மாருதி எர்டிகாவை விட நீளம் அதிகம், ஆனா 5 பேருக்கு மேல் போக முடியாது! ஒருவழியா இந்தியாவுக்கு கொண்டுவந்துட்டாங்க
லெக்ஸஸ் இந்தியா (Lexus India) நிறுவனம் அதன் புதிய இ.எஸ் (ES) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.89,99,000 என்கிற அதிகப்படியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் லெக்ஸஸ் கார் என்பதினாலேயே இ.எஸ் காரின் அறிமுகம் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் என்ன? இதன் ரேஞ்ச் என்ன? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
சொகுசான பயணத்தை வழங்குவதினாலேயே உலகளவில் லெக்ஸஸ் கார்களுக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அதிகமான விலையின் காரணமாக அவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பல வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அட்வான்ஸான வசதிகள் நிறைந்த கேபினால் லெக்ஸஸ் கார் ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என கனவோடு இருப்பவர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.

இத்தகைய லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் ஒருவழியாக அதன் முதல் எலெக்ட்ரிக் காரை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 500இ (500e) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இந்த இ.எஸ் காரை எதிர்காலத்தில் ஹைப்ரீட் (Hybrid) வெர்சனிலும் இந்தியாவில் அறிமுகப்படுத்த லெக்ஸஸ் திட்டமிட்டுள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய லெக்ஸஸ் இஎஸ் எலெக்ட்ரிக் காரில் 74.69kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் ஆற்றல், காரில் வழங்கப்பட்டுள்ள இரு எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு செல்கிறது. இந்த டபுள் எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப் அதிகப்பட்சமாக 338 பிஎச்பி இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளன.

இவற்றின் உதவியுடன் 0இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 580கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது லெக்ஸஸ் நிறுவனம். தோற்றத்தை பொறுத்தவரையில், லெக்ஸஸ் நிறுவனத்தின் இன்றைய கால மேம்பட்ட ஸ்டைலை புதிய இஎஸ் பெற்றுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் L-வடிவில் இரட்டை எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமான ஹெட்லேம்ப்கள் முன்பக்க பம்பருக்கு கீழே இடம்பெற்றுள்ளன. அளவில் பெரியதான 21 இன்ச் அலாய் சக்கரங்களில் இயங்கும் இந்த புதிய லெக்ஸஸ் காரில் செமி-ஃபிளஷ் கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள 'LEXUS' என்கிற எழுத்துகள் ஒளிரக்கூடியவைகளாக உள்ளன. புதிய இஎஸ் எலெக்ட்ரிக் காருக்கு உள்ளே டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் 14 இன்ச்சில் இன்ஃபோடெயின்மென்ட் தொடுத்திரை என இரு திரைகள் அருகருகே அமைந்துள்ளன. இதில், இன்ஃபோடெயின்மென்ட் தொடுத்திரை ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்கள் உடன் வயர்லெஸ் ஆக இணைக்கக்கூடியதாக உள்ளது.
இந்த புதிய லெக்ஸஸ் எலெக்ட்ரிக் காரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், லெவல்-2 அடாஸ் (ADAS), எலெக்ட்ரிக் சன்ரூஃப், 17-ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். காரின் பின்பக்கத்தை பார்க்க, காருக்கு உள்ளே வழங்கப்பட்டுள்ள IRVM ஆனது கேமரா மூலம் செயல்படக்கூடிய டிஜிட்டல் IRVM ஆக உள்ளது. மேலும், கதவுகள் மென்மையாக மூடக்கூடியவைகளாகவும், மொபைல் போன்களை சார்ஜ் செய்ய இரு வயர்லெஸ் சார்ஜிங் பேட்களும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களில், எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பல கார் கம்பெனிகள் இறங்கியுள்ளன. அந்த வகையில் பார்த்தால் லெக்ஸஸ் கொஞ்சம் தாமதமாகவே வந்துள்ளது. இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களை வாங்கவே நிறைய பேர் விரும்பும் நிலையில், முதல் எலெக்ட்ரிக் காரை தாழ்வான தோற்றம் கொண்ட லக்சரி செடான் காராக லெக்ஸஸ் களமிறக்கியுள்ளது. ஆதலால், புதிய இஎஸ் இந்திய மார்க்கெட்டில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








