ளது ஸ்கோடா. கடந்த 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் 17,138 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது விற்பனையில் தற்போது கணிசமான (17%) அளவு வளர்ச்சியையே கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, இந்தளவிற்கு விற்பனையை எட்டியதில் முக்கியப் பங்கு கைலாக் எஸ்யூவியையே சேரும்.

2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்கோடா விற்பனை செய்த 17,400 கார்களில், 11,300 கார்கள் கைலாக் எஸ்யூவி தான். இது சுமார் 65% ஆகும். இந்தியாவில் தற்போது கைலாக், ஸ்லாவியா, குஷாக் மற்றும் கோடியாக் ஆகிய நான்கு கார் மாடல்களை ஸ்கோடா விற்பனை செய்து வருகிறது. இதில் கைலாக்கின் விற்பனை மட்டும் 65% ஆக இருக்கிறது. மற்ற மூன்று கார் மாடல்களும் சேர்ந்து 6,100 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.
2026ன் முதல் காலாண்டில் கைலாக்கைத் தவிர்த்து 3,000 குஷாக் எஸ்யூவி கார்களையும், 3,800 ஸ்லாவியா செடான் கார்களையும் ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு கைலாக் எஸ்யூவியை ஸ்கோடா வெளியிட்ட போது ஒருவிதமான சந்தேகத்தனுடனேயே வெளியிட்டது. இந்திய சந்தையும் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை ஒரு வித சந்தேகக் கண்களுடனேயே அனுகியது.

இதற்கு முக்கிய காரணம், இதற்கு முன்னரும் சப்-காம்பேக்ட் பிரிவில் ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் கார்களை வெளியிட்டு அது பெரிய அளவில் வரவேற்பைப் பெறாமல் தோல்வி அடைந்தது தான். ஆனால், இந்த முறை சில விஷயங்களை ஸ்கோடா சரியாக செய்திருந்த காரணத்தினால், மிகவும் அதிகமாக இல்லையென்றாலும், மற்ற ஸ்கோடா கார்களை விட அதிகம் விற்பனையாகும் காராக கைலாக் மாறியிருக்கிறது.
ஸ்கோடா செய்த சில சரியான விஷயங்களில் ஒன்ற விலை. இந்திய வாடிக்கையாளர்களின் நாடியறிந்து ரூ.8 லட்சத்திற்குள்ளான தொடக்க விலையில் இந்தக் காரை வெளியிட்டது. இப்போதும் ரூ.7.59 லட்சம் என்ற தொடக்க விலையையே இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி கொண்டிருக்கிறது. இரண்டாவது, குறைவான விலை கார் என்பதால் அனைத்து வசதிகளையும் துடைத்தெறிந்து விட்டு அடிப்படையான காராக் கொடுக்காமல், ஓரளவிற்கு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகளை இந்தக் காரில் ஸ்கோடா கொடுத்திருந்தது.
மூன்றாவது நல்ல பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் டர்போ பெட்ரோல் இன்ஜின். ரூ.8 லட்தத்திற்குள்ளான விலையிலேயே ஜெர்மன் இன்ஜின் கொண்ட காரை வாடிக்கையாளர்களால் வாங்க முடிந்தது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை மட்டுமே இந்தக் காரில் ஸ்கோடா கொடுத்திருந்தது. இந்த காரணங்கள் எல்லாம் சேர்த்து மற்ற மாடல்களை விட அதிகம் விற்பனையாகும் ஸ்கோடா காராக கைலாக்கை மாற்றின.
எனினும் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவான விற்பனையையே கைலாக் கொண்டிருக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் குறைவான விலை இரண்டும் ஒரே இடத்தில் இருப்பது கொஞ்சம் முரன்பாடான விஷயம் தான். ஏனெனில் இந்த இன்ஜின் மிகவும் குறைவான மைலேஜையே கொடுக்கும். பட்ஜெட் விலையில் காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள், மைலேஜையும் பார்ப்பார்கள். இதனாலேயே மற்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களை விட குறைவான விற்பனையைக் கொண்டிருக்கிறது.
மேலே கூறியது போல இந்தியாவில் ஒரே ஆண்டில் 1 லட்சம் யூனிட்டுகள் என்ற கார் விற்பனை அளவை எட்ட புதிய புதிய காம்பினேஷன்களில் கைலாக் வேரியன்ட்களை தயார் செய்து வருகிறது ஸ்கோடா. இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் CNG கிட்டையும் கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க கைலாக்கை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது ஸ்கோடா.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சப்-காம்பேக்ட் பிரிவில் கார் வாங்க விரும்புபவர்கள் இந்த கைலாக்கையும் ஒரு முறை பரிசீலனை செய்யலாம். ஒரு டெஸ்ட் டிரைவ் அளவிற்காவது இந்தக் காருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். உண்மையில் ஒரு சிறப்பான காரை குறைவான விலைக்கு பொட்டலம் கட்டி எடுத்து வந்திருக்கிறது ஸ்கோடா. சமீபத்தில் தான் 50,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவையும் இந்த கார் எட்டியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பில் 'அலைமோதது' என எழுத்துப் பிழையுடன் இருந்தது 'அலைமோதுது' என சரியாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications