900 கிமீ ரேஞ்சுடன் கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கே சவால் விடும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி.. வசதிகளும் அட்டகாசம்!
சீனாவைச் சேர்ந்த லீப் மோட்டார் (Leap Motor) நிறுவனம் இந்தியாவில் புதிய B10 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் டிசைனை காப்புரிமைக்காப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் விரைவில் இந்தப் புதிய பிராண்டு கால்பதிக்கவிருக்கிறது. இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய தடைகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் ஸ்டெல்லான்டிஸ் (Stellantis) நிறுவனத்தின் மூலம் லீப் மோட்டார் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
ஜீப், சிட்ரன் ஆகிய பிராண்டுகள் ஸ்டெல்லான்டிஸ் குழுமத்தைச் சேர்ந்தவை தான். அந்த வரிசையில் லீப் மோட்டாரும் இணையவிருக்கிறது. லீப் மோட்டார் தாய்நிறுவனத்தின் 20% பங்குகளை ஸ்டெல்லான்டிஸ் நிறுவனமே கொண்டிருக்கிறது. மேலும் சீனாவிற்கு வெளியே லீப் மோட்டார் நிறுவனத்தின் கார் மாடல்களை விற்பனை செய்ய லீப் மோட்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் அமைக்கப்பட்டு, அதன் 51% பங்குகளை ஸ்டெல்லான்டிலே கொண்டிருக்கிறது.

இந்த செட்டப்பின் மூலமாகவே இந்தியா உட்பட மற்ற நாடுகளில் லீப் மோட்டார் நிறுவனத்தின் கார் மாடல்களை ஸ்டெல்லான்டிஸ் விற்பனை செய்யவுள்ளது. இந்தியாவில் இந்தப் புதிய பிராண்டை அறிமுகம் செய்யவிருப்பதை ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் முன்பே உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. லீப் மோட்டாரின் T03 ஹேட்ச்பேக் அல்லது C10 ப்ரீமியம் எஸ்யூவி ஆகிய இரண்டு மாடல்களில் ஏதாவது ஒன்றே முதலில் இந்தியாவில் வெளியிடப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
C10 எஸ்யூவி மாடலின் டிசைன் இந்தியாவில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் T03-யின் டிசைன் காப்புரிமைக்காகப் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் புதிதாக B10 எஸ்யூவியின் டிசைன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் எந்தக் காரை முதலில் ஸ்டெல்லான்டிஸ் இந்தியாவில் வெளியிடும் என்ற குழப்பம் எழுந்திருக்கிறது. ஸ்டெல்லான்டிஸ் என்ன முடிவெடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் B10 எஸ்யூவி மாடலின் சிறப்பம்சங்களை நாம் பார்த்து விடலாம். 4,515 மிமீ நீளத்துடன் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிட்-சைஸ் எஸ்யூவிக்களை விட சற்று பெரிதாக இருக்கிறது இந்த B10. அளவில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார் மாடல்களுக்கும், மஹிந்திரா XUV 7XO, டாடா ஹேரியர் ஆகிய கார் மாடல்களுக்கும் இடைப்பட்ட அளவில் இருக்கிறது புதிய லீப் மோட்டார் B10.
ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், கனெக்டட் LED பின்பக்க விளக்குகள் ஆகிய டிசைன் அம்சங்களுடன் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலான, மினிமலிஸ்டிக்கான மற்றும் ப்ரீமியமான எஸ்யூவிக்கான டிசைனைக் கொண்டுள்ளது புதிய B10. எலெக்ட்ரிக் டெயில்கேட், வைப்பர் மற்றும் வாஷர், பார்க்கிங் சென்சார்கள் ஆகிய மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்தக் காரில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹைபிரிட் என்றாலும் ரேஞ்சு எக்ஸ்டெண்டர் வகையைச் சேர்ந்தவை தான். அப்படியென்றால், இந்த வகையான ஹைபிரிட் கார்களில் இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்கள், காரை நேரடியாக இயக்கப் பயன்படாது. மாறாக, காரில் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்ய ஒரு ஜெனரேட்டர் போலவே பயன்படும். காரின் ரேஞ்சை உயர்த்த பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுவதால் இவை ரேஞ்சு எக்ஸ்டெண்டர் ஹைபிரிட் இவி என அழைக்கப்படுகின்றன.
B10 ஹைபிரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 18.8 kWh பேட்டரி பேக், 218 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஆகியவை அடங்கிய பவர்ட்ரெயின் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் டேங்குடன் சேர்த்து இந்த ஹைபிரிட் கார் 900 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கிறது.
B10 எலெக்ட்ரிக் காரில் 67.1 kWh LFP பேட்டரி பேக் மற்றும் 218 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முழுமையான எலெக்ட்ரிக் காரானது 434 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 171 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் மாடல், மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 8 நொடிகளில் எட்டுகிறது.
இதன் பேட்டரி பேக்கை 168 kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜ் மூலம், 30-80% வரை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது லீப் மோட்டார். இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில், இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் வின்ஃபாஸ்ட் VF7, டாடா ஹேரியர் EV, BYD அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் அயானிக் 5 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும்.
இதன் ரேஞ்சு எக்ஸ்டெண்டர் ஹைபிரிட் கார்களுக்கு இந்தியாவில் தற்போது நேரடிப் போட்டி இல்லை. மஹிந்திரா நிறுவனமே இந்தியாவில் ரேஞ்சு எக்ஸ்டெண்டர் ஹைபிரிட் கார்களை உருவாக்குவதில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. லீப் மோட்டாரின் எலெக்ட்ரிக் கார்களை CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வது குறித்து ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நுழைய வேண்டும் என்பது நிறைய சீன நிறுவனங்களின் எண்ணமாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் சீனாவே தற்போது முன்னணியில் இருக்கிறது. உலகளவில் பல்வேறு நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து அதன் தொழில்நுட்பத்தையும், எலெக்ட்ரிக் கார்களையும் பிற நாடுகளில் இறக்குமதி செய்யத் திட்டமிட்டு வருகின்றன.
அந்த வகையில் லீப் மோட்டாருடன் இணைந்திருக்கிறது ஸ்டெல்லான்டிஸ். CKD முறையில் என்னும் போது மிகவும் குறைவான விலையில் இதன் எலெக்ட்ரிக் கார் மாடல் விற்பனையை நாம் எதிர்பார்க்க முடியாது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், வசதிகள் என்று வரும் போது சீன நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் மேம்பட்டவையாகவே இருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








