5 லட்சம் ரூபாய் விலைக்குள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி கொண்ட கார்கள்
இப்போது மேனுவல் கியர்பாக்ஸை விட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை நிறைய வாடிக்கையாளர்கள் விரும்பத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள். இதற்கு முக்கியக் காரணம் வாகன நெரிசல். பம்பர்-டூ-பம்பர் ட்ராஃபிக்கில் மேனுவல் கியர்பாக்ஸ் காரை வைத்திருந்தீர்கள் என்றால் அவ்வளவு தான். நீங்கள் இருக்கும் இடத்தில் அதிக வாகன நெரிசல் இல்லாமல் இருந்தாலும், சில நேரங்களில் நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் கடும் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
முக்கியமாக பெரிதாக யோசிக்காமல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதும் அவற்றை நிறைய வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணமாக இருக்கிறது. தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லாத கார்கள் மிகவும் குறைவு. அனைத்து கார்களிலும் ஏதோவொரு வகையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை நிறுவனங்கள் கொடுத்துவிடுகின்றன.

இந்தியாவில் தற்போது ஒட்டுமொத்த கார் விற்பனையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் பங்கு 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020-ல் இது 16 சதவீதமாக இருந்தது. பெருநகரங்களில் இந்த விகிதம் தற்போது 33 சதவீதமாக உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டாம் என்று சொல்வற்கு ஒரு முக்கியமான காரணம் என்றால் அது சற்று கூடுதல் விலை தான். எனவே 5 லட்சம் ரூபாய் விலைக்குள் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை இங்கே பார்க்கலாம்.
மாருதி எஸ்-பிரஸ்ஸோ:
இந்தப் பட்டியலில் மூன்று கார்கள் உள்ளன. முதலாவதாக மாருதி எஸ்-பிரஸ்ஸோ உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான கார் எஸ்-பிரஸ்ஸோ தான். எனவே குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டும் இந்தக் காரிலேயே உள்ளது. 4.75 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி எஸ்-பிரஸ்ஸோ காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டை நாம் வாங்கலாம்.

எஸ்-பிரஸ்ஸோவின் உயர்நிலை வேரியன்ட்களான VXi(O) மற்றும் VXi(O) பிளஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து லட்சம் ரூபாய் விலைக்குள் இருக்கும் ஒரே வேரியன்ட் VXi(O) தான். VXi(O) பிளஸ் ஆட்டோமேட்டிக் வேரியன்டானது 5.25 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெனோ க்விட்:
இரண்டாவது இடத்தில் ரெனோ க்விட் உள்ளது. இந்தக் காரை சமீபத்தில் தான் அப்டேட் செய்தது ரெனோ. எவல்யூஷன் மற்றும் கிளைம்பர் என இரண்டு வேரியன்ட்களாக மட்டுமே புதிய க்விட் விற்பனை செய்யப்படும் நிலையில், இரண்டிலுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எவல்யூஷன் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் மட்டும் தான் ஐந்து லட்சம் ரூபாய்க்கு உள்ளாக, 4.90 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.
க்விட் காரின் மற்றொரு வேரியன்டான கிளைம்பரின் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் 5.61 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. க்விட்டின் இரண்டு வேரியன்ட்களின் மேனுவல் வெர்ஷன்களை விட ஆட்டோமேட்டிக் வெர்ஷன்கள் 26,000 ரூபாய் முதல் 46,000 ரூபாய் வரை கூடுதல் விலையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி ஆல்டோ K10:
மூன்றாவது இடத்தில் மற்றொரு மாருதியின் விலை குறைவான காரான ஆல்டோ K10 உள்ளது. மேனுவல் வேரியன்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் விலை குறைவான இரண்டாவது காராக ஆல்டோ K10 இருக்கும். ஆனால் எஸ்-பிரஸ்ஸோவைப் போலவே ஆல்டோ K10 காரிலும் உயர்நிலை வேரியன்ட்களிலேயே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டிருப்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆல்டோ K10 காரின் VXi(O) வேரியன்டிலேயே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படத் தொடங்குகிறது. இதனை 4.95 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். மற்றொரு VXi(O) ஆட்டோமேட்டிக் வேரியன்டானது 5.45 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. மாருதியின் இந்த நான்கு ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களும், மேனுவல் வெர்ஷன்களை விட 45,000 ரூபாய் வரை கூடுதல் விலையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ K10 கார்களின் அடிப்படை வேரியன்ட்களிலேயே மாருதி நிறுவனம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுக்கத் தொடங்கினால் இன்னும் குறைவான விலையிலேயே அதனை விற்பனை செய்ய முடியும். ஆனால் சில காரணங்களினால் உயர்நிலை வேரியன்ட்களில் மட்டுமே அதனை மாருதி கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications