8 வருஷத்துக்கு செலவு வைக்காத லெக்ஸஸ் கார்கள்! வாரண்டி இந்தியாவில் மேலும் நீட்டிப்பு!
லெக்ஸஸ் (Lexus) நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களுக்கு 8 வருடங்களுக்கான உத்தரவாதத்தை (Warranty) அறிவித்துள்ளது. இந்தியாவில் எந்தவொரு சொகுசு கார் நிறுவனமும் அதன் கார்களுக்கு இத்தனை வருட உத்தரவாதத்தை வழங்காத நிலையில், முதல் நிறுவனமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு லெக்ஸஸ் நிறுவனம் ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லெக்ஸஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்தாலும், இந்தியாவில் ஏனோ பெரிய அளவிற்கு இல்லை. மெர்சிடிஸ் (Mercedes), பி.எம்.டபிள்யூ (BMW) கார்களின் விலையில் தான் லெக்ஸஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், அவற்றிற்கு இணையானதாக இவற்றின் விற்பனை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை எல்லாம் கருத்தில் கொண்டே, இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, அதன் கார்களுக்கான உத்தரவாதத்தை லெக்ஸஸ் அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து லெக்ஸஸ் கார்களுக்கும் 8 வருடங்களுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டு வருகிறது.
முழு 8 வருடங்களுக்கும் உத்தரவாதத்தை பெற வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் அந்த 8 வருடங்களில் 2 லட்சம் கிமீ-க்குள் காரை ஓட்ட வேண்டும். 2 லட்சம் கிமீ-ஐ தாண்டிவிட்டீர்கள் என்றால் அப்போதே காருக்கான உத்தரவாதம் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறுதான் எல்லா கார் நிறுவனங்களும் தங்களது கார்களுக்கான உத்தரவாதங்களை வழங்குகின்றன.

இருப்பினும், இந்தியாவில் லக்சரி கார் பிராண்ட்களில் இந்த அளவிற்கு விரிவான உத்தரவாதத்தை வழங்கும் முதல் நிறுவனமாக லெக்ஸஸ் உருவெடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த லெக்ஸஸ் நிறுவனம், ஜப்பானிய ஒமோடெனாஷி என்கிற தத்துவத்தில் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த தத்துவத்தின் நோக்கம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தான் முக்கியம் என்பதாகும்.
இதன்படி, இந்தியாவில் கார்களுக்கான உத்தரவாதத்தை 8 வருடங்களாக அதிகரித்து இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹிகாரு ஐகேயுசி, "லெக்ஸஸில் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எங்கள் வாடிக்கயாளர்களுக்குச் சாத்தியமான மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குவதையே அடிப்படையாக கொண்டுள்ளது.
இந்தியாவில் நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு வாகனத்தின் மீதும் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் நேரடி வெளிப்பாடாகவே, எங்கள் வாகனங்களுக்கான உத்தரவாதக் காலத்தை நீட்டிக்கும் இந்த நடவடிக்கை அமைகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் லெக்ஸஸ் காரை முழுமையான மன நிம்மதியுடன் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
தங்கள் வாகனத்தின் உரிமையாளர் பயணக்காலம் முழுவதும், எங்கள் தயாரிப்புகளுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம் என்கிற நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இந்த மேம்பாடு ஆனது தொடர் முன்னேற்றத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சிச் செயல்படவும், இந்திய ஆடம்பர கார் சந்தையில் புதிய தரநிலைகளை உருவாக்கவும் எங்களுக்குத் துணை நிற்கிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனது பிராண்ட் கார்களை வாங்குவோருக்கு மிக சிறப்பான மற்றும் நீண்ட காலத்திற்கான வாடிக்கையாளர்கள் அனுபவத்தை வழங்க வேண்டும் என லெக்ஸஸ் விரும்புவதை இந்த உத்தரவாதம் நீட்டிப்பு மூலம் அறிய முடிகிறது. மேலும், தனது தயாரிப்புகளின் தரம், பொறியியல் ஸ்டாண்டர்ட்கள் மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மையில் லெக்ஸஸ் வைத்திருக்கும் நம்பிக்கையையும் இது வெளிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications