மிகவும் கம்மி விலையில் வென்டிலேட்டட் சீட்கள் வசதியைக் கொண்ட கார்கள் இவை தான்
இந்தியாவில் பயன்பாட்டிற்குத் தேவையில்லாத ஒரு வசதி என்றால் அது சன்ரூஃப் தான். இந்திய வானிலைக்கும் சன்ரூஃபை எப்போதும் நாம் மூடித் தான் வைத்திருக்க வேண்டும். ஆனாலும் மிகவும் விலை குறைவான நிறைய கார்களில் இப்போது சன்ரூஃப் வசதியை நிறுவனங்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர் விருப்பம் தான்.
ஆனால், இந்தியாவில் பயன்படக்கூடிய மிகவும் பிராக்டிகலான ஒரு வசதியை இன்னும் குறைவான விலை கொண்ட கார்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொண்டு வரவில்லை. அது வேறெதுவும் இல்லை, வென்டிலேஷன் சீட்கள் (Ventilation Seats), அதாவது காற்றோட்டமான சீட்கள் வசதி தான். இந்திய காலநிலைக்கு நீண்டதூரப் பயணங்களின் போது நாம் அமரும் இடம் சூடாகாமல் இருக்க இந்த வசதி உதவும்.

நிறைய கார்களில் இந்த வசதி இப்போது கொடுக்கப்பட்டு வந்தாலும், டாப் எண்டு வேரியன்ட்களில் மட்டும், அதுவும் முன் வரிசை இருக்கைளில் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. கையளவு கார்களில் மாடல்களில் மட்டுமே இரண்டாம் வரிசையிலும் வென்டிலேஷன் சீட்கள் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இப்போது குறைவான விலையில் இந்த வசதி கொண்ட கார்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
முன்வரிசை இருக்கையில் மட்டும் வென்டிலேஷன் சீட் வசதி கொண்ட கார்கள்:
மிகவும் குறைவான விலையில் வென்டிலேஷன் வசதி கொண்ட முன்வரிசை இருக்கைகள் கொண்ட காரை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே தேர்வு ரெனோ கைகர் (Renault Kiger) சப்-காம்பேக் எஸ்யூவி தான். 8.42 லட்சம் ரூபாய் விலை கொண்ட வேரியன்டில் இருந்தே வென்டிலேஷன் வசதி இந்தக் காரில் வழங்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் ரூபாய் விலைக்குகள் இந்த வசதியைக் கொண்டிருக்கும் ஒரே காரும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக கியா சோனெட் (Kia Sonet) இருக்கிறது. 11.65 லட்சம் ரூபாய் விலை கொண்ட HTX ஆட்டோமேட்டிக் வேரியன்டி இருந்து முன் வரிசை இருக்கையில் வென்டிலேஷன் வசதி சோனெட் சப்-காம்பேக்ட் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டு வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸுடன் வென்டிலேஷன் வசதி கொண்ட காம்போ சோனெட் லைன்-அப்பில் இல்லை என்பது கொசுறுத் தகவல்.
ஸ்கோடாவின் விலை குறைவான கைலாக் (Kylaq) சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் டாப் எண்டு பிரஸ்டீஜ் மற்றும் பிரஸ்டீஜ் பிளஸ் வேரியன்ட்களில் மட்டும் வென்டிலேஷன் செய்யப்பட்ட சீட்கள் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. 11.75 லட்சம் ரூபாய் விலையில் இருந்து தொடங்குகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு.
அடுத்தாக ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) சப்-காம்பேக்ட் எஸ்யூவியின், உயர்நிலை HX8 வேரியன்டில் இருந்து வென்டிலேட்டட் சீட்கள் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மேனுவல் வேரியன்டானது 11.91 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. வென்யூ N-லைன் மாடலில் N10 (ஆட்டோமேட்டிக்) வேரியன்டில் மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 15.40 லட்சம் ரூபாய் விலையைக் கொண்டுள்ளது.
இறுதியாக கியா சிராஸ் (Kia Syros) சப்-காம்பேக்ட் எஸ்யூவி இருக்கிறது. 12.10 லட்சம் ரூபாய் விலை கொண்ட HTX வேரியன்டில் தொடங்கி இந்தக் காரில் வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. கியா நிறுவனம் இந்தியாவில் இரண்டு சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களை விற்பனை செய்து வருகிறது. ஒன்று சோனெட், மற்றொன்று இந்த சிராஸ். இரண்டிலுமே குறைவான விலையில் வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் வசதியை அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.
இரண்டாம் வரிசை இருக்கையில் வென்டிலேஷன் வசதியுடன் குறைவான விலை கொண்ட கார்கள்:
அடுத்ததாக இரண்டாம் வரிசை இருக்கையில் வென்டிலேஷன் வசதியுடன் குறைவான விலை கொண்ட கார்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மேலே விட்ட இடத்தில் இருந்தே இது தொடங்குகிறது. ஆம் இரண்டாம் வரிசை இருக்கையிலும் வென்டிலேஷன் வசதி கொடுக்கப்பட்டிருக்கும் விலை குறைவான மற்றும் ஒரே சப்-காம்பேக்ட் எஸ்யூவி கியா சிராஸ் தான். 14.56 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கும் HTX+ வேரியன்டில் இருந்து இந்த வசதியைக் கொடுக்கிறது கியா, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டும்.
அடுத்ததாக ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar). டாப் எண்டு சிக்னேச்சர் வேரியன்டில் மட்டும் இந்த வசதியைக் கொடுத்திருக்கிறது. பெட்ரோல் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன், இரண்டாம் வரிசை இருக்கை வென்டிலேஷன் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே 21.06 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையே கொண்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனமானது டாப் எண்டான XUV 7XO எஸ்யூவியின் டாப் எண்டு AX7 L வேரியன்டில் மட்டும் இரண்டாம் வரிசை இருக்கையிலும் வென்டிலேஷன் வசதியை வழங்கி வருகிறது. 22.47 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த வேரியன்டின் விலை தொடங்குகிறது. பெட்ரோல், டீசல், 6 சீட்டர், 7 சீட்டர், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என விதவிதமான காம்பினேஷன்களில் வாங்கலாம்.
XUV 7XO-விற்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா சஃபாரியிலும் இரண்டாம் வரிசையில் வென்டிலேட்டட் சீட்கள் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலை அக்காம்ப்ளிஷ்டு X+ வேரியன்டில் இருந்து இந்த வசதி கொடுக்கப்படத் தொடங்குகிறது. 22.83 லட்சம் ரூபாய் விலையில் இருந்து இந்த வசதி கொண்ட வேரியன்ட் தொடங்குகிறது.
இறுதியாக XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி காரிலும் இரண்டாம் வரிசை இருக்கையில் இந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. 27.35 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி இரண்டாம் வரிசையில் வென்டிலேட்டட் சீட்கள் வசதியுடன் கூடிய XEV 9S எலெக்ட்ரிக் காரை நாம் வாங்கலாம். எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களில் இந்த வசதியைக் கொண்டிருக்கும் ஒரே கார் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்றோட்டமான சீட்கள் வசதி கேட்பதற்கு மிகவும் ஃபேன்ஸியாக இருக்காது. ஆனால் நீண்ட தூரம் காரிலேயே அமர்ந்திருக்க வேண்டிய நேரத்தில் இந்த வசதி ஒரு வரப்பிரசாதமாகத் தோன்றும். சன்ரூஃபிற்குப் பதிலாக இந்த வசதியை கார்களில் கொடுக்கப்பதைக் குறித்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆலோசிக்கலாம். ஆனால் இறுதியில் அனைத்தும் வாடிக்கையாளர்கள் கைகளில் தான் இருக்கிறது. நிறைய வாடிக்கயாளர்கள் இந்த வசதியைக் குறிப்பிட்டுக் கேட்டால் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கிவிடும்.
ஆனால் முன்பை விட இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் இந்த வசதியினை விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். முன்பை விட ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ப்ரீமியம் கார்களில் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் வசதியினைக் கட்டாயமாகக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. விரைவில் பட்ஜெட் கார்களிலும் அதிகமாகக் கொடுக்கத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம், பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications