லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 எஸ்யூவியின் விலை இந்தியாவில் ரூ.34 லட்சம் வரை அதிரடியாக குறைப்பு!
இந்தியாவில் சொகுசு எஸ்யூவி வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு முக்கியமான செய்தி வந்துள்ளது. அதாவது, இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 காரின் விலை ரூ.34 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் விலை ரூ.1 கோடிக்குக் கீழே வந்துள்ளது. இதனால், இந்த சொகுசு எஸ்யூவியை வாங்க விரும்புபவர்களுக்கு முன்பைவிடக் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த விலைக் குறைப்புக்குப் பின்னால் முக்கியமான காரணம் உள்ளது. இதுவரை முழுமையாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது இந்தியாவிலேயே பாகங்களை ஒருங்கிணைத்து காரைத் தயாரிக்கும் நடைமுறைக்கு அந்நிறுவனம் மாறியுள்ளது. இதன் மூலம் விலை குறைந்ததுடன், கூடுதல் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

விலை குறைப்பு விபரம்
இந்தியாவில் உள்ளூரிலேயே அசெம்பிள் செய்யப்படும் டிஃபென்டர் 110 எக்ஸ்-டைனமிக் ஹெச்எஸ்இ (X-Dynamic HSE) மாடல் மூன்று எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலின் விலை முன்பு ரூ.1.13 கோடியாக இருந்தது. தற்போது ரூ.14 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் மாடல்களின் விலை முன்பு ரூ.1.52 கோடியாக இருந்தது. தற்போது இந்த இரண்டு மாடல்களும் ரூ.1.18 கோடிக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு மாடலின் விலையும் ரூ.34 லட்சம் குறைந்துள்ளது. இது டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது. மாநில வரிகள், காப்பீடு மற்றும் பதிவு கட்டணங்கள் சேரும்போது ஆன்ரோடு விலை மாறுபடும்.

மேட் இன் இந்தியா
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் (JLR), டிஃபென்டர் 110 காரை முழுமையாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்குப் பதிலாக, பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது. இதுவே விலை குறைப்புக்கு முக்கியக் காரணமாகும். இந்த நடைமுறை சிகேடி (CKD - Completely Knocked Down) எனப்படுகிறது.
வெளிநாட்டில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட காரை இறக்குமதி செய்வதற்கும், அதன் பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்வதற்கும் வரி உள்ளிட்ட விஷயங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் கிடைக்கும் பலனை வாடிக்கையாளர்களுக்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குகின்றன.
கூடுதல் வசதிகள்
விலையைக் குறைத்திருப்பதுடன், சில கூடுதல் வசதிகளையும் நிறுவனம் சேர்த்து வழங்குகிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் ரூ.6.5 லட்சம் மதிப்பிலான கூடுதல் வசதிகள் இடம்பெறுகின்றன. அடாப்டிவ் ஆஃப்-ரோடு க்ரூஸ் கன்ட்ரோல், அடாப்டிவ் டைனமிக்ஸ் ஏர் சஸ்பென்ஷன், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், காற்று சுத்திகரிப்பான் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன்புற இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இதில் அடங்கும்.
அடுத்து 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ரூ.17 லட்சம் மதிப்பிலான கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், 20 அங்குல சக்கரங்கள், மெரிடியன் சரவுண்ட் ஒலி அமைப்பு, ஹெட்-அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரானிக் ஆக்டிவ் டிஃபரன்ஷியல் மற்றும் கூடுதல் இருக்கை வசதிகள் இதில் அடங்கும்.
டெலிவரி எப்போது?
புதிய விலையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 காருக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி வரும் நவம்பர் 15ந் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு அறிவிப்பானது அனைத்து டிஃபென்டர் மாடல்களுக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. டிஃபென்டர் 90, மற்ற டிஃபென்டர் 110 வேரியண்ட்டுகள் மற்றும் டிஃபென்டர் 110 ஆக்டா (OCTA) ஆகிய மாடல்கள் தொடர்ந்து முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட கார்களாகவே விற்பனை செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் சொகுசு எஸ்யூவி சந்தையில் டிஃபென்டருக்கு தனித்துவமான இடம் உள்ளது. அதன் தோற்றம், ஆஃப்-ரோடு திறன் மற்றும் பிரீமியம் வசதிகள் வாடிக்கையாளர்களைக் கவரும் அம்சங்களாக இருக்கின்றன. தற்போது 2.0 லிட்டர் பெட்ரோல் மாடலின் விலை ரூ.99 லட்சமாகக் குறைந்திருப்பது, இந்த காரை வாங்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக மாறும்.


Click it and Unblock the Notifications


